விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ வெற்றிப் படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் IT.D.ராஜா மற்றும் D.R.சஞ்சய் குமார் சார்பில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘காமன்மேன்’.
இந்தப் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். ஹரிப்ரியா கதாநாயகியாக நடிக்க, விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை ‘கழுகு’ பட இயக்குநரான சத்யசிவா இயக்கியுள்ளார்.
சசிகுமாரின் வழக்கமான படங்களின் பாணியில் இருந்து விலகி முற்றிலும் புதிய கதைக் களத்தில் இந்தப் படம் தயாராகி வருகிறது.
இந்தப் படம் துவங்கப்பட்டபோதே ‘காமன்மேன்’ என்கிற டைட்டில் வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டாலும், இதே டைட்டிலை வேறு ஒரு நிறுவனம் தங்களது படத்திற்கு முன் கூட்டியே பதிந்துவிட்ட தகவல் பின்னர்தான் தெரிய வந்தது.

இதனால் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருந்தாலும் ‘காமன்மேன்’ என்கிற டைட்டிலை பயன்படுத்த முடியாத சூழல் உருவானது.
இந்தநிலையில் இந்தப்படத்திற்கு ‘நான் மிருகமாய் மாற’ என புதிய டைட்டிலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.