இசையமைப்பாளர் இமானுக்குக் கிடைத்திருக்கும் புதிய பட்டம் ‘இசைப் பேரறிவாளன்’..!

இசையமைப்பாளர் இமானுக்குக் கிடைத்திருக்கும் புதிய பட்டம் ‘இசைப் பேரறிவாளன்’..!

திரையுலகில் கொஞ்சம் பெரிய ஆளாகிவிட்டாலே தங்களது பெயருக்கு முன்பாக ஏதாவது பட்டப் பெயர் சூட்டிக் கொள்வது சிலரது வழக்கம். பலருக்கும் பட்டங்களும், புகழாரங்களும் அவர்களது ரசிகர்களால் வழங்கப்படுவது..

நடிகர், நடிகைகளும் இல்லாமல் இசையமைப்பாளர்களுக்கும் இது போல பட்டங்களை இசை ரசிகர்கள் வழங்குவார்கள்.. வழங்கியிருக்கிறார்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ‘மெல்லிசை மன்னர்’, இளையராஜாவுக்கு ‘இசை ஞானி’, தேவாவிற்கு ‘தேனிசை தென்றல்’, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘இசைப் புயல்’ என்று பட்டப் பெயர்கள் சூட்டப்பட்டு அது அவர்களின் இன்னொரு பெயராகவே மாறிவிட்டது..

இப்போதைய இசையமைப்பாளர்களில் மெலடி கிங் எ்ன்று சொல்லப்படும் அளவுக்கு பல புதிய இயக்குநர்களால் மிகவும் விரும்பப்படும் இசையமைப்பாளர் டி.இமானுக்கும் ஏதாவது பெயர் கொடுக்க வேண்டுமே என்று நினைத்து ‘இசைப் பேரறிவாளன்’ என்ற பட்டப் பெயரைச் சூட்டிவிட்டார்கள்.

கங்கா சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ‘என்னதான் பேசுவதோ’ படத்திற்கு இமான்தான் இசை. ரவி என்பவர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தி்ன் விளம்பரத்தில்தான் முதல்முறையாக டி.இமானுக்கு ‘இசைப் பேரறிவாளன்’ என்ற அடைமொழியோடு விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

2002-ம் ஆண்டு விஜய் நடித்த ‘தமிழன்’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இமான், இதுவரையிலும் 60 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இப்போது ‘என்னதான் பேசுவதோ’, ‘சிகரம் தொடு’, ‘பேரலை’, ‘தேரோடும் வீதியிலே’, ‘கலக்குற மாப்ளை’, ‘கயல்’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’, ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்..

இமானுக்கு இதில் சம்மதம்தானா என்று தெரியவில்லை.. ஆனாலும் ஏதேனும் ஒரு பட்டத்திற்கு இமான் பொருத்தமானவர் என்பதை அவருடைய சமீப கால வெற்றிப் பாடல்கள் சொல்கின்றன..!

Our Score