full screen background image

ஏவி.எம்.மின் 177-வது படம் ஏப்ரல் 14-ல் யூடியூபில் வெளியீடு..!

ஏவி.எம்.மின் 177-வது படம் ஏப்ரல் 14-ல் யூடியூபில் வெளியீடு..!

ஏவி.எம். நிறுவனம் இதுவரையிலும் 176 திரைப்படங்களையும், 50-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்துள்ளது.

இப்பொழுது நான்காவது தலைமுறையாக ஏவி.எம். நிறுவனத்தில் நிர்வாகப் பொறுப்பை திரு.ஏவி.எம். சரவணனின் பேத்திகளும்,  எம்.எஸ்.குகனின் மகள்களுமான அருணா குகன், அபர்ணா குகன் இருவரும் ஏற்றுள்ளார்கள்.

இவர்கள் இருவரும் இணைந்து இந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப இணைய உலகத்திற்காக ‘இதுவும் கடந்து போகும்’ என்ற 55 நிமிடங்கள் ஓடக் கூடிய திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். இது ஏவி.எம் நிறுவனத்தின் 177-வது திரைப்படம்.

1 மணி நேரத்திற்கும் குறைவான நேரமுள்ள இந்தப் படத்தை ஒரு சாதாரண சினிமாவை போலவே அதிக பொருட் செலவில் தயாரித்துள்ளார்களாம். ஆனால் இதனை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல் வரும் ஏப்ரல் 14-ம் தேதி யூடியூபில் வெளியிடுவதாக ஏவி.எம். நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வளவு பெரிய துயரமும் கால ஓட்டத்தில் மாறிவிடும் என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் சிவாஜி தேவ் நாயகனாக நடிக்கிறார். ஷில்பா பட் ஜோடியாக நடித்திருக்கிறார்.  ரவி ராகவேந்தர், பெர்கின் ஜான்ஸ், அனுஷா வர்மா, அஞ்சலி உபாசனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு சலீம் பிலால். உமாசங்கர் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீஹரி பிரபாஹரன் எழுதி அனில் கிருஷ்ணனுடன் இணைந்து இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் மாட்ரிட் சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை ஏற்கெனவே இந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

சில லட்சங்கள் செலவில் குறும்படமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை யூடியூபில் வெளியிடுவதால் கிடைக்கும் வர்த்தக லாபங்கள் என்னென்ன என்பது இப்போதுவரையிலும் தெரியாது என்றாலும், வரும் காலத்தில் இதுவும் ஒரு சினிமாவின் வர்த்தக மையமாக மாறும் சூழல் இருப்பதை உணர முடிகிறது..

தைரியமாக இது போன்ற சோதனை முயற்சிகளை மேற்கொண்டு தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு முன்னோடியாக திகழும் ஏவி.எம். நிறுவனத்திற்கு நமது நன்றிகளும், வாழ்த்துகளும்..!

Our Score