full screen background image

சட்டப் பேரவைத் தேர்தலில் திரை நட்சத்திரங்களின் வெற்றியும், தோல்வியும்..!

சட்டப் பேரவைத் தேர்தலில் திரை நட்சத்திரங்களின் வெற்றியும், தோல்வியும்..!

தமிழகத்தில் நடந்து முடிந்திருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல பிரமுகர்களும், பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்டனர்.

அவர்களில் நடிகர் கமல்ஹாசன் தான் தலைவராக இருக்கும் ‘மக்கள் நீதி மையம்’ கட்சியின் சார்பாக கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார்.

நடிகரும், இயக்குநருமான சீமான் ‘நாம் தமிழர்’ கட்சியின் சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார்.

நடிகை ஸ்ரீப்ரியா ‘மக்கள் நீதி மையம்’ கட்சியின் சார்பில் சென்னை, மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் ‘திராவிட முன்னேற்றக் கழக’த்தின் சார்பில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டார்.

நடிகை குஷ்பூ, ‘பாரதீய ஜனதா கட்சி’யின் சார்பில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டார்.

நடிகர் சினேகன் ‘மக்கள் நீதி மையம்’ கட்சியின் சார்பில் சென்னை, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.

நடிகர் மன்சூர் அலிகான் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார்.

நடிகர் மயில்சாமி விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார்.

நடிகர் ராஜேந்திரநாத் ‘தேசிய முற்போக்கு திராவிடர் கழக’த்தின் சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டார்.

தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் ‘மக்கள் நீதி மையம்’ கட்சியின் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார்.

மேலும் சென்னை ரோகிணி தியேட்டர் உரிமையாளரான வினோஜ் பி.செல்வம் சென்னை துறைமுகம் தொகுதியில் ‘பாரதீய ஜனதா கட்சி’யின் சார்பில் போட்டியிட்டார்.

இதேபோல் ராயபுரம் ஐ டிரீம்ஸ் தியேட்டர் உரிமையாளரான மூர்த்தி, ராயபுரம் தொகுதியில் ‘திராவிட முன்னேற்றக் கழக’த்தின் சார்பில் போட்டியிட்டார்.

இதற்கிடையில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் திரைப்பட நடிகர் விஜய் வசந்த், ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.

கடந்த ஏப்ரல் 6-ம் தேதியன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்குத் துவங்கியது.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி அமோக வெற்றியைப் பெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட ‘மக்கள் நீதி மையம்’ கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெறும் 1,708 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளரான இயக்குநர் சீமான், 48,597 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஸ்ரீப்ரியா 14,094 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளார். 

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின் 93,285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை, விருகம்பாக்கம் தொகுதியில் ‘மக்கள் நீதி மையம்’ கட்சியின் சார்பில் போட்டியிட்ட பாடலாசிரியர் சினேகன் தோல்வியடைந்துள்ளார். இவர் பெற்ற வாக்குகள் 16,939.

இதே விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திரைப்பட நகைச்சுவை நடிகரான மயில்சாமி மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று படு தோல்வியடைந்துள்ளார். மயில்சாமி பெற்றுள்ள வாக்குகள் – 1440.

‘ஜிப்ஸி’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான S.அம்பேத்குமார் வந்தவாசி சட்டப் பேரவைத் தொகுதியில் ‘திராவிட முன்னேற்றக் கழக’த்தின் சார்பில் போட்டியிட்டு 1,02,064 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கோவை, தொண்டாமுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட நடிகர் மன்சூரலிகான் 428 வாக்குகளை மட்டுமே பெற்று மிகப் பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறார்.

நடிகர் ராஜேந்திரநாத் ‘தேசிய முற்போக்கு திராவிடர் கழக’த்தின் சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 2816 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் ‘மக்கள் நீதி மையம்’ கட்சியின் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு 3106 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

மேலும், சென்னை ரோகிணி தியேட்டர் உரிமையாளரான வினோஜ் பி.செல்வம் சென்னை துறைமுகம் தொகுதியில் ‘பாரதீய ஜனதா கட்சி’யின் சார்பில் போட்டியிட்டு 32,043 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

இதேபோல் ராயபுரம் ஐ டிரீம்ஸ் தியேட்டர் உரிமையாளரான மூர்த்தி, ராயபுரம் தொகுதியில் ‘திராவிட முன்னேற்றக் கழக’த்தின் சார்பில் போட்டியிட்டு 64,424 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை, ஆயிரம் விளக்குத் தொகுதியில் ‘பாரதீய ஜனதா கட்சி’யின் சார்பில் போட்டியிட்ட நடிகை குஷ்பூ 39,405 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

கன்னியாகுமரி பாராளுமன்றத் தேர்தலில் ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ கட்சியின் போட்டியிட்ட திரைப்பட நடிகர் விஜய் வசந்த் 5,76,037 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இப்படி தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்தச் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டாலும், நடிகர் உதயநிதி ஸ்டாலினும், தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமாரும், ஐ டிரீம்ஸ் தியேட்டர் உரிமையாளரான மூர்த்தியும், பாராளுமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் வசந்தும்தான் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Our Score