நடிகர் விஜய் தான் வாங்கியிருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பில் விஜய் மீது காட்டமான சில வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார் நீதிபதி.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அந்த மனு இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அடங்கிய பென்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜய் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், “நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை நாங்கள் எதிர்க்கவில்லை அதை மதிக்கிறோம். அந்த வரியைக் கட்டுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் நீதிமன்றத்தை அணுகியதற்காக எங்கள் கட்சிக்காரருக்கு அபராதம் விதித்ததையும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
மற்ற குடிமக்களை போல நடிகர்களுக்கும் நீதிமன்றத்தை நாட முழு உரிமை உள்ளது. மற்றவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் இது போன்ற உத்தவுகளை பிறப்பிக்காத நிலையில் தன் மீது மட்டும் விமர்சித்தது ஏற்றுக் கொள்ள முடியாது. புகார்தாரரின் தொழில் பற்றி மனுவில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதனால், ஏன் நடிகர் என்பதை மனுவில் குறிப்பிடவில்லை என்று தனி நீதிபதி கேட்டிருக்கத் தேவையில்லை..” என்று வாதாடியிருக்கிறார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் தனி நீதிபதி அளித்த உத்தரவில் இருந்த அபராதம் கட்ட வேண்டும் என்ற தீர்ப்புக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டு வழக்கையும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.