full screen background image

சினிமா இயக்குநரானார் நடிகை ஷகீலா..!

சினிமா இயக்குநரானார் நடிகை ஷகீலா..!

கோடம்பாக்கத்தில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக குறைபட்டுக் கொண்டிருப்பவர்களே.. எண்ணிக்கையில் ஒன்றை இப்போது கூட்டிக் கொள்ளுங்கள்..

இயக்குநராகிவிட்டார், தமிழ், மலையாள சினிமாவுலகில் ஒரு காலத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஷகீலா. தெலுங்கு, இந்தி என்று இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் படத்தை இயக்கி வருகிறார் ஷகீலா. இப்போது ஷூட்டிங் ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் நடந்து வருகிறதாம்.

படத்தின் தயாரிப்பாளர்கள் ஷகீலாவின் பூர்வீக ஊரான ஆந்திர கிராமத்தின் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்களாம். முன்பே நல்ல பழக்கமாம். “நாங்க ஒரு படம் தயாரிக்கிறதா இருக்கோம். சின்ன பட்ஜெட் படம்தான். உன்னால முடிஞ்சா நீயே டைரக்ட் செஞ்சு கொடேன்…” என்று கேட்டவுடன் தன்னால் முடியும் என்று சொல்லி களத்தில் குதித்துவிட்டார் ஷகீலா.

“இயக்குநர் வேலை எனது நீண்ட நாள் கனவு. நிச்சயமா நாம ஒரு நாள் ஒரு படமாச்சும் டைரக்சன் பண்ணி காமிச்சிருணும்னு நினைச்சிருந்தேன். அப்போதான் இந்த வாய்ப்பு தானா வந்துச்சு.. இதுவொரு ஹீரோயின் ஒரியண்ட்டர் ஸ்டோரி. இதனை நானே இயக்கினால் ஒரு பெண்ணின் மனதை இன்னமும் ஆழமாகச் சொல்ல முடியும் என்பதால் நானே இயக்க முடிவு செய்தேன்.. “என்கிறார் ஷகீலா.

ஹீரோ, ஹீரோயின்கள் உட்பட படத்தில் பலரும் புதுமுகமாம்.. தொழில் நுட்பக் கலைஞர்களாகவும் புதியவர்களைத்தான் பயன்படுத்தியிருக்கிறாராம்.. “படம் தமிழில் கண்டிப்பா டப் செய்து வெளியிடப்படும்…” என்று உறுதியாகச் சொல்கிறார் ஷகீலா.

கதை, திரைக்கதை எழுதி இயக்கும் ஷகீலா வசனத்தை மட்டும் தனக்கு தெரிந்த கதாசிரியர் ஒருவரிடம் கொடுத்துள்ளாராம். தாய் மொழி தெலுங்குதான் என்றாலும் அது அத்தனை  வசப்படவில்லை என்பதால் இந்த ஏற்பாடாம்.. “எதையும் அரைகுறையாக செய்ய எனக்குப் பிடிக்காது…” என்கிறார்.

தன்னுடைய சொந்தக் கதையை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் எடுக்கும் திட்டம் இருப்பதாகவும் சொல்கிறார். இதற்கான முனைப்பான வேலைகள் இன்னொரு பக்கம் ஓடிக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.. “இந்தத் தெலுங்கு படத்தில் சொட்டு கிளாமர்கூட இல்லை. குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும்படியாகத்தான் இருக்கும்..” என்கிறார்.

அப்படிப் போடு அருவாளை..!

Our Score