full screen background image

நாலு நாளைக்கு பெட்ரோல் பங்கை மூடிட்டா என்ன ஆகும்? அதுதான் கதை..!

நாலு நாளைக்கு பெட்ரோல் பங்கை மூடிட்டா என்ன ஆகும்? அதுதான் கதை..!

‘நெருங்கி வா.. முத்தமிடாதே..’ என்ற வாசகத்தை சில ஆட்டோக்களிலும், லாரிகளின் பின்பக்கத்திலும் பார்த்திருக்கலாம்.. இப்போது இதனையே தலைப்பாக வைத்து தனது இரண்டாவது திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

இவரது முதல் படமான ‘ஆரோகணம்’ வெறும் 35 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 3 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.. மேலும் சிறந்த படம் என்ற பெயரையும் எடுத்தது..

அந்த நல்ல பெயரை இரண்டாவது படத்திலும் காப்பாற்றும் பொருட்டு வித்தியாசமான தலைப்புடனும், வித்தியாசமான கதையுடனும் களத்தில் இறங்கியிருக்கிறார்.

“தலைப்பை பார்த்து இது ரொமான்ஸ் படமா..?” என்றால் “இல்லை…” என்கிறார். “ம்… நீங்க எல்லாரும் இப்படி கேட்கணும்னுதான் அப்படி ஒரு தலைப்பே வச்சேன். நீங்க நினைக்கிற மாதிரி வேற ‘எதையோ’ சொல்ல வர்ற படமில்ல இது. நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு நாலு நாளைக்கு பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டால் நாட்டு நிலைமை என்னாகும்..?

திருச்சியிலிருந்து காரைக்காலுக்கு போற லாரி, வழக்கமா நாலு மணி நேரத்துக்குள்ள போய்ச் சேரணும்… ஆனா இந்தப் படத்துல அதுக்கு பதினாலு மணி நேரம் ஆகுது. ஏன்…? இதைத்தான் கொஞ்சம் விறுவிறுப்பா சொல்லியிருக்கேன்…” என்றார்.

“அந்த லாரில அப்படியென்னதான் கொண்டு போறீங்க..?” என்று கேட்டதற்கு கோல்கேட் விளம்பரம்போல் சிரித்தாரே ஒழிய பதில் சொல்லவில்லை. எப்படி, எப்படியெல்லாமோ கேட்டபோதெல்லாம் எல்லாவற்றும் அதே டிரேட் மார்க் சிரிப்புதான்…!(கைவசம் ஒரு ஆயுதம் வைச்சிருக்காங்கப்பா..)

“படத்தின் ஹீரோ ஷபீரை தேடிப் பிடித்தீர்களா..?” என்றால் “அதுவொரு காமெடி கதை…” என்கிறார் லட்சுமி. வேறு ஒரு நடிகரை வரவழைத்திருந்த நேரத்தில் ஷபீர் லட்சுமியை பார்க்கச் செல்ல.. அந்த நிமிடத்தில் சட்டென்று ஒரு எண்ணம் தோன்றி ஷபீரையே ஹீரோவாக்கிவிட்டாராம் லட்சுமி.

இவருக்கு ஜோடியாக பியா நடிக்கிறார். மற்றொரு முக்கிய ரோலில் கன்னடத்தில் சென்ற வருடம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படமான ‘லுசியா’வில் நடித்த  ஸ்ருதி நடித்திருக்கிறார். இவர் பக்கா தமிழ்ப் பொண்ணு.. நன்றாகவே தமிழ் பேசுகிறார். தமிழ்நாட்டில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவராம்..! இந்தப் படத்தில் இவர் இடைவேளைக்கு பின்புதான் வருவாராம். ஆனால் அழுத்தமான கேரக்டர் என்றார் சந்தோஷத்துடன்..!

லட்சுமியின் முதல் படமான ‘ஆரோகண’த்தில் ஹீரோயினாக நடித்த விஜிக்கு இதில் முக்கியமான ரோலாம். ஆனால் என்ன கேரக்டர் என்பதை இருவருமே சொல்ல மறுத்துவிட்டார்கள்.. இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.. தன்னுடைய கேரக்டரை கேட்டவுடன் இதில் நடிக்க தனக்கு சம்பளமே வேண்டாம் என்று கூறிவிட்டாராம் விஜி. (இவரல்லவோ நடிகை..?)

படத்தில் நான்கு பாடல்களாம்.. செப்டம்பர் 15-ல் இருந்து 30-ம் தேதிக்குள்ளாக படத்தை ரிலீஸ் செய்யும் ஏற்பாடுகள் நடந்து வருவதாகச் சொன்னார் லட்சுமி. படத்தின் பட்ஜெட் ‘ஆரோகணம்’ படத்தைவிட பத்து மடங்கு அதிகமாகிவிட்டதாம்..  ஆனாலும் படம் வெற்றி பெறும் என்று தயாரிப்பாளரே அசாத்திய நம்பிக்கையுடன் இருக்கிறாராம்..

“நடிகையாகத்தான் கோடம்பாக்கத்துல அறிமுகமானீங்க.. நடிப்பை தொடர்வீர்களா..? அல்லது இயக்குநர் வேலை மட்டும்தானா…?” என்று கேட்டதற்கு, “இந்தப் படத்தோட வேலைகளை முடிச்சவுடனேயே எனக்கு நாலு படத்துல நடிக்க வாய்ப்பு வந்திருக்கு.. நிச்சயமாக தொடர்ந்து நடிப்பேன்…” என்றார் லட்சுமி.

இயக்கம் இல்லையேல் நடிப்பு.. நடிப்புக்கு பிரேக்விட்டால் இயக்கம்..! ஏதோ ஒண்ணு..! ஆரோகணத்தில் கிடைத்த பெயர் இதிலும் கிடைத்துவிட்டால் நமக்கும் சந்தோஷம்தான்..!

Our Score