சென்ற ஆண்டு தமிழகத்தின் அனைத்து சேனல்களிலும் ஏதாவது ஒரு விஷயத்திற்காக பேட்டியளித்த நடிகர் ராதாரவி. ஒரு விஷயத்தை அனைவரிடத்திலும் சொல்லாமல் விட்டதில்லை.
தான் இனிமேல் டப்பிங் கலைஞர்கள் யூனியனில் நிர்வாகி பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்பதை அனைத்து தொலைக்காட்சி பேட்டிகளிலும் வாலண்டியராக அனைத்து பேட்டிகளிலும் சொல்லிக் கொண்டேயிருந்தார். ஏதோ பேச்சுக்குத்தான் சொல்றாரோன்னு நினைத்தால்.. இப்போது நிஜமாகவே தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி புதியவர்களுக்கு வழிவிட்டிருக்கிறார்.
டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் ராதாரவி தலைவராக.. ஒரு வருஷம் இல்லை.. ரெண்டு வருஷம் இல்லை.. 29 வருடங்களாக பதவியில் இருநதவர்.. அச்சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் அவரும் ஒருவர்.
இச்சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்துதான் தமிழகத்தி்ன் மிகப் பெரிய புதிய இயக்குநர்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக பகைத்துக் கொண்டார் ராதாரவி. டப்பிங் பேசும் பணியில் சங்கத்தில் மெம்பர்களாக இல்லாதவர்களை அனுமதிப்பதில்லை என்பது இந்தச் சங்கத்தின் கொள்கை..
புதியவர்களாக இருந்தாலும் சங்கத்தில் பணம் கட்டி மெம்பரான பின்புதான் பேசவே அனுமதிப்பார்கள். அனைத்து டப்பிங் யூனிட் ஸ்டூடியோக்களிலும் இதற்காகவே தனி உளவுப் படையையே வைத்திருக்கிறார்கள் டப்பிங் யூனியன்காரர்கள்..!
ஒரு முறை ஷங்கர் தனது படம் ஒன்றில் நடிகை ஆ்ண்ட்ரியாவை டப்பிங் பேச அனுப்பி வைத்தார். இத்தகவல் அறிந்து டப்பிங் யூனியன்காரர்கள் திரண்டு வந்து தகராறு செய்ய.. விஷயம் போனில் ஷங்கருக்குச் சொல்லப்பட்டு அவர் அங்கேயிருந்து ராதாரவி மற்ற நிர்வாகிகளிடம் போனில் பேசியிருக்கிறார். யாராக இருந்தாலும் சங்கத்துல மெம்பர் ஆகணும்.. இ்ல்லைன்னா முடியாது என்று இவரும் கறாராகச் சொல்லிவிட.. வேறு வழியில்லாமல் ஷங்கர் தனது சொந்தப் பணம் 60000 ரூபாயை உடனே கொடுத்தனுப்பி ஆண்ட்ரியாவை டப்பிங் யூனியனில் சேர்த்து.. அதன் பின்னர் டப்பிங் வேலைகளை முடித்துக் கொண்டார்.
இந்த அளவுக்கு கறார்தன்மையுடைவர் ராதாரவி என்பதால்தான் இத்தனையாண்டுகளாக அவருடைய தலைமையை எதிர்ப்பில்லாமல் தேர்ந்தெடுத்தார்கள் சங்க உறுப்பினர்கள். போன வருஷத்தில்தான் “போதும்யா.. விடுங்கய்யா.. வேற யாராச்சும் வந்து நாட்டுக்காக பாடுபடுங்க.. இனிமே நான் என் வீட்டுக்காக பாடுபடுறேன்..” என்று கிண்டலாகச் சொல்லி, தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று உறுதியாகவே சொல்லியிருந்தார்.
அது போலவே சமீபத்தில் நடந்த தென்னிந்திய சினிமா-டெலிவிஷன் கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் 2014-2016-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தலில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
தலைவராக இயக்குநரும், நடிகருமான கே.ஆர்.செல்வராஜ்..
துணைத் தலைவர்களாக நடிகர் கோபி, நடிகை சத்யப்பிரியா, ஸ்ரீஜா ரவி..
செயலாளராக எம்.எஸ்.பிரகாஷ்.
இணைச் செயலாளர்களாக எம்.ராஜேந்திரன், எம்.நாராயணபிரபு, எஸ்.என்.சுரேந்தர்..
பொருளாளராக கே.சக்திவேல், ஆகியோர் பதவியேற்றுள்ளார்கள்.
சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..!