‘இந்தியன்-2’ படப்பிடிப்பு விபத்தில் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது

‘இந்தியன்-2’ படப்பிடிப்பு விபத்தில் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது

லைகா நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கி வரும் ‘இந்தியன்-2’ திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்திற்காக சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது எதிர்பாராதவிதமாக கிரேன் அறுந்து விபத்து ஏற்பட்டதில் உதவி இயக்குநர் மது, சங்கரின் இணை இயக்குநர் கிருஷ்ணா, உதவி நடன இயக்குநர் சந்திரன் ஆகிய 3 பேர் பலியானார்கள். மேலும் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இறந்தவர்களின் உடல்களுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களிடத்தில் பேசும்போது, “இந்த இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும்...” என கூறினார்.

அப்படி சொன்னது போலவே இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர், லைகா நிறுவனம் ஆகிய மூவரும் இணைந்து நஷ்ட ஈட்டு தொகையை வழங்கினார்கள்.

இந்த நிதியுதவி வழங்கும் விழா இன்று காலை பெப்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

உயிரிழந்த மூவருக்கும் தலா ஒரு கோடி, படுகாயமடைந்த ராமராஜனுக்கு 90 லட்சம், சிறு காயமடைந்தவருக்கு 10 லட்சம் என மொத்தம் 4 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.

உயிரிழந்த திரு.சந்திரனின் சார்பில் அவரது மனைவி ராதா அவர்களும், உதவி இயக்குநர் மதுவின் சார்பில் அவரது தந்தை மால கொண்டையாவும், இணை இயக்குநர் கிருஷ்ணாவின் சார்பில் அவரது மனைவி அமிதாவும், லைட்மேன் திரு.ராமராஜனின் சார்பில் அவரது சகோதரியின் இந்த நஷ்ட ஈட்டுத் தொகையினை பெற்றுக் கொண்டார்கள்.

இதில் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் 2 கோடி ரூபாயையும், நடிகர் கமல்ஹாசன் 1 கோடியையும், இயக்குநர் ஷங்கர் 1 கோடி ரூபாயையும் வழங்கினார்கள்.

இறுதியாக இயக்குநர் ஷங்கர் பேசும்போது, "உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இது போன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக்கொள்வோம்..." என்று கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, "இந்தப் படப்பிடிப்பு விபத்து எங்களுக்குக் கிடைத்த ஒரு கசப்பான பாடம். இனிமேல் அரசு வகுத்துள்ள சட்ட திட்டங்களின்படி நடப்போம்." என்றார்.