இயக்குநர் சேரனின் C2H Network நிறுவனத்தின் அறிமுக விழாவில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதன் சில பகுதிகள் இங்கே :
“இந்தத் திட்டத்தோட டைட்டில்ல கூட ஒரு L சேர்க்கணும். இது சாதாரண C2H இல்லை.. LC2H. அதாவது ‘லீகல் சீனிமா டூ ஹோம்’ அப்படீன்னுதான் கூப்பிடணும்.. இந்த C2H முன்னாடியிருந்தே இங்க இருக்கு. திருட்டு டி.வி.டி., திருட்டு விசிடி.காம் என்ற பெயரில் மக்களின் வீட்டுக்குப் போயிட்டுத்தான் இருக்கு. என்ன செஞ்சும் இப்போவரைக்கும் இதைக் கட்டுப்படுத்த முடியலை..
‘ஜக்குபாய்’ படத்தையும் இதே மாதிரி ஏதோவொரு தியேட்டர்ல ஷூட் செஞ்சு டிவிடியா ரிலீஸ் செஞ்சாங்க.. அப்போ நாங்க உடனே செயல்பட்டு போலீஸை வைச்சு அந்தாளை பிடிச்சு உள்ள தள்ளினோம்.. ரொம்ப நாளாச்சே அந்த கேஸ் என்னாச்சுன்னு தெரியலையேன்னு அந்த ஏ.சி.கிட்ட இது பத்தி கேட்டேன். அவர் தலையைச் சொறிஞ்சுக்கிட்டே ‘அத விடுங்க ஸார்.. அவனை வெளில விட்டாச்சு..’ என்றார். அவர் தலையைச் சொறியும்போதே எனக்குத் தெரிஞ்சு போச்சு.. இதுல அரசியல் இருக்குன்னு..!
நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி சிங்கப்பூர், மலேசியாவுக்கு இங்கேயிருநது படங்களை வாங்கிக் கொடுக்குற பிஸினஸ்தான் பண்ணிக்கிட்டிருந்தேன்.. அப்போ என்ன செய்வோம்னா… ஒவ்வொரு படத்தையும் 16 MM பிலிமா மாத்தி அதை குறிப்பிட்ட நாள்ல அங்க அனுப்புவோம்..
அங்க மலேசியால ஒவ்வொரு ஏரியாவுலேயும் திரை கட்டி பார்க்குற மாதிரி ஒரு இடத்தை பிக்ஸ் பண்ணி மக்களை கூப்பிட்டு அதை போட்டுக் காட்டுவாங்க.. இப்படித்தான் என் பிஸினஸ் போயிக்கிட்டிருந்துச்சு..
திடீர்ன்னு ஒரு சமயம் என்னோட மலேசிய ஏஜெண்டுகிட்ட இருந்து ஒரு தகவலும் வரலை.. கேக்குற பிரிண்ட்டும் குறைஞ்சுக்குட்டே போச்சு.. என்ன ஆச்சுன்னு விசாரிச்சப்பதான் ஒரு தகவலை சொன்னாங்க..
அந்தச் சமயத்துல VHS Tape வந்து பேமஸாயிருச்சு.. அந்த டேப் மூலமா இப்போ நிறைய படங்கள் வர ஆரம்பிச்சிருச்சு. அதுனால நம்ம பிலிமுக்கு வேலையில்லாம போயிருச்சுன்னாங்க.. அப்புறமா நானே அந்த பிஸினஸை விட்டுட்டேன்..
இப்படித்தான் டெக்னாலஜி வளர வளர பழையவை அழிஞ்சுதான் போகும்.. இது காலத்தின் கட்டாயம்.. சேரன் தன்னுடைய இந்த முயற்சியில் நிச்சயம் ஜெயிக்கணும்னு நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன்..” என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.