full screen background image

இளமி – சினிமா விமர்சனம்

இளமி – சினிமா விமர்சனம்

ஜோ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜூலியன் பிரகாஷ்  தயாரித்து, கூடுதலாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் இது. இதில்  யுவன், அனு கிருஷ்ணா, அகில்,  கிஷோர், ரவி மரியா  ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.  

1715-ம் ஆண்டில் மதுரை வட்டாரத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம்.

மதுரை வட்டாரத்தில் மேலூர் அருகில் இருக்கும் மாங்குளம் கிராமம். இந்தக் கிராமத்து ஜனங்களுக்கும், இதன் அருகில் இருக்கும் இன்னொரு கிராமத்திற்கும் இடையில் தற்போது ஒரேயொரு பிரச்சினை கனன்று கொண்டிருக்கிறது. அவர்களது குல தெய்வமான அய்யனார் சிலையை பக்கத்து கிராமத்தினர் வைத்திருக்கிறார்கள். வருடாவருடம் அவர்கள் ஊரிலேயே சாமி கும்பிடு நடந்து வருகிறது.

அந்தச் சிலை மாங்குளம் கிராமத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது என்பதால் அதனை திருப்பிக் கேட்க நினைக்கிறார்கள் மாங்குளம் கிராமத்து இளந்தாரிகள். ஆனால் ஊர்ப் பெரியவர்கள் சமாதானமாகப் பேசி வாங்கலாம் என்று சொல்லியே காலத்தைத் தள்ளி வருகிறார்கள்.

மாங்குளத்தில் ஊர் தலைவர் வீரய்யா என்கிற ரவி மரியா. இவரின் மகள்தான் நாயகியான இளமி என்னும் அனு கிருஷ்ணா.  ரவி மரியா வளர்த்து வரும் காளையை அந்தப் பகுதியில் யாருமே அடக்க முடியவில்லை. அதனால் வருடாவருடம் காளை அடக்கும் நிகழ்ச்சியில் இவரது காளையே வெற்றி பெற்று வருகிறது.

பக்கத்து ஊரில் இருக்கிறார் ஹீரோ கருப்பு என்னும் யுவன். வேட்டையாடுவதில் வல்லவர். இதே ஊர்க்காரரான சடைப்புலி என்னும் ‘கல்லூரி’ அகில் காளையை அடக்குவதில் வில்லவன். ஆனால் முரடனும்கூட. யுவனும், அனு கிருஷ்ணாவும் ரகசியமாக காதலித்து வருகிறார்கள்.

இந்த நேரத்தில் அய்யனார் சாமி கும்பிடுக்கு ரவி மரியா ஏற்பாடு செய்கிறார். இதைக் கேட்டு அகில் கொதிக்கிறார். “இந்த வருடமாவது சாமியை நம்ம ஊருக்கு கொண்டு வர வேண்டும்…” என்கிறார். ஊர்ப் பெரியவர்கள் பேசித் தீர்க்கப் பார்க்கிறார்கள். அது முடியாமல் போக.. எப்படியாவது அந்த ஊர் திருவிழாவை தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சாமியைத் தூக்குவதற்கு திட்டம் தீட்டுகிறார்கள். பின்பு சாமி சிலைக்கு பதிலாக கலசக் கும்பத்தை கடத்தி வர ஏற்பாடு செய்கிறார்கள். அகிலின் தலைமையில் யுவனும், அவனது நண்பனும் சேர்ந்து கலசக் கும்பத்தைத் தூக்கி வருகிறார்கள்.

மாங்குளம் கிராமமே கிளம்பி சண்டைக்கு வருகிறது. இப்போது சமாதானம் பேசுகிறார்கள். அது முடியாமல் போக பேச்சுவார்த்தை வலுத்துக் கொண்டே போகிறது. தன்னுடைய காளையை அடக்கினால் ஊர்ச் சாமியை இவர்களிடம் ஒப்படைப்பதாக ரவி மரியா சொல்கிறார். கூடவே அவருடைய மகளான அனு கிருஷ்ணாவையும் கேட்கிறான் அகில். இதற்கும் ஒப்புக் கொள்கிறார் ரவி மரியா.

இறுதியில், என்ன நடந்தது..? காளையை அடக்கினார்களா..? யார் அடக்கியது..? யுவனும், அனு கிருஷ்ணாவும் ஒன்று சேர்ந்தார்களா..? என்பதுதான் மீதிக் கதை.

படம் பழந்தமிழர் பண்பாட்டை மையப்படுத்திய கதையாக இருந்தாலும், இதில் முக்கியமாக இருப்பது அக்காலத்திய ஜல்லிக்கட்டுதான்.

ஜல்லிக்கட்டில் மூன்று வகை உண்டு என்கிறது தமிழ்ச் சமூகம். ஒன்று.. ஒரே மாட்டை குறி வைத்து பலரும் பின்னாலேயே விரட்டிச் சென்று பிடிப்பது. இரண்டாவது.. பல மாடுகளை ஒரே நேரத்தில் திறந்துவிட.. அவற்றின் கொம்பையோ அல்லது திமிலையோ பிடித்திழுத்து நிறுத்துவது.. மூன்றாவது, வடம் என்னும் ஜல்லிக்கட்டு காளையை நேருக்கு நேராக சந்தித்து அதன் கொம்பை பிடித்து இழுத்துப் பிடித்து நிறுத்துவது அல்லது மண்டியிடச் செய்வது.

முதல் இரண்டு வகையான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களைவிடவும் அதிக ஆபத்தானது, வீரமிக்கது வடம் ஜல்லிக்கட்டுதான். இதில்தான் காளையை நேருக்கு நேராக மோதி ஆண்கள் தங்கள் வீரத்தைக் காட்டி காளைய அடக்கி ஜெயித்து பெண்களை மணந்ததாக பழந்தமிழரின் வரலாறு சொல்கிறது.

வடம் ஜல்லிக்கட்டில் ஒரு பெரிய வடக் கயிற்றை ஒரு பெரிய கல்லில் கட்டி அதை பந்தய மைதானத்தில் குழி தோண்டி மண்ணுக்குள் புதைத்துவைத்துவிடுவார்கள். அந்த வடத்தின் மறுமுனை காளையின் கழுத்தில் கட்டப்படும். அந்தக் கயிற்றுடனேயே காளை மாடு ஓடிக் கொண்டிருக்கும்.

அந்தக் காளை அந்தக் கயிற்றுடன் நேர் திசையில் செல்லும் எல்லைப் பகுதியருகே ஒரு கோடு ஒன்றை வட்டமாக வரைவார்கள். அதற்கு அடுத்து இரண்டு தப்படி இடைவெளிவிட்டு மீண்டும் ஒரு கோடு வரையப்படும். போட்டியில் பங்கு பெறுபவர்கள் அந்தக் கோட்டைத் தொட்டுவிட்டால் அவர்கள் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்.

காளையுடன் சண்டையிடுபவர்கள் அந்தக் கோட்டின் உள்பகுதிக்குள்ளேயே இருந்துதான் காளையுடன் மல்லுக்கட்டி அதனை வீழ்த்த வேண்டும். இதுதான் இந்த வடம் ஜல்லிக்கட்டின் நிபந்தனைகளாம். இந்த ஆதாரங்களை வைத்து ஜல்லிக்கட்டு பகுதியை மிகச் சிறப்பாக படமாக்கியிருக்கிறார்கள்.

இதே ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இதற்கு முன்னர் தமிழ்ச் சினிமாவில் பல படங்கள் வெளிவந்திருந்தாலும், இந்தப் படம்தான் உண்மையான ஜல்லிக்கட்டின் வரலாற்றையும், அதன் பெருமையையும் உண்மையாகவே பேசியிருக்கிறது.  

நாசமாகப் போன திடீர், குபீர் விலங்கின உரிமைப் போராளிகளால் சினிமாக்களில் விலங்குகளுக்கு ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சித்ரவதை செய்யக் கூடாது என்கிற வெட்டி விதிமுறைகளால், இப்போதெல்லாம் விலங்குகளை வைத்து யாருமே படமெடுக்க முடியவில்லை.

இந்தப் படத்தின் கதியும் அது போலவே ஆகிவிட்டது. காளை மாட்டைகூட கிராபிக்ஸ்லேயே படமாக்கியிருக்கிறார்கள். கிராபிக்ஸ் வேலைகளும் அற்புதமாக இருக்கிறது. வடம் ஜல்லிக்கட்டு விஷயத்தில் நிஜமான காளை மாடு என்னென்ன செய்யுமோ அது அத்தனையையும் அற்புதமாக விஷுவலாக்கியிருக்கிறார்கள். மும்பையில் பெரும் பொருட் செலவில் இந்தப் படத்திற்கு கிராபிக்ஸ், விஷுவலைஸ் செய்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்..!

நாயகன் யுவன், கருப்பு கேரக்டருக்கு பொருத்தமாகவே இருக்கிறார். அந்தக் காலத்து இளைஞனின் தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல் காட்சிகள், மற்றும் காளையை அடக்க பயிற்சி பெறும் காட்சிகள், இறுதியில் அனுவை இழந்துவிட்ட பரிதவிப்பில் அவர் படும்பாடு என தனக்குக் கிடைத்த இடங்களிலெல்லாம் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் யுவன். இவருக்கு இன்னும் நல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இவரது கேரியர் உயரும்.

கல்லூரி அகில் இதில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், வில்லனாக நடித்திருக்கிறார். முதலில் சில நிமிடங்கள் அடையாளமே தெரியாத அளவுக்கு இருக்கிறார். பின்புதான் தெரிகிறது அது அகில் என்று.. ஒப்பனை கலைஞருக்கு நமது பாராட்டுக்கள்.

நாயகி இளமி என்னும் அனு கிருஷ்ணாவின் நடிப்பு இந்தப் படத்துக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். இளமி என்றால் ‘இளமையான இளைஞி’ என்று பொருள். இந்தப் பொருளுக்கு மிக பொருத்தமாக அமைந்திருக்கிறார் அனு கிருஷ்ணா. அவருடைய அம்பாரம் போன்ற கண்களே, ஆயிரம் கதைகள் பேசுகின்றன. தன்னுடைய யதார்த்தமான நடிப்பையும் காட்டியிருக்கிறார். கேரளத்து பெண்களுக்கு அழகுடன், நடிப்பும் வருவதில் ஆச்சரியமில்லையே..?!

ஊர் தலைவரான ரவி மரியா, வடம் ஜல்லிக்கட்டில் ஜெயிப்பதற்கு யுவன் குழுவினருக்கு ஆலோசனை சொல்லும் மதுரையின் தளபதியான கிஷோர், மற்றும் ஊர்ப் பெரியவர்களாக, ஊர் மக்களாக நடித்த அத்தனை பேருமே ஒரு சின்ன இடறல்கூட இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.

18-ம் நூற்றாண்டு பின்னணியில் கதை நகர்வதால், நகர்ப்புற வாடையே படக் கூடாது என்பதால் தேனி பகுதியில் ஆள், அரவமற்ற ஒரு பெரிய இடத்தில் கிராமத்து செட்டப்பை அமைத்து, அந்தப் பகுதி கிராமத்து மக்களையே தேடிப் பிடித்து கஷ்டப்பட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள்.

சட்டை அணியாத ஆண்கள். ஜாக்கெட் அணியாத பெண்கள்.. காலில் சிலம்பணிந்த பெண்கள்.. ஜல்லிக்கட்டில் காளையை அடக்கினால்தான் பெண் கொடுப்பேன் என்பது.. அந்தக் காலத்திய உணவு வகைகள்.. ஆடை, அணிகலன்கள்.. வீட்டு பொருட்கள்.. தேன் எடுக்கும் பணி.. தேனை எப்படி எடுக்க வேண்டும் என்கிற வழிமுறைகள்.. என்று அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார் இயக்குநர்.

யுகாவின் ஒளிப்பதிவில் முதல் காட்சியில் இருந்து முடிவுவரையிலும் கேமிராவின் கண்களால் படம் முழுவதையும் ரசிக்க முடிந்திருக்கிறது. உடும்பை அடிக்கும் காட்சியும், கலச கும்பத்தைக் கடத்தும் காட்சியிலும், பாடல் காட்சிகளிலும், யுவன் தேன் எடுக்கும் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் இயக்குநருக்கு பெரிதும் துணை நின்றிருக்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் 3 பாடல்களுமே கேட்கும்படியாக இருந்தது. அனைத்து பாடல் வரிகளுமே திரும்ப இன்னொரு முறை கேட்டாலே மனப்பாடம் ஆகிவிடுவதை போல அமைந்திருப்பதும் சிறப்பு.

படத்தின் மிகப் பெரிய பலமே வசனங்கள்தான். அந்தக் காலத்திய மதுரை வட்டார தமிழ் மொழியை அலசி, ஆராய்ந்து கொஞ்சமும் தேய்ந்து போகாமல் வார்த்தையை வசமாக்கி டப்பிங்கில் பேச வைத்திருக்கிறார்கள். பல வசனங்களே நம் முன்னோர்களின் வாழ்க்கையை நமக்குச் சொல்லி விடுகின்றன. வசனம் எழுதிய இயக்குநருக்கு இது ஒன்றுக்காகவே இன்னொரு முறை ‘ஜே’ போட வேண்டும்.

படத்தில் இருக்கும் ஒரே நெருடல் இறுதிக் காட்சிதான். இந்தப் படத்துக்கு இத்தனை கொடூரமான கிளைமாக்ஸ் தேவையா என்பவர்கள். இது நடந்து முடிந்த கதை என்பதை மட்டும் நினைவில் கொண்டால் இதையும் ஜீரணிக்கத்தான் வேண்டும்.

ஒருதலையான காதலினால், பொறாமைத் தீயில் சிக்கிய வில்லனால் கொல்லப்பட்ட  கருப்புவுக்கும், இளமிக்கும் அந்த ஊர் மக்கள் தங்களது மாங்குளத்தில் கோவிலே கட்டி வைத்திருக்கிறார்கள். கோவில் கட்டிய வரலாறு வழி வழியாக செவி வழியாக கேட்டு, கேட்டு இப்போதைய தலைமுறைவரையிலும் நீண்டிருக்கிறது.

அந்தக் கதையைக் கேட்டுத்தான் இந்தப் படத்தின் இயக்குநரான ஜீலியன் பிரகாஷ் ஆர்வப்பட்டு விசாரித்து இந்தக் கதையை தனது சொந்த செலவில் தயாரித்திருக்கிறார். உண்மையில் இதற்காகவே இவருக்கு ஒரு பெரிய பாராட்டு விழாவே நடத்த வேண்டும்.

இன்றைக்கும் காதலித்து வரும் இளைஞர்களும், இளைஞிகளும் ஜோடியாக அந்தக் கோவிலுக்கு வந்து தங்களது காதல் ஜெயிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வருகிறார்கள். இதையம் விஷுவலாக படத்தின் இறுதியில் காட்டியிருக்கிறார்கள்.

ஆக.. நடந்து முடிந்த கதையை அப்படியேதானே காட்டியாக வேண்டும்..? ஆகவே அந்தக் கிளைமாக்ஸ் கொடூரம் தேவையானதுதான். அதற்காக அப்போதே தமிழர்கள் இப்படித்தானே இருந்திருக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேச வேண்டாம். தமிழர்கள் என்றாலும் அவர்களும் மனிதர்கள்தான். மனித இனத்துக்குள்ளேயே போட்டி, பொறாமை, வஞ்சகம், அனைத்தும் இருக்கும். இது இல்லாத சமூகமே உலகத்தில் எங்குமே இல்லை.

எத்தனையோ மொக்கை படங்களுக்கு மத்தியில், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ மற்றும் ‘கவலை வேண்டாம்’ மாதிரியான எடுக்கக் கூடாத பொய்மை படங்களுக்கு மத்தியில் இப்படியொரு படத்தை அதுவும் தன்னுடைய சொந்தத் தயாரிப்பில்.. தரமான இயக்கத்தில், அற்புதமான படமாக உருவாக்கி அளித்திருக்கும் படத்தின் இயக்குநர் ஜூலியன் பிரகாஷ்  தமிழ்ச் சினிமாவில் போற்றி பாராட்டப்பட வேண்டிய ஒருவர்.

தமிழ்ச் சினிமாவுலகம் இவரை நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டால் தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு நல்லது..!

‘இளமி’ தமிழர்கள் அனைவரும் கட்டாயமாக பார்த்தே தீர வேண்டிய படம்..! அவசியம் பார்த்து ஆதரவு கொடுங்கள் தமிழர்களே..!

Our Score