கமல்ஹாசன் நடித்த ‘உத்தமவில்லன்’ படம் வரும் செப்டம்பர் 10-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமியும், அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸும் தயாரிக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும் கன்னட நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
இதில் கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும், பூஜா குமாரும் நடித்திருக்கின்றனர். கூடவே இயக்குநர்கள் கே.பாலசந்தரும், கே.விஸ்வநாத்தும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.. தற்போது பெங்களூரில் இதன் ஷூட்டிங் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை வந்த கமல்ஹாசன், வாக்களித்தவுடன் நேற்றைக்கே பெங்களூர் திரும்பி ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார். மின்னல் வேகத்தில் தயாராகிவரும் இந்தப் படம் வரும் செப்டம்பர் 10-ம் தேதி கண்டிப்பாக திரைக்கு வரும் என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நேரத்தில் ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றியும் பேசியாக வேண்டிய கட்டாயம். முதல் பாகத்தை முதலில் தயாரித்தது பிவிபி நிறுவனம். படத்தை வாங்கி ரிலீஸ் செய்ய முன் வந்தது ஆஸ்கர் பிலிம்ஸ். பிரச்சினைகள் சூழ்ந்தவுடன் ஆஸ்கர் பிலிம்ஸ் தயங்க.. கமல்ஹாசன் தானே அதனை பொறுப்பேற்று எடுத்துக் கொண்டு படத்தை ரிலீஸ் செய்தார்.
ஆனால் இரண்டாம் பாகத்தை ஆஸ்கர் பிலிம்ஸ்தான் தயாரித்து வருகிறதாம். இதன் ஷூட்டிங்கை கிட்டத்தட்ட முடித்தே விட்டார் கமல்ஹாசன். ஆனால் பேட்ச்சிங் வொர்க்ஸ் மற்றும் சில மேட்ச்சி்ங் வேலைகள் நடைபெற வேண்டுமாம்.. இதற்கான பணத்தினை ஆஸ்கர் பிலிம்ஸ் கொடுக்க தாமதம் ஏற்பட்டதினால்தான் கமல்ஹாசன் உடனடியாக ‘உத்தமவில்லனு’க்கு கால்ஷீட் கொடுத்து அதற்குக் கிளம்பிவிட்டார் என்கிறார்கள்.
ஆஸ்கர் நிறுவனத்தி்ற்கோ பலவித பிரச்சினைகள். ஷங்கர் இயக்கி வரும் ‘ஐ’ படத்தின் பட்ஜெட் போட்டதையும் தாண்டி போய்க் கொண்டேயிருக்க.. ஷூட்டிங் நடத்தவே பணம் இல்லாமல் நிறுத்த வேண்டிய நிலைமை. கன்டினியூட்டி கட்டாகிவிடும் என்று நினைத்து இயக்குநர் ஷங்கரே தனது சொந்தப் பணத்தைக் கொடுத்து சில நாட்கள் ஷூட்டிங் எடுத்திருக்கிறார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது லண்டனில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
‘ஐ’ படத்தின் பட்ஜெட் நெருக்கடியினால்தான் ‘விஸ்வரூப’த்திற்கு ஆஸ்கர் பிலிம்ஸால் சொன்ன நேரத்திற்கு பணத்தைத் தர முடியவில்லை என்று கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவி்ககின்றன..
இப்போது ஆஸ்கரின் முன்னால் இருப்பது ‘ஐ’ மற்றும் ‘விஸ்வரூபம்’. ‘விஸ்வரூப’த்தைவிட பெரிய பட்ஜெட் ‘ஐ’. ஆகவே அதனை முடித்து வெளியிட்டுவிட்டு பின்பு ‘விஸ்வரூபம்’ பக்கம் வரலாம் என்பது ஆஸ்கர் நிறுவனத்தின் கருத்து.
அதனால் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம், ‘உத்தமவில்லனு’க்கும் பின்பு வரவிருக்கும் ‘திருஷ்யம்’ படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு் பின்புதான் வெளிவரும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் கோட்ம்பாக்கத்து ஜோஸியர்கள்..!