full screen background image

‘ஜில்லா’ படத்தின் திருட்டு டிவிடி விற்பனையில் 10 லட்சம் குறைஞ்சு போச்சாம்..!

‘ஜில்லா’ படத்தின் திருட்டு டிவிடி விற்பனையில் 10 லட்சம் குறைஞ்சு போச்சாம்..!

தன்னுடைய C2H Network நிறுவனத்தின் செயல்பாடுகள், நோக்கங்கள் பற்றி பவர்பாயிண்ட் ஸ்லைடுகள் மூலமாக மேடையில் விவரித்தார் இயக்குநர்.. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் அவர் பேசிய பேச்சு பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது.. அந்த பவர்பாயிண்ட் தகவல்கள் நமக்குக் கிடைக்காததால் அவைகளை பற்றி அதிகம் சொல்ல முடியவில்லை. மன்னிக்கவும்.. நினைவில் இருந்தவைகள் மட்டும் இங்கே :

இனி இயக்குநர் சேரனின் பேச்சு :

“சென்ற ஆண்டு தயாரிக்கப்பட்டு சென்சார் சர்டிபிகேட் வாங்கிய படங்கள் 298. ஆனால் ரிலீஸ் ஆன படங்கள் 145-தான். ரிலீசே ஆகாத படங்கள் 153. இதில் லாபம் கொடுத்த படங்கள் 12. மிச்சம் மீதி படங்களெல்லாம் போட்ட காசைகூட கலெக்ட் செய்ய முடியாமல் தோல்வியடைந்த படங்கள். ரிலீஸ் ஆகாத படங்களுக்கு இப்போவரைக்கும் தியேட்டர்கள் கிடைக்கலை.. அதுனால என்னிக்கு ரிலீஸாகும்னு சொல்லவே முடியாது.. இதனால பல கோடி ரூபாய் பணம் முடங்கிக் கிடக்குது.

இப்படி ஒரு வருடத்தில் வெளியான படங்களின் எண்ணிக்கையில் 10 சதவிகித படங்களே வெற்றி பெற்று மூதலீட்டை திரும்பப் பெற்றுள்ளன. மீதம் 90 சதவிகிதப் படங்கள் தோல்வியடைந்துள்ளன. இந்த ஆபத்தான நிலையை அலசி ஆராய்ந்து பார்த்ததில் மக்களின் நேரமின்மையும், மக்களுக்கான வேலைப்பளுவில் கிடைக்கும் நேரத்தில் திரைப்படம் பார்க்கும் பழக்கமும் அதற்கான வசதியும் வந்துவிட்டதும்தான் காரணம்.

இன்னொரு பக்கம் தமிழ்நாட்டுல இருக்குற எல்லா டிவி சேனல்லேயும் தமிழ் சினிமாக்களும் டெய்லி ஓடிக்கிட்டிருக்கு.. கிளிப்பிங்ஸ் ஓடுது.. பாடல்களை ஒளிபரப்புறாங்க.. படத்தையும் போடுறாங்க.. ஆனா இதுனால தயாரிப்பாளருக்கு சல்லிக் காசு கிடைக்கிறதுல்ல..

இதோ இங்க உக்காந்திருக்காரே அருண்குமார்.. அவர் தயாரிச்ச ‘பாண்டவர் பூமி’ படத்தை இதுவரைக்கும் நூறு தடவையாச்சும் அந்த டிவில போட்டிருப்பாங்க.. ஒரு தடவைக்கு 2 லட்சம்னு வைச்சாலும் 2 கோடி ரூபா கிடைச்சிருக்கும். இதுல ஒத்த பைசா படத்தைத் தயாரிச்ச அவருக்கோ.. படத்தை இயக்கிய எனக்கோ கிடைக்கலை.. இதுதான் இந்த சினிமாத் துறையோட சாபக்கேடா இருக்கு..!

ரிலீசாகுற எல்லா புதுப் படங்களையும் வெளிநாட்டுல இருக்கிற ஈழத் தமிழர்கள்தான் இண்டர்நெட்ல அப்லோட் பண்ணி விடுறதா நெறைய பேர் சொல்லிக்கிட்டிருந்தாங்க. நான்கூட இதுல சந்தேகப்பட்டு கனடாவுல இருக்கிற என்னோட நண்பர் ஒருத்தர்கிட்ட பேசி அதெல்லாம் உண்மைதானான்னு செக் பண்ணச் சொன்னேன்.  அவரு செக் பண்ணிட்டு ‘இதுல துளியும் உண்மையில்லை.. எல்லாப் படங்களையும் தமிழ்நாட்டுல உள்ள கோயம்புத்தூர், சென்னை, திருச்சி ஆகிய ஊர்கள்ல இருந்துதான் அப்லோடு பண்ணி விடுறாங்க. ஆனா சர்வரோட அட்ரஸ் மட்டும்தான்  வெளிநாட்டு அட்ரஸா இருக்கு’ என்றார். தயவு செய்து இனிமேலாச்சும் ஈழத் தமிழர்களை சந்தேகப்படுறதை கைவிடுங்க.. எல்லாம் நம்மாளுக செய்ற வேலைதான்..

நாங்க எங்களோட கம்பெனி மூலமா தமிழ்நாடு முழுக்க திருட்டு விசிடி விக்கிற கடைக்காரங்களை சந்திச்சோம். குறிப்பா சென்னையில இருக்கிற பர்மா பஜார், சத்யா பஜார் இப்படி எல்லா இடங்களுக்கும் போனோம். அவங்களை மீட் பண்ணி ‘ஏம்பா இப்படி திருட்டுத்தனமா சிடியை விக்கிறது தப்பில்லையா..? நான் ஒரிஜினல் சிடியே தர்றேன். அதை வித்துக் கொடுங்க.. இப்படியாச்சும் எங்ககூட சேர்ந்து தொழிலை பண்ணுங்க’ன்னு சொன்னேன்.

‘எவ்ளோ சார் கமிஷன் தருவீங்க?’ன்னு கேட்டாங்க. ‘ஒரு படத்துக்கு ஐம்பதாயிரம் வரைக்கும் கமிஷனா தர்றேன்’னு சொன்னேன். ‘அட என்னா சார் நீங்க… அஜித், விஜய் படங்களெல்லாம் சிடி போட்டு வித்தோம்னா எம்பது லட்சம் சிடிக்கள்வரை சேல்ஸ் ஆகும். அதுல எங்களுக்கு நாலு லட்சம் ரூபாய்வரைக்கும் கமிஷனா கெடைக்கும். நீ என்னன்னா வெறும் ஐம்பதாயிரம் ரூபாய் தர்றேன்னு சொல்றியே நியாயமா?’ன்னு கேட்டாங்க… இந்தளவுக்கு அந்த வியாபாரத்துல அவங்களுக்கு லாபம் கெடைக்குதுன்னு அப்பத்தான் தெரிஞ்சது. ஒரு புதுமுகம் நடிச்ச படமா இருந்தாலே சாதாரணமா 20 லட்சம் சிடிக்கள் தமிழ்நாட்டுல சேல்ஸ் ஆகுதாம்.

இதுல ஒருத்தர், “வழக்கமா விஜய் படத்தோட சிடிக்கள் 80 லட்சம் சேல்ஸ் ஆகும் சார். ஆனா ‘ஜில்லா’ படத்தோட சிடி 10 லட்சம் குறைஞ்சு 70 லட்சம்தான் ஸார் சேல்ஸ் ஆச்சு’ன்னு ரொம்ப வருத்தமா சொன்னார்.. ‘என் படம்லாம் எவ்ளோ போகும்?’ன்னு கேட்டேன். ‘30-ல இருந்து 35 லட்சம்வரை விற்கும் ஸார்’ன்னாங்க. ‘அடேங்கப்பா.. அப்போ அதுல மாசம் ஐம்பதாயிரம் ரூபாயை எனக்குத் தாங்களேன்ப்பா.. எனக்கு இன்னும் சொந்த வீடுகூட இல்லை’ன்னு சொன்னேன். ‘என்ன சார்.. நாங்களே மாசத்துக்கு 2 லட்சம்வரை சம்பாதிக்கிறோம். சினிமாவில் நீங்க எவ்ளோ சம்பாதிச்சிருப்பீங்க?’ன்னு திருப்பி கேக்குறாங்க..

சினிமாவில் இருப்பவர்கள் எல்லாரும் பணக்காரர்களாக இருப்பாங்க என வெளில எல்லாருமே நினைச்சுட்டிருக்காங்க. இங்க இருக்க வீடே இல்லை நிறைய பேருக்கு…! யாரோ ஒரு சிலர் அப்படி இருக்கலாம். சினிமாவில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அன்றாடங்காய்ச்சிகளாகத்தான் இருக்காங்கன்றது அவங்களுக்குப் புரிய மாட்டேங்குது’

இந்த C2H திட்டத்தின் கீழ் பெரிய படங்கள் தியேட்டர்களில் திரையிடப்பட்டு ஒரு வாரம் கழித்து அந்தப் படம் டிவிடியில் வெளியிடப்படும். இதற்காக தமிழகம் முழுவதும் ஏழாயிரம் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு முகவரின் கீழும் நான்காயிரம் குடும்பங்கள் இருக்கும்.

முதல்கட்டமாக ஜே.கே எனும் நண்பனி்ன் வாழ்க்கை, ஆள், சிவப்பு எனக்குப் பிடிக்கும், மேகா, அப்பாவின் மீசை, வேல்முருகன் போர்வெல்ஸ் ஆகிய படங்கள் சினிமா டூ ஹோம் திட்டத்தின் மூலம் வீடுகளுக்குக் கொண்டு செல்லப்படும்.

இத்திட்டம் யாருக்கும் எதிரானது அல்ல.. திரையரங்குகளை அழிப்பதற்கானதும் அல்ல.. தியேட்டர் உரிமையாளர்களுக்கு எதிரானதும் அல்ல.. திரையரங்குகளுக்கு வர முடியாத சூழலில் இருக்கு்ம் சினிமா ரசிகர்களுக்கானது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய நோக்கம், அனைத்து சினிமாக்களையும் மக்கள் கண் முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். மக்கள் நிச்சயம் இதனை ஏற்றுக் கொண்டு எனக்குக் கை கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்..!

‘பொக்கிஷம்’ ரிலீஸ் சமயத்துல ‘என் படத்தை திருட்டு டி.வி.டி.யில் பார்ப்பவர்கள், படம் பார்த்துவிட்டு உங்களால முடிஞ்ச பணத்தை என் முகவரிக்கு அனுப்புங்க’ன்னு ஒரு விளம்பரம் பண்ணியிருந்தேன். சொன்னா நம்ப மாட்டீங்க. ஐம்பது, நூறுன்னு சின்னதும் பெரியதுமா எழுபத்தைந்தாயிரம் ரூபாய் எனக்கு வந்துச்சு..  மக்கள் நல்லவங்கதான்.  நாம நல்லவிதமா அவங்களை அப்ரோச் செய்தால் நிச்சயமா நம்மளை ஆதரிப்பாங்க.. இந்தத் திட்டதையும் அவங்க கண்டிப்பா ஆதரிச்சு திரையுலகத்தை  வாழ வைப்பாங்கன்னு நான் உறுதியா நம்புறேன்..” என்றார் இயக்குநர் சேரன்.

இவருடைய நம்பிக்கை பலிக்கட்டும்..!

Our Score