எப்பிக் தியேட்டர்ஸ் (Epic Theatres) நிறுவனம் தயாரித்துள்ள முதல் படம் ‘இனி ஒரு காதல் செய்வோம்.’
இந்தப் படத்தில் புதுமுகம் அஜய் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்வேதா ஷ்ரிம்டன் நடித்துள்ளார். இவர் பல குறும் படங்கள், விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் வர்கீஸ் மேத்யூ, கிஷோர் ராஜ்குமார், விக்னேஷ் சண்முகம், திடியன், மனு பார்த்திபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கோபிநாத் சுகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ஜெய் திலிப் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். பெண் இசையமைப்பாளரான ரேவா இசையமைத்துள்ளார். இவர் விஜய் சேதுபதியின் தயாரிப்பு மற்றும் நடிப்பில், ரெஜினா கேஸண்ட்ரா கதாநாயகியாக நடித்து வெளியான ‘முகில்’ படத்தின் இசையமைப்பாளர் ஆவார். இத்திரைப்படத்தின் இசை அனைவரின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
‘96’ பட புகழ் கவிஞர் கார்த்திக் நேத்தா இந்த படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள ஐந்து பாடல்களையும் பாடகர்கள் சின்மயி, ஸ்வேதா மோகன், ஹரி சரன், தீபக் போன்றோர் பாடியுள்ளனர். மேலும் ‘நிழல்கள்’ ரவியின் குரலில், சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் பாடல், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான ஹரிஹரன் எழுதி, இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தை சென்னை, ஈ.சி.ஆர், பாண்டிச்சேரி, கொடைக்கானல், மற்றும் பல்வேறு இடங்களில் படமாக்கியுள்ளனர்.
1990-களில் பிறந்தவர்களின் கல்லூரி வாழ்க்கையையும், நட்பையும், காதல் மற்றும் பிரிவையும் பிரதிபலிக்கும் வண்ணம் படத்தின் கதை அமைந்துள்ளதாக படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
முழுக்க, முழுக்க காதல் மற்றும் காமெடியுடன் கலகலப்பாக நகரும் திரைக்கதையை எழுதியுள்ளார் இயக்குநர் ஹரிஹரன்.
படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களை வரும் ஆகஸ்டு மாதம் வெளியிடவும், திரைப்படத்தை வரும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிடவும் படக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.