இசைஞானி இளையராஜா தற்போது ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தனது ரசிகர்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் இசைஞானிக்கு நிறைய குழுமங்கள் உண்டு. அவைகளை ஒன்றிணைத்து ஒரே குழுமமாக பயன்படுத்தும்படி தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார் இளையராஜா.
கடந்த வாரம் தனது தாயார் மற்றும் மனைவி சமாதி அமைந்திருக்கும் கம்பம்-குமுளி ரோட்டில் இருக்கும் லோயர் கேம்ப் அருகேயுள்ள தனது தோட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது “இந்த நாற்பதாண்டு காலம் நான் இல்லாமல் போயிருந்தால் தமிழ் இசையுலகம் எப்படி இருந்திருக்கும்…?” என்று தனது ரசிகர்களிடம் கேள்வியை எழுப்பினார் இளையராஜா.
இதற்கு பதிலளித்த பல ரசிகர்கள், “இசை என்பதற்கே அர்த்தம் இல்லாமல் போயிருக்கும்…” என்று உணர்ச்சி பிரவாகத்தில் பதில் கூறினர்.
ஆனால் அதற்கு இளையராஜா சொன்ன பதில் வேறு :
“நல்ல இசை என்பது ஒரு மனிதனைப் பண்படுத்த வேண்டும். மனதை சுத்தமாக வைத்திருக்க உதவ வேண்டும். எத்தனை படங்களில் கத்தியும் ரத்தமும் வன்முறையும் கொப்பளித்தாலும், என் சப்த ஸ்வரம் அதை சரிப்படுத்தும். அந்த வன்முறையைக் குறைத்து நல்ல மனநிலையுடன் உங்களை அந்தப் படத்துக்குள் இழுத்துப் போவதுதான் அந்த இசை.
ஆனால் நான் ஒரு சூழலுக்குரிய இசையை உருவாக்கும்பொழுது அந்த மனநிலையில் போடுவதில்லை. அது தானாக வருவது. சிந்தித்து மண்டையை உடைத்துக் கொண்டு, எதிலிருந்து திருடலாம் என்று யோசித்துப் போடப்படுவதல்ல என் இசை.
‘உங்க பாட்டைக் கேட்காம என்னால தூங்கவே முடியாது சார்’ங்றான்… அதே போல, ‘காலையில் உங்க பாடல்தான் சார் எங்களை எழுப்புது’ங்கறாங்க.. அதே போல இங்கே பேசிய அத்தனை அன்பர்களும் அவங்களோட வாழ்க்கையில பின்னிப் பிணைஞ்ச இந்த இசையைப் பத்தியும் சொன்னாங்க..
இது யார்ன்னால சாத்தியம்..? இந்த நாற்பது வருஷ இசை வந்து… நான் இல்லேன்னு வச்சுக்கங்க… எம்ப்டியா, ஒரு சூனியமா இருந்திருக்காது..? இதை யார் ஏற்படுத்துனது..? என்னை இந்த உலகத்துக்குள்ள ‘போடா கிடடா நாயே’ன்னு கடவுள் என்னை இந்த இசை உலகத்துக்குள்ளயே இருக்க வச்சிட்டான். நல்லவேளை நான் வெளி உலகத்தில் இல்ல…! சப்தஸ்வரங்களுக்குள்ளேயும், இப்படிப் பாடு, அப்படிப் பாடு, இப்படி வாசின்னும் என்னை இசை உலகத்தோடேயே இருக்க வச்சிட்டான்..!!” என்று பேசியிருக்கிறார்.
ஏற்கெனவே இசைஞானி மேல இங்க சில பேருக்கு கடும் வெறுப்பு. மமதை கொண்டவர் இளையராஜா என்பது அவர்களது கணிப்பு. இந்த நேரத்தில், “நான் இல்லைன்னா இந்த்த் தமிழிசை உலகம் சூனியமா இருந்திருக்காது..?” என்கிற இளையராஜாவின் பெருமிதம் வழக்கம்போல பலத்த கண்டனத்தையும், சர்ச்சைகளையும் உருவாக்கிவிட்டது..!
இங்க பேசினாலும் பிரச்சினைதான்.. பேசாட்டியும் பிரச்சினைதான்..!