இரும்பு மனிதன் – சினிமா விமர்சனம்

இரும்பு மனிதன் – சினிமா விமர்சனம்

ஷங்கர் மூவிஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஜோஸப் பேபி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் சந்தோஷ், அர்ச்சனா, கஞ்சா கருப்பு, மதுசூதனன், நிஷாந்த், அகில், திலீப், பேபி லிஸாந்த், பேபி விபின், போராளி திலீபன், அனிதா சம்பத், தன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கே.கோகுல், இசை – கே.எஸ்.மனோஜ், படத் தொகுப்பு – எஸ்.பி.அஹமது, கலை இயக்கம் – கே.மதன், பாடல்கள், மோகன்ராஜன், நிரஞ்சன் பாரதி, டிஸ்னி, பாடகர்கள் – மூக்குத்தி முருகன், சிம்பு, சத்யபிரகாஷ், ரஞ்சித், நிவாஸ், நடன இயக்கம் – செல்வி, சண்டை இயக்கம் – ஆக்ஷன் பிரகாஷ், தயாரிப்பு நிர்வாகி – ஆம்பூர் ஜே.நேதாஜி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், எழுத்து, இயக்கம் – டிஸ்னி.

சென்னையில் திருவல்லிக்கேணியில் முதியோர் இல்லம் நடத்தி வருகிறார் சென்னையின் மிகப் பெரிய தொழிலதிபரான ‘சுந்தரம்’ என்னும் சந்தோஷ் பிரதாப். இவருடைய வாழ்க்கைக் கதையைப் பற்றிக் கேட்க வருகிறார் தனியார் தொலைக்காட்சி நிருபர்.

வந்தவரிடம் சந்தோஷ் பிரதாப்பின் இணை பிரியாத தோழரான ‘முனி கண்ணு’ என்னும் கஞ்சா கருப்பு சந்தோஷின் வாழ்க்கைக் கதையை முழுமையாகச் சொல்கிறார்.

சந்தோஷ் பிரதாப் அனாதையாக வளர்ந்தவர். சிறுவனாக வளர்ந்தபோதே படிக்க வைக்க யாருமில்லாமல் ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கிறார். பின்பு ஹோட்டல் தோழிலில் நல்ல தேர்ச்சி பெற்று தன்னுடைய இளம் வயதில் தானே சொந்தமாக ஒரு ஹோட்டலை விருகம்பாக்கத்தில் வைத்திருக்கிறார்.

தன்னுடைய ஹோட்டலில் திருட வந்த கஞ்சா கருப்புவை தன் ஹோட்டலிலேயே வேலை கொடுத்து தங்க வைக்கிறார். நாளடைவில் கஞ்சா கருப்பு சந்தோஷூக்கு உடன் பிறவா அண்ணனாக உருவெடுக்கிறார்.

சந்தோஷ் தன்னை மாதிரியே அனாதையான 3 குழந்தைகளை தானே வளர்க்கிறார். அவர்களும் வளர்கிறார்கள். சந்தோஷின் தொழிலும் வளர்கிறது.

திடீரென்று சந்தோஷூக்கு அந்தப் பகுதியில் வசித்து வரும் அர்ச்சனா மீது காதல் வருகிறது. இந்தக் காதல் ஜெயித்து திருமண நிச்சயத்தார்த்தம்வரையிலும் செல்கிறது. ஆனால் அர்ச்சனாவுக்கு சந்தோஷூடன் இருக்கும் பையன்களைப் பிடிக்காததை அறியும் சந்தோஷ்.. அந்த 3 பசங்களுக்காக தனது காதலையே தியாகம் செய்கிறார். இதற்குப் பிறகு யாரை திருமணம் செய்தாலும் இந்தப் பையன்களை தன்னிடமிருந்து பிரித்துவிடுவார்களே என்றெண்ணி கல்யாணமே செய்து கொள்ளாமல் தனித்து வாழ்கிறார்.

இடையில் சந்தோஷின் ஹோட்டலை விலைக்கு வாங்க விரும்பி வரும் மதுசூதனன் அண்ட் கோ-விடம் சண்டையிட்டு அவர்களை விரட்டியடிக்கிறார் சந்தோஷ். நாட்கள் உருண்டோட… இப்போது சந்தோஷ் மிகப் பெரிய தொழிலதிபர்.

சென்னையில் மட்டும் பல கிளைகள் கொண்ட மிகப் பெரிய ஹோட்டல் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார். ஆனால் இவர் வளர்த்தெடுத்த பிள்ளைகள் மூவருமே சகல கெட்டப் பழக்கங்களுடன் வளர்ந்திருக்கிறா்கள். வீட்டிலிருந்து பணத்தைத் திருடி கிரிக்கெட் மேட்ச்சுக்கு பெட் கட்டி தோற்கிறார்கள்.

இந்த நிலைமையில் முதல் மகன் மதுசூதனனின் மகளைக் காதலிக்கிறான். அவனது காதலுக்கு சந்தோஷ் ஓகே சொல்கிறார். சந்தோஷின் மகன்தான் இவன் என்பதையறியும் மதுசூதனன் மகனை வைத்தே சந்தோஷின் அனைத்துச் சொத்துக்களையும் பறிக்க திட்டமிடுகிறார்.

இது எதுவுமே தெரியாமல் சந்தோஷ் பாச உணர்ச்சியில் மகன்களுக்கு அனைத்துவித உதவிகளையும் செய்கிறார். ஆனால் மகன்களோ மதுசூதனனின் தூண்டுதலால் சந்தோஷிடமிருந்து அனைத்துச் சொத்துக்களையும் ஏமாற்றி கையெழுத்து வாங்கி பிடுங்கிக் கொள்கிறார்கள்.

சந்தோஷையும் நடுத்தெருவுக்கு தள்ளி விடுகிறார்கள். ஆனாலும் மீண்டும் எழுவேன் என்று சந்தோஷ் மீள முயற்சிக்கிறார். அவர் மீண்டாரா.. இல்லையா.. அவருடைய மகன்களின் கதி என்ன ஆனது.. என்பதே மீதிக் கதை.

இதுவரையிலும் வில்லன் கேரக்டர்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த சந்தோஷ் பிரதாப்புக்கு இந்தப் படம் நாயகன் வேடம் தந்திருக்கிறது. படம் முழுவதையும் தாங்க வேண்டிய கட்டாயம்.

இள வயது சந்தோஷ் மிக நிதானமாக தனது கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். சினிமா காதல் போலவே பார்த்தவுடன் காதலாகும் அவரது குணம் ஆச்சரியமில்லை. என்றாலும், அந்தக் காதல் உணர்வை வெளிப்படுத்தும் இடமும்.. காதல் காட்சிகளும் கொஞ்சம் ருசிகரம்.

கஞ்சா கருப்புவுக்கும் அவருக்குமான காட்சிகளில் அழுத்தம் கொடுத்து நடித்திருக்கிறார். முதிய வேடத்திற்காக செயற்கை மேக்கப்பில் வசனத்தை ஏற்றி, இறக்கி, நிறுத்தி அவர் பேசும் பேச்சு நாடகப் பாணியிலானது.. மாற்றியிருக்கலாம்.

இன்னும் ஏதாவது வித்தியாசமாக செய்தால்தான் சந்தோஷ் பிரதாப்பின் பெயர் பிரசித்தி பெறும்.

நாயகியாக சில காட்சிகளில் மட்டுமே வருகிறார் அர்ச்சனா. கேமிராவுக்கு ஏற்ற முகம் என்றாலும் துள்ளலான நடிப்பில்லை. வந்த வேகத்திலேயே மேகம் போல மறைகிறார்.

படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் வந்து கதையைச் சொல்லும் கஞ்சா கருப்புவுக்கு மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல வேடம். தனக்கென்று ஒரு தனி பாணியை இன்னமும் உருவாக்காமல் அப்படியே நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு. ஆனால் டயலாக் டெலிவரியில் கஞ்சாவின் ஸ்டைல் தனிதான்..! இரண்டாம் பாதியில் உணர்வுபூர்வமான காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார் கருப்பு.

வழக்கமான வில்லன் என்பதால் வித்தியாசம் காட்ட முயற்சிக்காமல் எப்போதும் போலவே நடித்திருக்கிறார் மதுசூதனன். இறுதியில் நாடகப் பாணியில் திரைக்கதையை முடித்திருப்பதால் இவர் நல்லவராவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. மகன்களாக நடித்திருக்கும் நிஷாந்த், அகில், திலீப் மூவருக்கும் பெரிய அளவுக்கு நடிப்புக்கான ஸ்கோப் இல்லை. என்றாலும் தங்களது வேலையை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

கோகுலின் ஒளிப்பதிவு படம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. கே.எஸ்.மனோஜின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். தொழில் நுட்பத்தில் படம் மிகவும் பின்தங்கியிருக்கிறது. கலை இயக்குநர் படாதபாடுபட்டு 1990-ம் வருடத்தைக் காட்டியிருக்கிறார் என்பது தெரிகிறது.

பிள்ளைகளை முழுமையாக நம்பினால் என்ன நிலைமை ஏற்படும் என்பதை எடுத்துச் சொல்லும் 101-வது படமாக இது வந்திருக்கிறது.

‘ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘வாழ்க்கை’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘படிக்காதவன்’, இயக்குநர் விசு மற்றும் இயக்குநர் வி.சேகரின் பல திரைப்படங்களில் வந்த கதைகளையே மெகா சீரியல் திரைக்கதையில் படமாக்கியிருக்கிறார்கள்.

சில இடங்களில் மெகா சீரியல்களே தோற்றுப் போகும் அளவுக்கு மொக்கையான திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். இதனாலேயே படம் மீதான ஆர்வம் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம்மிடமிருந்து காணாமல் போனது..!

இருந்தாலும் இப்போதைய மின்னல் வேக கொரானா வைரஸ் யுகத்தில்.. மறந்து போன நமது வாழ்க்கைச் சூழலை ஞாபகப்படுத்தி… பிள்ளைகள்-பெற்றோர்கள் இருவருக்குமான தொடர்பையும், நட்பையும்.. எதிர்கால வாழ்க்கையையும் யோசிக்க வைக்கும்விதமாகவும் வந்திருக்கும் இத்திரைப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்தான்..!

Our Score