பிரபல ஹாலிவுட் நடிகையான ஜூடி பாஸ்டர், தனது நீண்ட நாள் காதலியும் சிறந்த புகைப்படக் கலைஞருமான அலெக்ஸாண்டரா ஹெடிஸனை நேற்று திருமணம் செய்து கொண்டாராம்.
51 வயதான ஜூடி பாஸ்டர் சிறு வயதில் இருந்தே ஹாலிவுட்டில் நடித்து வருபவர். 1988-ம் வருடம் The Accussed என்ற படத்திற்காகவும், 2003-ம் ஆண்டு The Silence of the Lambs படத்திற்காகவும் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றவர். 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சில ஹாலிவுட் படங்களைத் தயாரித்திருக்கிறார். சில படங்களை இயக்கியும் உள்ளார்.
சென்ற ஆண்டு நடந்த கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது ஜூடி பாஸ்டருக்கு வழங்கப்பட்டது. அந்த விழாவில் பேசும்போது தான் ஒரு லெஸ்பியன் என்பதை மறைமுகமாக தெரிவித்தார் ஜூடி பாஸ்டர். மேலும் 2008-ம் ஆண்டில் இருந்து அலெக்ஸாண்டரா ஹெடிஸனுடன் இணைந்து வாழ்ந்து வந்த ஜூடி பாஸ்டர், நேற்று திடீரென்று லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் அவரைத் திருமணமும் செய்து கொண்டிருக்கிறார்.
ஜூடி பாஸ்டர் ஏற்கெனவே 1993-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டுவரையிலும் ஹாலிவுட்டின் சினிமா தயாரிப்பாளரான சிட்னி பெர்னார்டு என்பவருடன் வாழ்ந்து வந்தார். இவர் மூலமாக சார்லஸ், கிறிஸ்டோபர் என்ற இரண்டு பையன்களும் இவருக்கு உண்டு.
புதுமணத் தம்பதிகளுக்கு நமது வாழ்த்துகள்..!










