தருண் கோபி இயக்கும் அடுத்த படம் ‘யானை’     

தருண் கோபி இயக்கும் அடுத்த படம் ‘யானை’     

ஆரூத் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் மன்னங்காடு குமரேசன், தருண்கோபி குடும்பத்தார், மற்றும் எல்.எஸ்.பிரபுராஜா ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ள திரைப்படம் யானை.

இந்தப் படத்தில் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தில் நாயகனாக நடித்த ஆண்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நடிப்பில் யானை பலம் பொருந்திய முன்னணி நடிகை ஒருவர் கதையின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். மற்றும் முக்கிய  கதாப்பாத்திரங்களில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவு  - இனியன், இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கவுள்ளார். படத் தொகுப்பு  - வி.டி.விஜயன், கலை  - மணி கார்த்திக், ஸ்டண்ட்  - கனல் கண்ணன், நடனம் - தினேஷ், பிருந்தா, மக்கள் தொடர்பு  - மணவை புவன், தயாரிப்பு - மன்னன்காடு M.குமரேசன், தருண்கோபி குடும்பத்தார், எல்.எஸ்.பிரபுராஜா

இந்தப் படத்தை பிரபல நடிகரும், இயக்குநருமான தருண் கோபி இயக்கவிருக்கிறார். தருண் கோபி ஏற்கெனவே திமிரு, காளை போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். தற்போது திமிரு படத்தின் இரண்டாம் பாகமாக வெறி என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் முடியும் தருவாயில் இருக்கிறது. உடனேயே சூட்டோடு சூட்டாக இந்த யானை படத்தையும் துவக்கியிருக்கிறார் இயக்குநர் தருண் கோபி.

யானை படம் பற்றி இயக்குநர் தருண் கோபி பேசும்போது, "இது ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படம். ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது அந்த வீட்டிற்கு மகளாக போக வேண்டும், அதேபோல் ஒரு ஆண் தான் பெண் எடுத்த வீட்டிற்கு ஒரு மகனாக இருக்க வேண்டும் என்ற மையக் கருத்தை வைத்து உணர்வுப்பூர்வமாக, ஆக்ஷன் மற்றும்  சென்டிமென்ட் கலந்து உருவாகவிருக்கிறது. மக்கள் அன்றாடம் சந்திக்கும் சம்பவங்களை அடிப்படியாக கொண்டு இப்படத்தை இயக்கவுள்ளேன்.

படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, திண்டுக்கல்  போன்ற இடங்களில் ஒரே கட்டமாக நடக்கவிருக்கிறது…" என்றார் இயக்குநர் தருண்கோபி.