இன்று வெளியாகியிருக்கும் ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகையில் ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படத்திற்காக வைரமுத்து எழுதிய பாடலை யுவன்சங்கர்ராஜாவின் இசையில் இசைஞானி இளையராஜா பாடப் போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது.
வழக்கம்போல இதைப் படித்தவுடன் கோடம்பாக்கம் பதற்றப்பட.. சில மணி நேரங்களில் அந்தச் செய்தியை மறுத்து இளையராஜா சார்பில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இது இசைஞானி இளையராஜாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது :
இசைஞானியின் அன்பான ரசிகர்களே…!
இன்று ஒரு வார பத்திரிகையில் இசைஞானி அவர்கள் சீனு ராமசாமி இயக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை யுவன் இசையில் பாடப் போவதாக செய்தி வந்திருக்கிறது. இது முற்றிலும் தவறான தகவல்.
நம்முடைய இசைஞானி எந்த காலத்திலும் வைரமுத்து எழுதிய பாடலை பாடப் போவது கிடையாது. இப்படி ஒரு பொய்யான தகவலை பரப்பி தன் படத்திற்கு விளம்பரம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. அதோடு கடந்த சில மாதங்களாக வைரமுத்துவை எப்படியாவது இசைஞானியுடன் இணைத்துவிட வேண்டும் என்று பல வழிகளிலும் முயற்சி செய்து வந்தார் இயக்குநர் சீனு ராமசாமி.
பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் தான் பணியாற்ற விரும்பிய வைரமுத்து, “ராஜாவை எப்படியாவது சமாதானப்படுத்துங்கள். நானே பாடல்களை எழுதுகிறேன்…” என்று பாலாவிடம் சொல்லியனுப்பினார். பாலாவும் இதை இசைஞானியிடம் தெரிவித்து அனுமதி கேட்டார். அதற்கு இளையராஜா, “தாராளமாக அவரை வைத்து பாட்டு எழுதிக்கோ… ஆனால் நான் இசையமைக்க மாட்டேன்…” என்று மறுத்து விட்டார். அதன் பிறகே அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இந்நிலையில்தான் யுவன் இசையில் வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜா பாடப் போவதாக ஒரு செய்தியை இப்போது பரவ விட்டிருக்கிறார்கள். நேரடியாக கேட்டும் ராஜா சார் மறுத்து விட்டதால், இப்படி கொல்லைப்புறத்தின் வழியாக நுழைய முற்சிக்கிறார் வைரமுத்து என்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
வெளியில் மேடைகளில், ‘நான்தான் ராஜாவை ஒதுக்கி வைத்திருக்கிறேன்’ என்பதுபோல் காட்டிக்கொண்டு, உள்ளுக்குள் அவரோடு எப்படியாவது இணைந்துவிட வேண்டும் என்று தலையால் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறார் வைரமுத்து.
அதே படத்தில் தனுஷ் எழுதிய ஒரு பாடலை பாட வைப்பதற்காக தன் அப்பாவிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்துப்போயிருகிறார் இரண்டு மூன்று முறை யுவன். “டாடி ஒரு விஷயம் கேட்கணும்…” என்று கூறி, பயம் காரணமாக அதைக் கேட்காமலே விட்டிருக்கிறார். காரணம் ராஜா சார், “என்ன யுவன்..?” என்று கேட்டாலே யுவனுக்கு வாயடத்துப் போய்விடும். அப்படியிருக்கும்போது வைரமுத்து எழுதிய பாடலைப் பாடுங்கள் என்று சொல்ல யுவனுக்கு எப்படி தைரியம் வரும்?
வாழ்க்கை கொடுத்தவருக்கு எதிராகவே பல ஆண்டு காலம் நடந்து கொண்டிருக்கும் வைரமுத்துவின் பாடலை, ராஜா சார் பாடுகிறார் என்று சொன்னால் நம்புவதற்கு இசைஞானியின் ரசிகர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல!”
– இவ்வாறு அந்தப் பக்கத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.