full screen background image

‘எமன்’ போல தர்மத்தைக் காக்கும் விஜய் ஆண்டனி..!

‘எமன்’ போல தர்மத்தைக் காக்கும் விஜய் ஆண்டனி..!

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிக்கும் ‘எமன்’ படத்தை தயாரிக்கும்  லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் திரைப்பட தயாரிப்பிலும் காலூன்றி வருகிறது. தரமான கதைகளையும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறக் கூடிய நட்சத்திரங்களையும், இயக்குநர்களையும் வைத்து படம் தயாரிக்க லைகா நிறுவனம் எண்ணியுள்ளது. 

அந்த வரிசையில், ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, தொடரும் வெற்றிகளால் நட்சத்திர அந்தஸ்துக்கு  உயர்ந்து உள்ள விஜய் ஆண்டனியை தங்களது அடுத்த தயாரிப்பான ‘எமன்’ படத்துக்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து உள்ளனர்.

வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி பெற்ற  ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கரே  இந்தப் படத்தையும் இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

கதாநாயகனாக நடிப்பதோடு, இந்தப் படத்துக்கு இசை அமைக்கவும் செய்கிறார் விஜய் ஆண்டனி. கதை எழுதி, ஒளிப்பதிவு செய்வதோடு, இயக்கமும் செய்கிறார் ஜீவா ஷங்கர். செல்வாவின் கலை வண்ணத்தில், வீர செந்தில் படத் தொகுப்பு  செய்ய, ஷெரிப் நடனம் அமைக்க, திலிப் சுப்புராயன் சண்டை காட்சிகளை அமைக்கிறார். 

படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஜீவா சங்கர், “விஜய் ஆண்டனியுடன் இணைவது என்பது என்னை பொறுத்தவரை தாய் வீட்டுக்கு வருவதை போன்றதுதான்.  ‘நான்’ திரைப்படத்தில் இருந்து இன்றுவரை  அவருடைய அசுரத்தனமான வளர்ச்சி என்பது அவரது  உழைப்புக்கு சான்று.

எமன்  படக் கதை ‘நான்’ படம் இயக்கும்போதே என்னிடம் தயாராக இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் அந்தக் கதையை நான் நல்ல மாஸ் இமேஜ் உள்ள ஸ்டார் நடிகருக்கு செய்து வைத்து இருந்கேன். இன்று  அந்தக் கதைக்கு முற்றிலும் பொருத்தமாக  விஜய் ஆண்டனி  வளர்ந்து இருப்பதே அவரது வெற்றிக்கு அத்தாட்சி.

‘எமன்’ தலைப்பு  கதைக்கு  பொருத்தமாக இருக்கும். நாம் பொதுவாக எண்ணுவதைப்  போல் எமன் என்பவர் மரணத்துக்கு மட்டுமே கடவுள்  அல்ல. அவர் தர்மத்தை காக்கும் கடவுளும் ஆவார்.  இந்தப் படத்தின் கதைக்  கரு வரும் நாட்களில் பேசப்படும் படமாக இருக்கும்.

‘எமன்’ முற்றிலும் ஜனரஞ்சகமான, எல்லா தரப்பினரும் ரசிக்கக் கூடிய படமாக இருக்கும். தமிழ் திரை ரசிகர்களுக்கு தரமான  பொழுது போக்கு படங்களை தர வேண்டும் என்று தீர்மானமான முடிவுடன் இருக்கும் லைகா  தயாரிப்பு நிறுவனத்தினருக்கு முற்றிலும் ஏற்ற படமாக இந்த ‘எமன்’ இருக்கும்..” என்றார்.

Our Score