பல்வேறு மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்து, இசைஞானியாக திகழ்பவர் இளையராஜா. அவரது இந்தச் சாதனைக்கு ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து கலந்து கொள்ளும்வகையில் பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளையராஜா மியூஸிக் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், விஜய் தொலைக்காட்சியும் இணைந்து ‘இளையராஜா ஆயிரம்’ என்கிற பெயரில் இந்த விழாவை நடத்தவுள்ளன.
இது குறித்து விஜய் டிவி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இசையால் நம் அனைவரையும் நெகிழச் செய்த இசைஞானி இளையராஜாவுக்கு இந்த விழா ஒரு சமர்ப்பணம்.
தாங்கள் வியந்து ரசித்த இசைஞானி இளையராஜாவின் பாடல்களை அந்த பிரம்மாண்டமான மேடையில் இசைஞானிக்கு காணிக்கையாக சமர்ப்பித்து சிலிர்ப்பில் ஆழ்த்த ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகமும் திரளவுள்ளது.
ரசிகர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் நட்சத்திரங்களால் சூழப்பட இருக்கும் இந்த மேடையும், நிகழ்வுகளும் கலையுலகமே இதுவரை கண்டிராத ஒரு விழாவாக இருக்கும்..” என்று கூறியுள்ளது.
இந்த விழா குறித்து இசைஞானி இளையராஜா கூறுகையில், “1000 படங்களுக்கு இசையமைத்தது என்னைப் பொறுத்தவரையில் ஒரு எண்ணிக்கை மட்டுமே. இதை வைத்து நான் கர்வப்பட முடியாது.
இசை என்னுடைய வாழ்வு. என்னுடைய மூச்சு. என்னுடைய இசை ஒவ்வொரு ரசிகனுடைய வாழ்விலும் ஒரு அன்னியோன்யத்தை ஏற்படுத்தியுள்ளது எனக்கு மகிழ்ச்சியே. என்னுடைய ரசிகர்களின் கைதட்டல்தான் எனக்குப் பாராட்டு. அதுதான் என்றும் என்னுடைய வாழ்வின் அர்த்தமாகவும் கருதுகிறேன்.
என் இசைக்கு பாராட்டு என்கிறபோது எனக்கு அந்த இசையைக் கொடுத்த என் இறைவனுக்கும் கிடைக்கும் பாராட்டாக இருக்கும் என்பதால்தான் இந்த விழாவில் நான் கலந்து கொள்கிறேன்..” என்றார்.
இந்த பிரம்மாண்டமான பாராட்டு விழா வரும் பிப்ரவரி 27, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது.