நடிகர் பிரகாஷ்ராஜ் சந்தோஷமான செய்தியொன்றை சில நிமிடங்களுக்கு முன்பாக இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அதாகப்பட்டது என்னவெனில், மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைப்பில் புதுமை இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் ஒரு படத்தை தான் தயாரிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்.. உண்மையாகவே பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மகேந்திரன் என்ற காணக் கிடைக்காத கலைஞன், உண்மையில் நிறைய படங்களை இயக்கியிருக்க வேண்டும். ஆனால் அவரது நுட்பமான திரைப்பட அறிவும், ஏதாவது சொல்ல வேண்டும் என்று துடிக்கும் ஆசையும் கமர்ஷியல் தயாரிப்பாளர்களுக்கு வேப்பங்காய் என்பதால் அவரை பக்கத்திலேயே நெருங்கவிடாமல் செய்ய.. மகேந்திரனும் தனது இயல்பான பழக்கத்தின் காரணமாய் அவர்களை தேடிப் போகாமல் இருக்க.. மகேந்திரனின் வனவாசம் இந்தக் கோடம்பாக்கத்தில் பல ஆண்டுகளாய் நீடித்திருக்கிறது.
மகேந்திரன் இப்போது பெயர் வைக்கப்படாத ஒரு படத்தை கொடைக்கானலில் படமாக்கிக் கொண்டிருக்கிறாராம். அந்தப் படத்தை முடித்ததும் பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் படம் துவங்கும்போல தெரிகிறது.
மூன்று மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கும் பிரகாஷ்ராஜன் ‘உன் சமையல் அறையில்’ படமும் வெளியான பின்பு அடுத்தப் படமாக இது இருக்கும்..
எது எப்படியிருந்தாலும் மகேந்திரன் போன்ற ஜாம்பவான்கள் வருடத்திற்கு ஒரு படமாவது செய்தால்தான் தமிழ்த் திரையுலகத்திற்கு மரியாதை.. தயாரிப்பாளர் என்ற முறையில் பிரகாஷ்ராஜ் நிச்சயம் பெருமைப்படலாம்.