ஒரு நடிகையின் கேரியரை அவுட்டாக்குவது அந்த நடிகை சம்பந்தப்பட்டது மட்டுமில்லாமல், பத்திரிகைகளின் கைகளிலும் உள்ளது என்பதை நடிகை ஜனனி ஐயர் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்..
‘திருதிரு துறுதுறு’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலாக சில காட்சிகளே வந்து சென்ற ஜனனி, பாலாவின் ‘அவன இவன்’ படத்தில்தான் கவனிக்கப்பட்டார். ‘பேபி’ என்று அழைக்கப்பட்ட அவரது கேரக்டர் இன்றளவும் மறக்க முடியாதது..!
பாலாவின் படத்திலேயே நடித்த பின்பு அதற்கடுத்து 4, 5 தமிழ்ப் படங்களிலாவது அவர் நடித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது ஒரேயொரு படத்தில்.. ‘தெகிடி’ என்றொரு படத்தில் மட்டுமே ஹீரோயினாக நடித்து வருகிறார்.. தனக்கு பெரிய வாய்ப்புகள் வராததற்கான காரணத்தை அவரே கண்டுபிடித்து நேற்று நடந்த ‘தெகிடி’ படத்தின் பிரஸ்மீட்டில் போட்டு உடைத்துவிட்டார்.
படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி சொல்லிவிட்டு தன்னுடைய கேரக்டரை பற்றி நாலு வார்த்தைகளில் பேசிவிட்டு சப்ஜெக்ட்டுக்கு வந்தார் ஜனனி.
“பத்திரிகையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். நான் சென்னையைவிட்டு எங்கேயும் போகலை. இங்கதான் இருக்கேன். இனி தமிழ்ச் சினிமாலதான் தொடர்ந்து நடிக்கப் போறேன்.. நான் இங்க இல்லைன்னு சொல்லியே எனக்கு நிறைய வாய்ப்புகள் வராம போயிருச்சு.. அதுனால இதை அவசியம் நீங்க பதிவு பண்ணிக்கணும்…” என்றார்.
இந்த ஒரு தமிழ்ப் படத்தில் மட்டுமே இப்போது நடித்து வரும் ஜனனி, மலையாளத்தில் 4 படங்களில் நடித்து வருகிறாராம்.. இதைப் பார்த்துட்டு ஒருவேளை மல்லுவுட்டுலேயே செட்டில்ன்னு எழுதிருவாங்களோன்னு பயந்துட்டாங்க போலிருக்கு..!