கன்னட நடிகை மேக்னா ராஜின் வளைகாப்பு நிகழ்ச்சி மிகுந்த சோகத்திற்கிடையில் நேற்று பெங்களூரில் நடைபெற்றுள்ளது.
நடிகை மேக்னா ராஜ் கன்னட சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சுந்தர்ராஜ்-பிரமிளா ஜோஷியின் மகள். பல கன்னட திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தமிழிலும் ‘காதல் சொல்ல வந்தேன்’ மற்றும் ‘உயர் திரு 420’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
தமிழ்த் திரைப்பட நடிகரான அர்ஜூனின் சகோதரி மகனான சிரஞ்சீவி சார்ஜா என்பவரும் ஒரு பிரபலமான கன்னட நடிகர். இவரும் மேக்னா ராஜூம் ஒரு கன்னடப் படத்தில் நடிக்கும்போது காதலிக்கத் துவங்கினார்கள்.
கிட்டத்தட்ட 10 ஆண்டு காதல் வாழ்க்கைக்குப் பிறகு இவர்களின் திருமணம் கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்றது. துரதிருஷ்டவசமாக 2 வருடங்களுக்காக இந்த ஜூன் மாதம் 7-ம் தேதியன்று திடீரென்று ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் மேக்னா ராஜின் கணவரான சிரஞ்சீவி சார்ஜா காலமானார். அப்போது மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் நேற்றைக்கு மேக்னா ராஜின் வளைகாப்பு நிகழ்ச்சி அவருடைய பெங்களூர் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மேக்னா ராஜின் பெற்றோர்களும், சிரஞ்சீவி சார்ஜாவின் பெற்றோர்களும், மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் தன்னுடைய கணவரின் ஆளுயுர கட் அவுட்டின் பின்னணியில் மேக்னா ராஜின் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்தப் புகைப்படங்களை மேக்னா ராஜே தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.