பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை வெளியேற்றியதால் 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிரசாத் ஸ்டூடியோ மீது இசைஞானி இளையராஜா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளாக சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இசைக் கூடத்தில்தான் இசைஞானி இளையராஜா இசையமைப்புப் பணியைச் செய்து வந்தார்.
அவருடைய சாகா வரம் பெற்ற பல பாடல்கள் அங்கேதான் உருவாகின. இதனால் சென்டிமெண்ட்டாக பிரசாத் ஸ்டூடியோவில் பணியாற்ற இளையராஜா பெரிதும் விரும்பினார். இதன் காரணமாகவே தன்னிடம் பணம் இருந்தும் தனக்கென்று தனியாக இசைக் கூடத்தை அவர் உருவாக்கவே இல்லை.
இந்த நிலையில் கடந்த வரும் திடீரென்று இசைஞானி இளையராஜாவின் இசைக் கூடத்தை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மூடியது. இளையராஜாவையும் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியது.
இதனால் அதிர்ச்சியான இளையராஜா இது பற்றி காவல்துறையில் புகார் அளித்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இருந்தும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் இளையராஜாவுக்கு அந்த இசைக் கூடத்தைத் தருவதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அந்த இடத்தை இடித்துவிட்டு வேறு கட்டிடம் கட்டப் போவதாக அறிவித்துள்ளது.
இதன் அடுத்தக் கட்டமாக பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை வெளியேற்றியதன் மூலம் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத், ரமேஷ் ஆகியோரிடம் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ஸ்டூடியோவில் இருந்த தனக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் தன்னை வெளியேற்றியது நியாயமற்றது எனவும், தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் தலையிட பிரசாத் ஸ்டூடியோவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், இந்த மனுவுக்கு வருகிற 17-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.