full screen background image

 க / பெ.ரணசிங்கம் – சினிமா விமர்சனம்

 க / பெ.ரணசிங்கம் – சினிமா விமர்சனம்

திரைப்பட விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்து, ‘கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ்’ சார்பில், நயன்தாரா நடித்த ‘அறம், ஐரா’, மற்றும் பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்தவரும், அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படத்தை தமிழகத்தில் விநியோகித்தவருமான தயாரிப்பாளர் கே.ஜே.ராஜேஷ், தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘ஹீரோ’ படத்தை தயாரித்து வரும் நிலையில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக ‘க/பெ ரணசிங்கம்’ என்ற இந்தப் படத்தைத் தயாரித்து அளித்திருக்கிறார்.

இந்தப் படத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.  மேலும் வேல ராமமூர்த்தி, ‘பூ’ ராம், பவானி, நமோ நாராயணா, ரங்கராஜ் பாண்டே, அபிஷேக் மற்றும் பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – என்.ஏகாம்பரம், இசை – ஜிப்ரான், பாடல்கள் – வைரமுத்து, படத் தொகுப்பு – சிவா நந்தீஸ்வரன், கலை இயக்கம் – லால்குடி என்.இளையராஜா, சண்டை இயக்கம் – பீட்டர் ஹெயின்.

‘அடங்காதே’ படத்தின் இயக்குநரான சண்முகம் முத்துசாமி இப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

இயக்குநர் செல்வாவிடம் துணை இயக்குநராக தனது திரைப் பயணத்தை துவங்கி, ‘அறம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் இணை-துணை இயக்குநராக பணியாற்றிய பி.விருமாண்டி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த நடிகர் பெரிய கருப்பு தேவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய முதல் படத்திலேயே இதுவரையிலும் யாரும் தொடாத ஒரு கதையைத் தொட்டிருக்கும் இயக்குநர் விருமாண்டியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்த மண்ணில் எடுக்கப்படாத பல கதைகள் இன்னமும் அமிழ்ந்திருக்கின்றன என்பதை வளரும் இயக்குநர்களுக்கு இந்தக் கதைத் தேர்வு மூலமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விருமாண்டி.

வெளிநாட்டில் இறந்து போன தன் கணவனின் உடலை பெற வேண்டி ஒரு இந்தியப் பெண்.. தமிழ்ப் பெண்.. அதிகார வர்க்கத்திடம் மண்டியிட்டு, மன்றாடி.. கெஞ்சிக் கூத்தாடி.. எதுவுமே பலனளிக்காதபோது.. இந்த நாட்டையே மர்ம தேசமாக ஆண்டு வரும் தந்திர பூமியான டெல்லிக்குப் படையெடுத்து அங்கேயிருப்பவர்களை ஒரே நாளில் நடுநடுங்க வைத்து தனது கணவரின் உடலை மீட்டெடுக்கிறாள். அது எப்படி என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

தமிழகம் மாநிலமாக உருவெடுத்த காலத்திலிருந்தே தண்ணீர் பஞ்சத்திற்கு என்றே பெயர் பெற்றது ராமநாதபுரம் மாவட்டம். புயல், மழை, கடல் என்று நீருக்கான ஆதாரங்கள் அனைத்தும் அந்த மாவட்டத்தில் இருந்தாலும் குடிநீருக்காக இன்றளவும் அந்த மாவட்ட மக்கள் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் நீரோடியாக.. நீரோட்டம் பார்த்துக் கொடுக்கும் குடும்பத் தொழிலை மேற்கொண்டு வருகிறார் நாயகன் ‘ரணசிங்கம்’ என்ற விஜய் சேதுபதி. பொட்டல் காட்டில் விவசாயத்தை மேற்கொள்ள நினைத்து ‘நீரோட்டம்’ பார்க்க அழைக்கப்பட்டு போன இடத்தில் அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாய் நிற்கும் ‘அரியநாச்சி’ என்னும் ஐஸ்வர்யா ராஜேஷின் அறிமுகம் கிடைக்கிறது.

பழம் பெரும் தமிழர்களின் நாகரீக உலகத்தின் ஒரு அங்கமாக.. கற்பனைக்கும் எட்டாத அறிவியலை… பழங்குடியினத்தில் இருந்து பெரும் வளர்ச்சி பெற்ற பின்பும் நமது தமிழ்க் கலாச்சாரத்தின் அறிவாக இருக்கும் அந்த நீரோட்டம் பார்க்கும் வித்தையை கேலி, கிண்டல் செய்யும் அரியநாச்சிக்கு சில உண்மைகளை எடுத்துரைத்து புரிய வைக்கிறான் ரணசிங்கம்.

இந்த புரிய வைத்ததலே அவர்களுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்த அது திருமணத்தில் போய் முடிகிறது. ஊருக்குள் ஒரு பிரச்சினை என்றால் முணுக்கென்று முன்னால் போய் நிற்கும் ரணசிங்கம், கல்யாணத்திற்குப் பின்பும் வேலைக்குப் போகாமல் வீட்டில் சும்மா இருப்பதைக் கண்டு மனம் வெதும்பிய நாயகி அவனை “வெளிநாட்டுக்குப் போயாச்சும் காசு சம்பாதித்து முதலில் சொந்த வீடு கட்டு…” என்று தூண்டிவிடுகிறாள்.

இந்தத் தூண்டுதலால் உந்தப்பட்டு துபாய் செல்கிறான் ரணசிங்கம். ஆனால் போன இடத்தில் தான் வேலை பார்க்கும் எண்ணெய் நிறுவனத்தில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி உயிரிழக்கிறான் ரணசிங்கம். முதலில் ‘கலவரம்.. துப்பாக்கிச் சூட்டில் மரணம்’ என்று வந்த செய்தி.. பின்பு ‘விபத்தில் மரணம்’ என்ற உண்மையையும் சொல்கிறது.

இதன் பின்பு, “தனது இறந்தபோன கணவனுக்காக அரசுகள் கொடுக்கும் பிச்சைக் காசு வேண்டாம்.. நிவாரண உதவிகள் வேண்டாம்.. என் கணவரின் உடலை மட்டும் வாங்கிக் கொடுங்கள்…” என்று அரசு அமைப்புகளில் கெஞ்சத் துவங்குகிறாள் அரியநாச்சி.

வி.ஏ.ஓ.வில் துவங்கி கலெக்டர், எம்.எல்.ஏ., அமைச்சர்கள்வரையிலும் அவளுடைய அலைச்சலும், கோரிக்கையும், விண்ணப்பமும் போய்ச் சேர்ந்தும் அவளுடைய கணவனின் உடல் மட்டும் பத்து மாதங்களாகியும் அவளுக்குக் கிடைக்கவில்லை.

சென்னைக்குச் சென்று முதலமைச்சரை பார்க்கப் போராடுகிறாள். காவல்துறையினரால் வீசி எறியப்படுகிறாள். மத்திய பாதுகாப்புத் துறையின் பெண் அமைச்சரின் கான்வாயை மறித்து தனது கோரிக்கையை அவரிடத்தில் சொல்கிறார். அவரும் சக அமைச்சருக்கு டிவிட்டரில் செய்தியைப் போட்டு டேக் செய்துவிட்டு தனது கடமையை ஆற்றிவிட்ட திருப்தியோடு செல்கிறார்.

இனி இங்கே வேலைக்கு ஆகாது என்பதால் டெல்லிக்குச் செல்கிறாள் அரியநாச்சி. பிரதமர் கலந்து கொள்ளும் விழாவின்போது நடுவில் புகுந்து தற்கொலைக்கு முயல.. இப்போதுதான் பிரதமருக்கே இந்த விஷயம் தெரிய வருகிறது.

நாடு முழுவதும் இந்த விஷயம் எக்ஸ்போஸ் செய்யப்பட்டுவிட்டதால் இதில் அரசியல் பார்க்கும் பிரதமர்.. ரணசிங்கத்தின் உடல் இந்தியாவுக்குள் வரும்வரையிலும் தான் அதே இடத்தில் அமர்ந்திருக்கப் போவதாகச் சொல்ல..

இப்போதுதான் ஆளும் அதிகார வர்க்கம் அசைந்து கொடுக்கிறது. பிரதமரின் ஒருவேளை உண்ணாவிரத்தையே பார்க்க சகிக்காமல் உடனுக்குடன் ரணசிங்கத்தின் உடல் தாங்கிய விமானம் இராமநாதபுரம் வந்து சேர்கிறது.

ஊரே ரணசிங்கத்தின் உடல் என்று நினைத்து இறுதியஞ்சலி செலுத்தி எரியூட்ட.. அரியநாச்சிக்கு மட்டுமே தெரிகிறது அது ரணசிங்கம் இல்லை என்று. ஏனெனில் ரணசிங்கத்தின் உடலே கிடைக்கவில்லை. கிடைத்தால்தானே கொண்டு வருவதற்கு..?!

ஆனால் ஊரே நம்பிவிட்டது.. ஒரு வருடம் கழித்து வந்த உடல்.. போகட்டும்.. என்று சொல்லி அரியநாச்சி இந்தியாவையே மன்னித்து விடுவதுதான் இந்தப் படம் சொல்லும் கதை.

முதற்கண் விஜய் சேதுபதிக்கு ஒரு மிகப் பெரிய நன்றி. நாயக பிம்பத்தில் ஒரு சதவிகிதம் குறைந்தால்கூட கேமிரா முன்பு நிற்க மறுக்கும் நாயகர்கள் நிரம்பிய இந்த தமிழ்த் திரையுலகத்தில்… நாயகியை முன்னிறுத்தும் இது போன்ற படங்களில் நடிப்பதற்கு மிகுந்த தைரியமும், விட்டுக் கொடுக்கும் மனோபாவமும் வேண்டும். அது விஜய் சேதுபதிக்கு நிறையவே இருக்கிறது. அப்படி அவருடைய ஒரு விட்டுக் கொடுத்தலில்தான் இந்தப் படம் தயாராகியிருக்கிறது.

பொதுவாக இயல்பாகவே பேசி நடிக்கும் விஜய் சேதுபதிக்கு இந்தப் படத்தின் கதாபாத்திரமும் அந்தத் தன்மையையே கொடுத்திருக்கிறது. கலெக்டர் பாண்டேவின் தேன் தடவிய வார்த்தைகளுக்கு பதில் சொல்லும்விதமாக விஜய் சேதுபதி பேசும் வசனங்களும், வசன டெலிவரியும்.. அவருடைய உடல் மொழியும் அலட்சியத்தைக் காட்டாமல் உண்மைத் தன்மையைக் காட்டுகிறது. “போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது…” என்று சொல்லி கூட்டத்தைக் கலைத்து அனுப்பும் காட்சியில் துளிகூட நாடகத்தன்மை இல்லை.

இவர் போன்ற நாயகர்கள் மரத்தைச் சுற்றி வந்து ஆடி.. களைத்துப் போய் நாயகியுடன் சோர்ந்து விழுவதெல்லாம் நகைச்சுவையாகிவிடும் அபாயம் இருப்பதால் விஜய் சேதுபதி நல்லவேளையாக அந்தக் கொடுமையையெல்லாம் செய்வதில்லை.

இந்தப் படத்தின் காதல் அரும்பும் காட்சிகளும்.. காதல் வழியும் காட்சிகளும்.. முத்தாய்ப்பாக அந்த முதல் இரவு காட்சி பெண்களுக்கும் மிகவும் பிடித்தமானதாகத்தான் இருக்கும்.

 ‘அரிய நாச்சி’யாக அட்டகாசம் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தான் அறிமுகமாகும் முதல் காட்சியில் இருந்து கடைசியாக ரணசிங்கத்தின் புகைப்படத்தின் முன்பு அமர்ந்து “எவனோ ஒருத்தன் உடம்பை அனுப்பி ஏமாத்திட்டானுக தேவடியா பசங்க” என்று கொப்பளிப்பதுவரையிலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார் ஐஸ்வர்யா.

இப்போதைய இளைய தலைமுறையினரிடம் இருக்கும் வேகத்தில் காதலுக்கெல்லாம் மன்றாடல் இல்லாமல்.. உணர்த்துவதில் துவங்கி.. கல்யாணம் முடிந்து கணவன் குடும்பம் இருக்கும் நிலையை உணர்ந்து அதற்கேற்றாற்போல் கணவனை மாற்றியமைக்க முயலும் ஒரு அறிவான மனைவியாக தன்னை காட்டுகிறார் ஐஸ்வர்யா.

ரேஷன் கார்டுக்கு கணக்கெடுக்க வரும் ஆட்களிடம் சீறித் தள்ளும் அந்தக் கோபமும், பெண்ணை ஏமாற்றி கல்யாணம் செய்திருக்கும் குடும்பத்தினரை லெப்ட் அண்ட் ரைட் கொடுப்பதிலும்.. நம்பிய அனைவரும் கைவிட்ட போதிலும் தன்னுடைய தன்னம்பிக்கையை கைவிடாமல் டெல்லிவரை சென்று ‘டெல்லி பாதுஷா’விடமே நேருக்கு நேர் மோதும் அந்தத் தைரியப் பெண்மணியாக அரியநாச்சியாரை நம் மனதில் பதிய வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா.

படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் அவர்கள் பக்க நியாயத்தையும் எடுத்துரைத்திருக்கிறார் இயக்குநர். மாவட்ட ஆட்சித் தலைவர் பாண்டே.. மிக, மிக யதார்த்தமாக இந்தப் பிரச்சினையை கையாள்வதாகச் சொன்னாலும், அவர் நினைத்தால் ஒரே நிமிடத்தில் அரியநாயகியின் மனைவிக்கான சான்றிதழை பெற்றுத் தந்திருக்க முடியும் என்பதை கதாசிரியர் ஏதாவது ஒரு வசனத்தின் மூலமாக வைத்திருக்கலாம்.

பாண்டே பேசும் பல வசனங்கள் இப்போதைய ஆட்சி அதிகாரம் ஏழை, எளிய மக்களை எவ்வாறு மனு எழுதிக் கொடுக்கச் சொல்லியே சாகடிக்கிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது. இவர் இப்படியென்றால் இவருடைய பிராமண உதவியாளர் ஒரு கனிவு, ஒரு பணிவு.. ஒரு கரிசனம்.. எதுவுமில்லாத ஒரு அதிகாரமிக்க மனிதராக தன்னை நிறுவிக் கொள்கிறார். இதற்கு பிராமண அடையாளம் எதற்கு என்று தெரியவில்லை. எல்லா சாதிக்காரர்களும் இப்போது இப்படித்தான் இருக்கிறார்கள் இயக்குநரே.. இதைத் தவிர்த்திருக்கலாம்.

இதேபோல் ரணசிங்கத்தை துபாய்க்கு அனுப்பி வைத்த ஏஜென்ஸியை நடத்தி வரும் இஸ்லாமியரான மனோஜ் குமார் தன் தரப்பு வாதமாக எடுத்து வைப்பதெல்லாம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் என்பதை தெளிவாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

இந்த இஸ்லாமியரும் அரியநாச்சியை பல முறை அலையவிட்ட பின்பே உண்மையைச் சொல்கிறார். ஆக, நமக்கு நாமேதான் எதிரி என்பதும் படத்தில் பதிவாகியிருக்கிறது.

புதுமுகம் பவானி.. ரணசிங்கத்தின் தங்கையாக.. பாசமிக்கவராக நடித்திருக்கிறார். அவருடைய அண்ணி மீதான கோபம்.. கரிசனம்.. பின்பு பரிதாப உணர்வில் குடும்பத்திற்காக இணையும்போது சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

பாரிச வியாதியால் பீடிக்கப்பட்ட அப்பா.. எதுவுமே தெரியாமல் வளர்ந்திருக்கும் அம்மா.. வார்டு கவுன்சிலராக இருந்தாலும் பிழைக்கத் தெரியாத முனீஸ்காந்த்.. பிழைக்கத் தெரிந்த வித்தகன் எம்.எல்.ஏ.வாக  நமோ நாராயணா, ஏழைகளுக்கு கருணை காட்டத் தயாராக இல்லாத அரசு அதிகாரியாக அபிஷேக்.. இப்போதைய மத்திய அமைச்சர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் எல்லாவற்றையும் டிரெண்டிங்கில் வைக்கத் துடிக்கும் மத்திய அமைச்சராக சனூர் ஷனா என்று பலரையும் அந்தக் கதாபாத்திற்கேற்றவாறு நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளின்போது ரம்மியத்தையும், போராட்டக் களத்தின்போது சுட்டெரிக்கும் வெயிலையும்.. சோகமான சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கும் சூழலில் இருட்டும், வெளிச்சமும் கலந்த ஒளியையும் கொடுத்து மொத்தப் படத்தையும் ஒருவித குறியீடாகவே நகர்த்தியிருக்கிறார்கள்.

நீரோட்டம் பார்க்கும் காட்சியில் அப்படியொரு பனை மரங்கள் மட்டுமே நீண்டிருக்கும் வயக்காட்டில் எந்தப் பகுதியில் தண்ணீர் இருக்கப் போகிறது என்பதாக நம்மையே கேட்க வைக்கிறது கேமிரா. நடிகர்களின் நடிப்புத் திறமையை வெளிக்காட்டும் பொருட்டு பல காட்சிகளில் குறிப்பிடத்தக்க வசனத்தின்போது குளோஸப் வைத்து தன்னுடைய இயக்கத் திறமையை வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குநர் விருமாண்டி.

படத்தின் மிகப் பெரிய குறையே படத்தின் நீளம்தான். இப்போது இருக்கும் நீளத்தில் அரை மணி நேரத்தைக் குறைத்திருந்தால் படம் இன்னமும் இறுக்கமாக இருந்திருக்கும். படத் தொகுப்பாளருக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்து இதனைச் செய்திருக்கலாம்.

கலை இயக்குநர் லால்குடி இளையராஜாவுக்கு தனியான பாராட்டுக்கள். இத்தனை கூட்டங்கள் மத்தியில்.. இருக்கின்ற இடத்திற்கேற்றாற்போல இருப்பிடத்தையும், பொருட்களையும், சுற்றுவட்டாரத்தையும் அழகுபட காண்பிக்க உதவியிருக்கிறார். உதாரணம் முதலிரவுக் காட்சியில் அந்த வீடு இருக்கும் சூழல்.

ஜிப்ரானின் இசையில் ‘அழகிய சிறுக்கி’ பாடல் காதலையும், ‘புன்னகையே’ பாடல் அரிய நாச்சி புதுமைப் பெண்ணாய் பொங்கியெழும்விதத்தையும் காட்சிகளாக்கி படத்தை நகர்த்த உதவியிருக்கின்றன. வைரமுத்துவின் வைர வரிகளில் ‘புன்னகையே’ பாடல் வரிகள் சிலிர்க்க வைக்கிறது.

கிராமப் புறங்களில் இத்தனை கூட்டத்தைக் கூட்டி அவர்களை இம்மியவளவுகூட சொதப்பல் இல்லாமல் நடிக்க வைப்பதென்பது யானையைக் கட்டி மேய்ப்பதற்குச் சமம். கிட்டத்தட்ட ‘தேவர் மகன்’ படப்பிடிப்பு நடைபெற்ற அனைத்து இடங்களிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடந்திருக்கிறது.

பெருத்த மக்கள் கூட்டத்தை ஒருங்கிணைத்து அவர்களது அழுகையையும், கோபத்தையும், வேகத்தையும் அழகுற படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

திரைக்கதையில் அவர் சேர்த்திருக்கும் சில, சில காட்சியமைப்புகளும்கூட அவரது தனித்திறமையைக் காட்டுகின்றன. கணவன் இறந்ததற்குப் பிறகு தண்ணீர் பிடிக்க பொது இடத்திற்குச் சென்ற இடத்தில் அரியநாச்சியைப் பார்த்தவுடன் பேசிக் கொண்டிருந்த பெண்கள் அமைதி காப்பதும்.. பின்பு தாம்பத்தியம் சம்பந்தமாக அவர்கள் பேசி சிரிக்கும் சூழலில் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் அரியநாச்சி கூட்டத்தில் இருந்து விலகுவதும் சோகத்தை உணர்த்தும் திரைக்கதைக் காட்சி.

இந்தத் திரைக்கதையில் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளாகக் கருதுவது.. சென்னையில் திடீரென்று அருண்ராஜா காமராஜ், அரியநாச்சியை கண்டறிந்து அவருக்கு உதவி செய்வது.. மத்திய அமைச்சரின் காரை மறித்து அரியநாச்சி போராட்டம் நடத்துவது.. டெல்லியில் ஒரேயொரு பெண் பத்திரிகையாளர் மட்டுமே அரியநாச்சியை அடையாளம் கண்டு அவருக்கு உதவுவது.. பிரதமரே நேரில் வந்து உதவிகள் செய்வது போன்றவையெல்லாம் அரியநாச்சியின் போராட்டத்தை போற்றும்விதமாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மாற்றியே எழுதியிருக்கலாம்..!

படத்தின் இன்னொரு முக்கிய பலம் வசனங்கள்தான். வசனம் எழுதிய இயக்குநர் சண்முகம் முத்துச்சாமியின் வலிமையான வசனங்கள்தான் படத்திற்கு முதுகெலும்பாய் கிடைத்திருக்கிறது.

”அதிகாரத்தோட உச்சாணிக் கொம்புல இருக்குறவங்களுக்கு நாம அடிபட்டதோட வலியை கொஞ்சம்கூட குறையாம அப்படியே புரிய வைக்கணும்” என்ற வசனம் அனைத்துவகையான மக்களின் கோப, தாபங்களுக்கும் பொருத்தமாக இருக்கிறது.

”2000 பேருக்கு வேலை போட்டுக் கொடுத்துட்டு… விவசாயம் பண்ற 50,000 பேரை தெருவுல நிப்பாட்டுனா எப்படி சார்..?”

”நம்ம ஊரு பொம்பளைங்க தண்ணி வண்டி தள்ளிக்கிட்டு இருக்காங்க; அந்த கரெண்ட் கம்பெனிக்காரன் ஒரு லட்சம் லிட்டர் தண்ணி எடுக்குறான் பிளேட் கழுவறதுக்கு…”

”ரேஷன் கார்டு நம்ம ஸ்டேட் எல்லையைத் தாண்டி தாங்காது.. ஆதார் கார்டு எங்கே செல்லும், செல்லாதுன்னே தெரியாது…”

“நம்ம பிரச்சனையை தீர்க்க நாமதான் அதிகாரத்துக்கு வரணும்னு இல்லை. அதிகாரத்துல இருக்குறவங்களை கேட்டும் தீர்க்கலாம்…”

“நமக்கே தெரியாம நாம ‘வேணாம்’னு சொன்ன திட்டங்களை… அரசாங்கம், நம்ம பிள்ளைங்க தலைல கட்டிருவாங்க…”

“அரசியல்வாதிங்களைக்கூட புரிஞ்சுக்கலாம்; ஆனால் வியாபாரிங்க போடற கணக்கைத்தான் புரிஞ்சுக்கவே முடியாது…”

“உலகத்துலயே பெரிய நோய் பசிதான். இந்த உலகத்துல பசி இருக்கும்வரை விவசாயம்தான் பெரிய தொழில்…”

“சட்டப்படி வாழ முடியும், சட்டப்படி சாக முடியுமா..?” – என்றெல்லாம் சவுக்கடியாய் வசனங்களை எழுதி தன்னை மிகச் சிறந்த வசனகர்த்தாகவே நிலை நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் சண்முகம் முத்துச்சாமி.

வெறுமனே இந்திய அரசியல் மீதும், இந்திய அரசியல்வாதிகள் மீதும்.. இந்தியாவின் அரசியல் அமைப்பு.. ஆட்சியாளர்களின் அணுகுமுறை.. அரசுகளின் சட்ட திட்டங்களை கேலிக் கூத்தாக்குவது.. கிண்டல் செய்வது.. முட்டாள்தனமாக இருப்பதாகச் சொல்வது.. என்றெல்லாம் இயக்குநர் இந்தப் படத்தில் பொத்தாம் பொதுவாகக் காண்பிக்கவில்லை. சொல்லவில்லை.

ஊரில் 144 தடையுத்தரவு போட்டிருக்கிறார்கள். மறுநாள் காலையில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க வேண்டும். அதற்கு ஒரே வழி.. தனக்குக் கல்யாணமாகிவிட்டதால் ஆட்சியர் தன்னை நேரில் வரச் சொன்னார் என்று பொய் சொல்லி போக வேண்டியதுதான் என்பதால்தான் அந்த அவசரக் கல்யாணம்.

கல்யாணத்தில் புகைப்படமில்லை. கோவிலில் நடத்தப்பட்டதற்கு ஆதாரமில்லை.. ரிஜிஸ்தரர் அலுவலகத்தில் பதியவில்லை. ரேஷன் கார்டில் பெயர் இல்லை என்று பல இல்லைகளைச் சொல்லி அரசு மறுத்தாலும்.. இதில் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் இது போன்று நடந்துவிட்டது என்பதை அரசுத் தரப்பு புரிந்து கொள்ள மறுக்கிறது என்பதை இன்னும் கொஞ்சம் வசனங்களின் மூலம் சொல்லியிருக்கலாம்.

தங்கையின் மூலமாக விண்ணப்பித்தால் மனுவை முன்னெடுப்பதாக கலெக்டரின் பி.ஏ. சொன்னாலும்.. அரியநாச்சி தன்னுடைய  ‘மனைவி’ என்னும் இடத்தை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்பதை போல போராட்டத்தில் தீவிரமடைவது ஒரு சராசரி மனைவியாக இல்லை.. இந்தியனாக.. தமிழச்சியாக குரல் எழுப்புகிறாள் என்பதாகத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது தங்கை இல்லை என்றால் இதே அரசு அமைப்புகள் என்ன செய்திருப்பார்கள்..? யாருமே கேட்க முடியாது என்று சொல்வார்களா..?

“எனக்கு நஷ்ட ஈடெல்லாம் வேண்டாம். பணம் வேண்டாம்.. என் காதல் கணவனை மீட்டுக் கொடுங்கள்…” என்று மனைவி சொல்லும்போது ஊரில் வந்து விசாரித்தாலே போதுமே..?! தெரிந்து கொள்ளலாமே..? ஆனால் அதற்கு மனமில்லாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஏழை, எளியவர்களை விரட்டியடிக்கும் அதிகாரிகளின் கூட்டத்திற்கு செருப்படியை பல வசனங்களின் மூலமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

நடிகை ஸ்ரீதேவி இறந்தபோது அவருடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கும் மிகப் பெரிய சிக்கல் எழுந்தது. அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக துபாய் அரசின் தலைமை வழக்கறிஞர் கருதினார். அதனால் அவருடைய உடலை இந்தியா கொண்டு வர தடங்கல் ஏற்பட்டது.

அந்த அர்த்தராத்திரியில் இந்தியாவின் தூதுவரே அந்தத் தலைமை வழக்கறிஞரின் வீட்டுக்குச் சென்று அவரிடத்தில் பேசி.. ‘இந்த விவகாரத்தில் இந்திய அரசும் தலையிட்டுள்ளது. இது இந்திய அரசின் கோரிக்கை‘ என்றெல்லாம் பேசி ஸ்ரீதேவியின் உடலை வாங்கிக் கொண்டு வந்தார்கள்.

ஒரு பிரபலம் என்றால் எந்த அளவுக்கும் கீழே இறங்கி வேலை செய்து உதவிடத் துடிக்கம் அதிகார வர்க்கம்.. அதில் ஒரு கால்வாசி உதவியையாவது சாதாரண ஒரு இந்தியனின் மீதும் காட்டலாமே..? ஏன் காட்டவில்லை என்பதைத்தான் ஸ்ரீதேவியின் மரணத்தை வைத்து கேள்வி எழுப்புகிறார் இயக்குநர்.

ஊரில் தண்ணியில்லை. இதனால் விவசாயமில்லை.. குடும்பத் தொழிலையும் பார்க்க முடியவில்லை. வேறு வேலையும் இல்லை.. உள்ளூர்க்காரர்களுக்கு வேலையில்லை என்று மற்றைய மாநிலத்தாருக்கு வேலை கொடுக்கும் கொடுமை.. இதெல்லாம் சேர்ந்துதான் ரணசிங்கத்தை துபாய்க்கு அனுப்புகிறது. அப்படியானால் ஒருவகையில் மத்திய, மாநில அரசுகள்தானே இதற்குப் பொறுப்பாக முடியும்..? பின்பு அரியநாச்சி தன் கணவரின் உடலை மீட்டுக் கொடுங்கள் என்று கேட்பதில் என்ன தவறு இருக்கிறது…?

வருடத்திற்கு 72,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு ரேஷனில் அரிசியில்லை என்றால்.. மாதம் 6000 ரூபாய் சம்பாதிப்பவர்களால் ஒரு குடும்பத்தை வைத்து இந்தியாவில் ஓட்ட முடியுமா..? முடியும் என்று அரசு நினைத்தால் இது ‘முட்டாள்கள் நிரம்பிய அரசு’ என்றுதான் சொல்ல முடியும். இதைத்தான் அரியநாச்சியும் கேட்கிறாள்.

இதனால்தான் அரியநாச்சி உச்சபட்ச கோபத்தில் “உன் ரேஷன் அரிசு யாருக்கு வேணும்.. நான் இந்தியனே இல்லை.. போடா..” என்கிறாள். இது நியாயம்தானே..? மக்களைப் புரிந்து கொள்ளாத அரசுகளின் கீழ் நாம் எதற்கு வாழ வேண்டும்..?

“வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் நாங்கள் பொறுப்பல்ல..” என்று அரசுகள் சொன்னால்.. பின்பு எதற்காக அவர்களை வெளிநாட்டுக்கு போக அனுமதிக்க வேண்டும்..? எதற்கு அவர்கள் அனுப்புகின்ற பணத்தை வாங்க வேண்டும்..? எதற்கு அந்தப் பணத்திற்கு வரி வசூலிக்க வேண்டும்…? ‘பணம் வேண்டும். வரி வேண்டும்.. ஆனால் அவர்களின் பொணம் மட்டும் வேண்டாம்’ என்பதெல்லாம் என்ன மாதிரியான கொள்கை..? இதைத்தானே அரியநாச்சியும் கேட்கிறாள்…?

ஒரு உயிரைப் பொருட்படுத்தாமல் ஒரு நிறுவனத்தின் முதலாளிதான் முக்கியம் என்று நினைக்கும் முதலாளித்துவ ஆட்சியை நோக்கித்தான் அரியநாச்சி இந்தக் கேள்விகளை எழுப்பியிருக்கிறாள். இதற்குப் பரிசாக இந்த தேசம் அவளுக்குக் கொடுக்கும் பரிசுதான் எவனோ ஒருவனது உடலை அவளது கணவன் என்று சொல்லிக் கொடுப்பது.

இதற்காகத்தான் கடைசியாக அரியநாச்சியும் “வேற எவனோ ஒருத்தன் உடம்பை கொடுத்து… ஏமாத்திட்டாங்க தேவடியா பசங்க” என்று சம்பந்தப்பட்ட அனைவரையும் ‘பாராட்டுகிறாள்’.  

இந்தப் பாராட்டு இப்போதைய மத்திய, மாநில அரசுகளுக்கு போய்ச் சேரட்டும்.. இதுதான் புன்னகையொன்று புயலாய் மாறும்போது கிடைக்கும் பதிலடி..!

இறுதியாக…

“நல்லவனோ, கெட்டவனோ.. செத்தா சொந்த ஊர்ல கெத்தா சாவணும்..” என்கிற வசனத்தின் மூலமாக வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களைக்கூட ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்து.. சட்டென்று அவர்களின் நிலைமையை குறிப்பால் உணர்த்தியிருக்கிறது இத்திரைப்படம்.  

இந்த ஒரு பெருமையே இந்தப் படத்திற்குப் போதும்..!!!

Our Score