“ஆம்புலன்ஸுக்கு வழி விடுங்கப்பா..!” – வலியுறுத்தும் ‘சைவ கோமாளி’ திரைப்படம்

“ஆம்புலன்ஸுக்கு வழி விடுங்கப்பா..!” – வலியுறுத்தும் ‘சைவ கோமாளி’ திரைப்படம்

எஸ்.எம்.எஸ்.மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் ஏ.சி.சுரேஷ், மகேந்திரன், சாய் மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘சைவ கோமாளி’.

புதுமுகம் ரஞ்சித் நாயகனாக நடிக்க, மனிஷா ஜித் நாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன், சூப்பர்குட் லட்சுமணன், கிரேன் மனோகர், கிருஷ்ணமூர்த்தி, டி.கே.கலா, காயத்ரி, வனிதா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கே.பாலா, இசை – கணேஷ் ராகவேந்திரா, எடிட்டிங் – வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய், கலை- கார்த்திக், ராஜ்குமார், நடனம்  – தம்பி சிவா, சண்டை பயிற்சி- டி.ஷங்கர், எழுத்து, இயக்கம் –  சுரேஷ் சீதாராம்.

saivakomaali audio function still

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் தரணி, பேரரசு, தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பி.எல்.தேனப்பன், கதிரேசன், மற்றும் படக் குழுவினரும் கலந்து கொண்டார்கள்.

விழாவில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, “இந்தப் படத்தில் கமிஷனராக நடித்துள்ளேன். இந்தப் படத்தின் இணை இயக்குநரான உதயகுமார்தான் இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று கேட்டு வந்து என்னிடம் பேசினார். இயக்குநர் சுரேஷ் சீதாராம் இந்தப் படத்தை மிக சிறப்பாக இயக்கியிருக்கிறார். என்னை இந்தப் படத்தில் சிறப்பாக நடிக்க வைத்த உதயகுமார் இயக்கத்தில், நான் தயாரித்து நடிக்கும் படம் ஒன்றை வரும் ஜனவரியில் துவக்கவுள்ளேன்…” என்றார்.

srinivasan 

பின்னணி பாடகர் கானா பாலா பேசுகையில், “பொதுவாக எனக்கு மதுப் பழக்கம் இல்லை. பெண்களை கிண்டல் செய்ததும் இல்லை. ஆனால் எனக்கு வந்த பாடல்கள் எல்லாம் அப்படித்தான் அமைகின்றன. இதுக்கு நான் என்ன செய்றது..?

சமீபத்தில் தேர்தல் நேரத்தில் சென்னை மாவட்ட ஆட்சியாளர் என்னை கூப்பிட்டு, நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ஒரு பாடலை பண்ணித் தரச் சொன்னபோது சந்தோஷமாக அதைச் செய்து கொடுத்தேன். அதுக்கு நான் பணம் வாங்கவில்லை.

அதேபோல் இந்த ஆம்புலன்ஸ் பாட்டுக்கும் தயாரிப்பாளர்கள்கிட்ட காசு வாங்கி இருக்கக் கூடாதுதான். ஆனா அப்போ எனக்கு இருந்த சூழ்நிலைல வாங்கிட்டேன். அடுத்த படத்துல அந்தப் பணத்தை நிச்சயம் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். 

நான் இதுவரை பல திரைப்படங்களில் பாடல்கள் எழுதி, பாடியிருக்கிறேன். அதேபோல இந்தப் படத்திற்காகவும் ஒரு பாடலை எழுதி பாடியுள்ளேன். ஆனால் இது எனக்கு நிரம்ப மன நிறைவை கொடுத்த பாடல். ஏனெனில் இது ஆம்புலன்ஸ் பற்றிய ஒரு விழிப்புணர்வு பாடல்..!

பெரும்பாலும் சாலைகளில் ஆம்புலன்ஸ் வண்டி வேகமாக செல்லும்போது, சீக்கிரமாக சென்று விடலாம் என்று அந்த வண்டியை பின் தொடர்ந்து நிறைய பேர் வேகமாக வண்டியை ஓட்டி செல்வார்கள். அப்படி செல்லக் கூடாது..! அப்படி போகும்போது அவர்களுக்கும் விபத்து ஏற்பட்டால், அதே ஆம்புலன்ஸில் அவர்களும் போக வேண்டி வரலாம்..

இதேபோல ஆம்புலன்ஸ் வண்டி வரும்போதும் சிலர் அதில் யார் இருக்கிறார்கள் என்று எட்டி பார்க்கிறார்கள். அதில் நோயாளிகள் இல்லையென்றால் அதற்கு வழி விடமாட்டார்கள். அப்படியும் செய்யக் கூடாது. ஏனென்றால் ஒருவரை காப்பாற்றத்தான் அந்த வண்டி வேகமாக சென்று கொண்டிருக்கும். அப்படி செல்கிற வண்டியை செல்ல விடாமல் தடுத்தால் சிலரது உயிரை காப்பாற்ற முடியாமல் போய் விடும். அதனால் யாரும் ஆம்புலன்ஸ் வண்டிக்கு பின்னாடி வேகமாக செல்லாதீர்கள்.. ஆள் இல்லாத வண்டிக்கும் வழி விடுங்கள்..! இதை நான் ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன்.

நான் எழுதும் ஒவ்வொரு பாடலிலும் முடிந்தவரை மக்களுக்கு தேவையான கருத்துக்களை சொல்லவே முயற்சிக்கிறேன். அதைப் போலவே இந்த ஆம்புலன்ஸ் பாடலிலும் சமுதாயத்திற்கு பயன்படக் கூடிய ஒரு கருத்தை சொல்லியிருக்கிறேன். சமீபகாலமாக நான் பாடல் வாய்ப்புகளை தவிர்த்துதான் வருகிறேன். ஏனென்றால் புதிதாக வருபவர்களுக்கு பாடல் எழுதவும், பாடவும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்..” என்றார்.

dsc_6110

இயக்குநர் சுரேஷ் சீதாராம் பேசுகையில், “என்னைப் பெற்றெடுத்தது எனது தாய், தந்தை என்றாலும் என்னை வளர்த்தவர் இயக்குநர் தரணி ஸார்தான். அதோடு நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனைத்து இயக்குநர்களுமே என்னை நல்ல முறையிலேயே உருவாக்கினார்கள். எனவே என் படத்தில் ஆபாசமான விஷயங்கள் எதுவும் இருக்காது. 

இந்தப் படத்தில் அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனராக பவர் ஸ்டார் சீனிவாசன், ஆடம்பர வாழ்க்கை வாழும் கிரிமினல் அமைச்சராக ஜி.எம்.குமார், கலகலப்பூட்டும் காமெடி வேடத்தில் டி.பி.கஜேந்திரன், படம் பார்ப்பவர்களை மிரட்டும் சைக்கோ வேடத்தில் புதுமுக நடிகர் ரஞ்சித் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சைக்கோவும் இருக்கிறான்; கோமாளியும் இருக்கிறான். அவன் எப்படி தன்னை வெளிப்படுத்துவான் என்பது, இந்தச் சமூகம் அவனை எதிர்கொள்கிற முறையில்தான் இருக்கிறது.

இந்தக் கருத்தையும், இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளையும், அதை தடுத்து நிறுத்துவதற்கான தீர்வையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன்.

108 ஆம்புலன்ஸின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கும் ‘ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டா ஒதுங்கு, யம்மா ஹாஸ்பிட்டல் வந்துருச்சு இறங்கு’ என்ற பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும். இந்தப் பாடல் காட்சியை ஈ.சி.ஆர். ரோடு, பல்லாவரம், பம்மல், கீழுர், மணப்பாக்கம் போன்ற பகுதிகளில் குத்துப் பாடலாக படமாக்கி இருக்கிறோம்.

இந்த குத்துப் பாடலில் 108 ஆம்புலன்ஸின் கம்பவுண்டராக நடித்திருக்கும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், டிரைவராக நடித்திருக்கும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ராஜ்குமார், முதலுதவி மருத்துவராக நடித்திருக்கும் நடிகை மணீஷா ஜித் மூவரும் நடித்துள்ளனர். இந்தப் பாடலை கானா பாலா எழுதி பாடியிருக்கிறார். இப்படம் அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கக் கூடிய படமாக நிச்சயம் இருக்கும்..” என்றார்.

Our Score