“பாரதிராஜாவே தலைவராக வரட்டும்…” – தயாரிப்பாளர் சங்கத்தினர் அழைப்பு..!

“பாரதிராஜாவே தலைவராக வரட்டும்…” – தயாரிப்பாளர் சங்கத்தினர் அழைப்பு..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பலவித பஞ்சாயத்துக்கள் கியூவில் நிற்கின்றன. இப்போது புதிதாக இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் தலைமையில் 'தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்' என்னும் புதிய சங்கமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சங்கத்தில் துணைத் தலைவர்களாக எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன் ஆகியோரும் பொதுச் செயலாளராக டி.சிவாவும் பொருளாளராக தியாகராஜனும் இணை செயலாளர்களாக லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பாரதிராஜா தலைமையில் முக்கியமான.. தற்போது திரைப்படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் அணி வகுத்திருப்பதால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக கலந்துரையாடல் நடத்த வேண்டி இன்று தங்களது சங்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதன்படி இன்று காலை 11 மணிக்கு அண்ணா சாலையில் பிலிம் சேம்பர் வளாகத்தில் இருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கூடி இது குறித்து பேசினார்கள்.

இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், கே.ராஜன், கலைப்புலி ஜி.சேகரன், இயக்குநரும், தயாரிப்பாளருமான வி.சேகர், தயாரிப்பாளர் தாணு மற்றும் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியில் தயாரிப்பாளர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தயாரிப்பாளர்கள் சார்பில் பேசிய தயாரிப்பாளர் தாணு, "தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற பாரதிராஜா தொடங்கியுள்ள புதிய சங்கம், தமிழ் சினிமாவை பின்னுக்கு தள்ளிவிடும். அவர் ஆரம்பித்திருக்கும் புதிய சங்கத்தை கலைக்க வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு பாரதிராஜாதான் வழிகாட்ட வேண்டும். பாரதிராஜா சமாதானத்திற்கு முன்வந்தால் மற்ற பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தி கொண்டு, தலைவர் பதவிக்கு அவரையே ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கவும் தயார்..." என்றார்.