கமல்ஹாசனின் தோல்வி திட்டமிடப்பட்டதா..?

கமல்ஹாசனின் தோல்வி திட்டமிடப்பட்டதா..?

தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தொகுதி கோவை தெற்கு தொகுதி. காரணம் நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக தேர்தலில் நின்றிருந்ததுதான்.

நிச்சயமாக ஜெயிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க எதிர்பாராமல் தோல்வியைத் தழுவியிருக்கிறார். அதுவும் வெறும் 1,888 வாக்குகள் வித்தியாசத்திலேயே கமல்ஹாசனுக்கு தோல்வி கிடைத்துள்ளது.

பா.ஜ.க., காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் என்று மும்முனை போட்டி நிலவிய அந்தத் தொகுதியில் மொத்தமாக 1,55,000 வாக்குகள் பதிவாகியிருந்தன.

இன்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியபோதிலிருந்தே காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருடன் கடுமையான போட்டியில் இருந்தார் கமல்ஹாசன். முதலில் எண்ணப்பட்ட தபால் ஓட்டுக்களில் மயூரா ஜெயக்குமார்தான் முன்னிலை வகித்தார். ஆனால், திடீரென்று இந்த தபால் ஓட்டு்க்களை எண்ணும் பணி நிறுத்தப்பட்டு வாக்குப் பெட்டிகளில் கொண்டு வரப்பட்டு அதிலிருந்த வாக்குகள் எண்ணப்பட்டன.

முதல் சுற்றின் முடிவில் கமல்ஹாசன் முதல் இடம், மயூரா ஜெயக்குமார் இரண்டாமிடம், வானதி சீனிவாசன் மூன்றாவது இடம் பிடித்தனர். மேலும் தொடர்ந்து எண்ணியபோது 7-வது சுற்றுவரையிலும் மயூரா ஜெயக்குமார்தான் முன்னிலை வகித்தார்.

8-வது சுற்றில் கமல் முன்னிலை வகிக்க, வானதி சீனிவாசன் இரண்டாம் இடத்துக்கு முன்னேற, மயூரா மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். 18-வது சுற்றுவரையிலும் இதேநிலைதான் நீடித்திருந்தது.

19-வது சுற்றில்தான் வானதி மீண்டும் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு, மயூரா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ஆனால், அதன் பிறகு காங்கிரஸ் பலம் குறைந்து கொண்டே போய் மீண்டும் மூன்றாம் இடத்துக்குச் சென்றது. இரண்டாம் இடம் வந்த வானதி, அடுத்தடுத்த சுற்றுக்களில் கமலுக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்து வந்தார்.

ஆனாலும், கமல் முதல் இடத்திலேயே இருந்து வந்தார். அதிகபட்சம் 8-வது சுற்றில் 2,912 வாக்குகள் முன்னிலை வகித்ததுதான் கமல்-வானதி இடையேயான பெரிய வித்தியாசம்.

இப்படியே தொடர்ந்து 22-வது சுற்றுகள்வரை முன்னிலை வகித்த கமல், 23-வது சுற்றில் இரண்டாவது இடத்துக்குச் சென்றார். அப்போது 890 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் முன்னிலைக்கு வந்தார்.

அதன் பிறகு, இந்த மாற்றம் மாறவேயி்லலை. 24-வது சுற்றின் முடிவில் வானதி 1,235 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

இன்னும் இரண்டு சுற்றுகளும், தபால் வாக்குகள் மட்டுமே எண்ண வேண்டியிருந்தபோது,  குறைந்த வாக்கு வித்தியாசமும் என்பதால், அந்த இடத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது.

இந்த நேரத்தில் திடீரென்று “நாங்கள் சாப்பிடப் போகிறோம்…” என்று சொல்லிவிட்டு வாக்கு எண்ணிய அதிகாரிகள் தங்களது குழுவுடன் எழுந்து சென்றுவிட்டார்கள். “இது எதற்கு இப்போது…? 7 மணிக்கே இரவு சாப்பாடா..?” என்று ஏஜெண்ட்டுகளும் ஆச்சரியப்பட்டார்கள்.

இந்த நேரத்தில் அந்த வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசனும், வானதி சீனிவாசனும் அருகருகே அமர்ந்திருந்தனர். கமல் எந்த அசைவும் இல்லாமல் நடப்பதை உற்று கவனித்துக் கொண்டிருந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

சாப்பிட்டுவிட்டு வந்த அலுவலர்கள் மீண்டும் வாக்குகளை எண்ணத் தொடங்கினார்கள். இப்போது இந்த 25-வது சுற்றிலும் வானதியே முன்னிலை வகித்தார்.

கடைசிச் சுற்று எண்ணப்பட்டபோது பரபரப்புக்குக் குறைவில்லை என்றாலும், பா.ஜ.க-வினர் உற்சாகமாகவே காணப்பட்டனர். காரணம், அ.தி.மு.க., பா.ஜ.க. வலுவாக உள்ள பகுதிகளின் பெட்டிகள்தான் அது என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பா.ஜ.க-வினர். `பாரத் மாதாகி ஜே’ என கோஷம் எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

கடைசியாக எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் காங்கிரஸுக்கு 720-ம், பா.ஜ.க-வுக்கு 582-ம், ம.நீ.ம-வுக்கு 394 வாக்குகளும் கிடைத்தன. அந்த முடிவுகளும் முடிவில் எந்தத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

கடைசியாக 1,888 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுவிட்டார்.

கமல்ஹாசன் தன் தோல்வியை உணர்ந்து கொண்டு மிக நாகரிகமாக வானதிக்கு வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு மையத்தைவிட்டு வெளியேறினார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம்’ போட்டியிட்ட இரண்டாவது தேர்தலான இந்தத் தேர்தலில் கமல் ஒருவராவது ஜெயித்தாக வேண்டும் என்று கடுமையாக உழைத்தார்கள் அந்தக் கட்சியினர்.

கமல்ஹாசனும் தனது தொகுதியிலேயே மிக அதிக நாட்கள் இருந்து பிரச்சாரம் செய்து வந்தார். அவருக்காக நடிகை சுஹாசினியும், அவரது மகள்களான அக்சரா ஹாசனும், ஸ்ருதிஹாசனும்கூட தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள்.

இத்தனை செய்தும், இத்தனை உழைத்தும் தோல்வியா என்று கமலின் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

அதோடு கடைசி நேரத்தில் ஏன் 1 மணி நேரம் ஓட்டு எண்ணிக்கையை அலுவலர்கள் நிறுத்தினார்கள் என்று கேள்வி கேட்கிறார்கள் கமல் கட்சித் தொண்டர்கள். மீண்டும் தபால் ஓட்டுக்களை எண்ண வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை தேர்தல் அலுவலர் நிராகரித்ததும் அவர்களது சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

ஆனால், நடிகர் கமல்ஹாசனோ பெருந்தன்மையாக தனது தோல்வியை ஒப்புக் கொண்டு வானதிக்கு வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு என்பது கமலுக்குத் தெரியும் என்பதால் அவர் இந்தத் தோல்வியினால் துவண்டுவிடாமல் மேலும் வீரியமாக மக்கள் பணியாற்றுவார் என்பது மட்டும் உறுதி.

Our Score