தமிழக சட்டப் பேரவைக்கு தற்போது நடைபெற்ற தேர்தலில் நடிகை குஷ்பூ தோல்வியடைந்தது திரையுலகத்தில் மட்டுமல்ல.. அரசியல் களத்திலும் பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.
நடிகை குஷ்பூ சென்னையில் ‘ஆயிரம் விளக்கு தொகுதி’யில் ‘பாரதீய ஜனதா கட்சி’யின் சார்பில் போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலில் அவர் 31,529 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். குஷ்பூ பெற்ற வாக்குகள் 39,930. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான டாக்டர் எழிலன் பெற்ற வாக்குகள் 71,459.
குஷ்பூவின் இந்தத் தோல்விக்கான காரணங்கள் என்ன என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்த குஷ்பூ 2020 அக்டோபர் மாதம் 22-ம் தேதியன்று காங்கிரஸில் இருந்து விலகி, பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.
2021 சட்டப் பேரவைத் தேர்தலை குறி வைத்தே குஷ்பூ பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தக் கட்சிக்காகவும் உழைக்கத் துவங்கிய குஷ்பூவுக்காக இந்தத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியைக் கேட்டது பா.ஜ.க.
ஆனால் கூட்டணி கட்சியான அதிமுக அந்தத் தொகுதியை ‘பாட்டாளி மக்கள் கட்சி’க்கு ஒதுக்கிவிட்டு, ‘ஆயிரம் விளக்கு தொகுதி’யை குஷ்பூவுக்குக் கொடுத்தது. குஷ்பூவும் வேறு வழியில்லாமல் இந்தத் தொகுதியை வாங்கிக் கொண்டு தேர்தல் களத்தில் குதித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் குஷ்பூ செல்லுமிடமெல்லாம் பெண்கள் கூட்டம் மொய்க்க.. முதல் சில நாட்களில் மீடியாக்களே குழம்பிப் போயின. நிச்சயமாக குஷ்பூ ஜெயித்துவிடுவார் என்றே அவர்கள் எழுதத் துவங்க.. குஷ்பூவும் இதை நம்பி தனக்காக வேறு எந்த திரை நட்சத்திரமும் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தேவையில்லை என்று தன் கட்சித் தலைமையிடம் சொல்லிவிட்டார்.
குஷ்பூவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய நினைத்திருந்த காயத்ரி ரகுராம், நடிகை நமீதா போன்றோர் இதனால் ஏமாற்றமடைந்தனர். அதேபோல் இந்தத் தேர்தல் களத்தில் பணத்தைச் செலவழிக்கும் பொறுப்பை குஷ்பூவின் கணவர் சுந்தர்.சி ஏற்றுக் கொண்டார்.
இதனால் மன வருத்தமடைந்த கட்சியின் சீனியர் நிர்வாகிகள் பலரும் வேறு தொகுதிக்கு தேர்தல் பணிக்காக சென்றுவிட்டார்கள். கடைசி கட்டத்தில் குஷ்பூ சில தொண்டர்களையும், சில நிர்வாகிகளையும் மட்டுமே வைத்துக் கொண்டு தேர்தல் பரப்புரை செய்து வந்தார்.
ஏற்கெனவே தி.மு.க.வில் இருந்து விலகியபோது குஷ்பூ திமுக பற்றி கூறியிருந்த வார்த்தைகளால் கோபமாகியிருந்த திமுக தொண்டர்கள் ஒரு வெறியோடு.. “இந்தத் தேர்தலில் குஷ்பூவைத் தோற்கடித்தே தீர வேண்டும்…” என்று கங்கணம் கட்டி வேலை செய்தனர்.
தேர்தல் களத்தில் மிக நீண்ட அனுபவம் கொண்ட தி.மு.க.வை இப்போதுதான் களம் கண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சியும், குஷ்புவும் எதிர்கொள்ள முடியவில்லை.
அதோடு தமிழகம் முழுவதிலும் பாரதீய ஜனதா கட்சிக்கு இருந்த எதிர்ப்புணர்வும், கூட்டணி கட்சிகளின் பாராமுகமும் சேர்ந்து கடைசியாக குஷ்பூவுக்கு தோல்வியைக் கொடுத்துவிட்டன.
குஷ்பூ 39,930 வாக்குகளைப் பெற்றிருந்தாலும், 31,529 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
இதே தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு 4 பேர் வெற்றி பெற்றிருந்தும், அவர்களைவிடவும் தமிழகம் முழுவதும் பிரபலமான தன்னால் வெற்றி பெற முடியவில்லையே என்ற வருத்தம் குஷ்பூவுக்கு நிறையவே ஏற்பட்டுள்ளது.
இந்தத் தோல்விக்குப் பின்பு அவர் பாரதீய ஜனதா கட்சியில் எப்படி செயல்படுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.