பொதுவாக மலையாளப் படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடுவது என்றால் அவைகள் ஜோஷி, ஷாஜி கைலாஷ் போன்ற கமர்ஷியல் இயக்குநர்களின் படங்களாகத்தான் இருக்கும்..
கலைப் படங்கள் என்று சொல்லப்படும் அவார்டு படங்களை டப்பிங்கே செய்ய மாட்டார்கள். மலையாளத்தின் மெதுவாக நகரும் திரைக்கதை வித்தையை நமது தமிழ் ரசிகர்கள் தாங்க மாட்டார்கள் என்பது தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் நன்கு தெரிந்த விஷயம்.
இதனாலேயே மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ்கோபி நடித்த ஆக்சன் படங்களைத்தா்ன் அதிகமாக டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். மற்றபடியான மலையாளப் படங்கள் தமிழகத்தில் மலையாளப் படங்களாகவே வந்து சென்றிருக்கின்றன.
முதல் முறையாக தேசிய விருது பெற்ற ‘ஆதாமிண்டே மகன் அபு’ என்கிற மலையாளப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
2011-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இப்படத்தில் நடித்ததற்காக மலையாள குணச்சித்திர நடிகர் சலீம்குமார் 2011-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருந்தார். படமும் மிகச் சிறந்த படம் என பெயரையும் எடுத்து மலையாளத்தில் ஹிட்டும் ஆகியது.
இந்த சலீம்குமார்தான் சென்ற மாதம் வெளிவந்த ‘நெடுஞ்சாலை’ திரைப்படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அந்தப் படம் ஓரளவு ஓடியதால் சலீம்குமார் தமிழகமெங்கும் தெரிந்தவராகிவிட்டார் என்று நினைத்தார்களோ இல்லையோ.. அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தை தமிழில் டப் செய்துவிட்டார்கள்.
‘ஆதாமின் மகன் அபு’ என்கிற பெயரில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் கதை மனதை உருக வைக்கக் கூடியது. முஸ்லீம் மதத்தினர் தங்களுடைய வாழ்நாள் கடமையாகக் கருதக் கூடிய புனித ஹஜ் யாத்திரைக்கு செல்ல ஆசைப்படுகிறார்கள் வயதான பெரியவர் அபுவும் அவரது மனைவியும். அதற்காக இவர்கள் படும் சிரமங்கள்தான் படத்தின் கதை..!
மது அம்பட் ஒளிப்பதிவு செய்ய.. சலீம் அஹமது எழுதி, இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சலீம்குமார், ஜரீனா வஹாப், கலாபவன் மணி, முகேஷ், நெடுமுடி வேணு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
ஒன்றரை கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு 5 கோடிக்கும் மேல் வசூலை குவித்த இந்தப் படம் நிச்சயம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்..!
பார்க்கத் தவறாதீர்கள்..!