full screen background image

இசைஞானி இளையராஜாவின் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டது..!

இசைஞானி இளையராஜாவின் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டது..!

இசைஞானி இளையராஜாவின் ரசிகர் மன்றம் மதுரையில் துவங்கப்பட்டுவிட்டது..!

கடந்த ஏப்ரல்-5-ம் தேதியன்று மதுரையில் நடைபெற்ற ராஜாவின் சங்கீதத் திருநாள் இசை நிகழ்ச்சியின்போது இந்த மன்றத்தின் துவக்க விழாவும் அதே மேடையில் அரங்கேறியுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சி பற்றிய முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போதுதான் இசைஞானியின் பெயரில் ஒரு ரசிகர் மன்றத்தை துவக்கப் போகும் திட்டத்தையே சொன்னார் அவரது மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக்ராஜா. அந்த மன்றத்திற்கு அவரே தலைவராக இருக்கப் போவதாகவும் தெரிவித்தார்கள்.

ஆனால் அதற்குப் பின் திடீரென்று ஒரு நாள் கார்த்திக்ராஜாவுக்கு பதிலாக இளையராஜாவின் மகள் பவதாரிணி ரசிகர் மன்றத்திற்கு தலைவராக இருப்பார் என்று அறிவித்தார்கள்.

கார்த்திக்ராஜாவிற்கு பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகள் நிறைய காத்திருப்பதால் அவற்றோடு இந்த வேலையையும் சேர்த்துச் செய்வது மிகுந்த சிரமம் அளி்ககும் என்பதால் பவதாரணியிடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பதாக இளையராஜாவின் குடும்பத்தில் இருந்து தகவல் வந்தது..!

கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேர் கூடியிருந்த மதுரை தமுக்கம் மைதானத்தில் அனைவரின் முன்னிலையிலும் இத்தனையாண்டு காலம் கழித்து இசைஞானியின் ரசிகர் மன்றம் உருவாக்கப்பட்டது.

இப்போது இதன் தலைவராக பவதாரணி பொறுப்பேற்றுள்ளார். துணைத் தலைவராக டாக்டர் ஆல்பர்ட்டும், செயலாளர் மற்றும் மேனேஜிங் டிரஸ்ட்டியாக தயாரிப்பாளர் பி.வேல்சாமியும், அமைப்பாளராக கிழக்குச் சீமையிலே படத்தின் கதாசிரியரும், இயக்குநருமான ரத்னகுமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகள் இனிமேல் எப்படியிருக்கும் என்பது பற்றி எதுவும் இதுவரையில் சொல்லப்படவில்லை. இந்த ரசிகர் மன்றத்தில் மற்றவர்கள் இணையலாமா..? அல்லது இதுவொரு அறக்கட்டளை போல செயல்படப் போகிறதா என்பதும் தெரியவில்லை..!

விரைவில் தெரிவிப்பார்கள் என்று நினைக்கிறோம்..!

Our Score