மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ராஜா கருப்பசாமியின் இயக்கத்தில் உருவாகி இன்றைக்கு தமிழகத்தில் வெளியாகி இருக்கும் ‘மொத ராத்திரி’ என்ற படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சுமித்ரா தேவி, படம் பார்த்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.
தனது பள்ளி காலத்திலேயே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர் சுமித்ரா தேவி.
உணர்வுப்பூர்வமான கண்ணகி கதாபாத்திரத்தை ஏற்று பள்ளி மேடையில் நடித்தது, அவரது நடிப்புப் பயணத்திற்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.
குரோம்பேட்டையில் உள்ள வைஷ்ணவ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள சுமித்ரா பரத நாட்டியத்தில் தேர்ந்தவர்.
இந்த நடனப் பயிற்சி, முகபாவனைகள் மற்றும் உடல் மொழி ஆகியவை அவருக்கு இயல்பான ஆளுமையையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது.
இந்த ’மொத ராத்திரி’ திரைப்படத்தில் ‘கீர்த்தி’ என்ற கதாபாத்திரத்திற்கு தேவையான வசீகரம் மற்றும் அமைதியை தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளார் சுமித்ரா,
நடிகைகள் நந்திதா தாஸ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போலவே சுமித்ராவின் மாநிற அழகும் தனித்திறமையும் திரையில் அவருக்கு கூடுதல் வசீகரத்தை கொடுத்துள்ளது.
அதிகப்படியான அலங்காரம் தேவையில்லாமலேயே பார்வையாளர்களைக் கவரக் கூடிய மண் சார்ந்த தோற்றம் அவரிடம் உள்ளது.
அதேபோல, சுமித்ராவின் தெளிவான தமிழ் உச்சரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் பேசும் எளிய வசனங்கள்கூட அவரை தனித்து காட்டுகிறது.
“நான் முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகை” என்கிறார் சுமித்ரா. விஜய்யின் திரை வசீகரம், ஒழுக்கம் மற்றும் ரசிகர்களுடன் இணையும் திறன் ஆகியவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார். “இப்போதைய இளைஞர்களுக்கு விஜய் மிகப் பெரிய உத்வேகம்” என்கிறார். அதேபோல், “நடிகை தமன்னா பாட்டியாவின் நடனத்தையும் நான் மிகவும் ரசிப்பேன்” என்கிறார்
ஒரே திரைப்படத்தில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களுக்கு ஒரு சிறந்த தளத்தை உருவாக்கி, உற்சாகமளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு சுமித்ரா நன்றி தெரிவித்துள்ளார்.
“இந்த ’மொத ராத்திரி’ படத்தின் மூலம் நான் எனது திரைப் பயணத்தைத் தொடங்கியிருப்பது எனது அதிர்ஷ்டம்” என்கிறார்.
பள்ளி மாணவியாக கண்ணகி கதாபாத்திரத்தில் நடித்ததிலிருந்து துவங்கி, இப்போது ’மொத ராத்திரி’ படத்தின் ‘கீர்த்தி’யாக சுமித்ராவின் பயணம் தொடங்கியுள்ளது.
அவரது மாநிற அழகு, முகபாவனைகள், நடனத் திறமை மற்றும் தமிழ் உச்சரிப்பு போன்றவை தமிழ் திரைத்துறைக்கு மற்றுமொரு திறமையான நடிகை கிடைத்துவிட்டதை சுட்டிக் காட்டுகிறது.









