ஸ்ரீசரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜி.சரவணன் தயாரித்திருக்கும் 3-வது திரைப்படம் ‘தண்ணி வண்டி.’
இந்தப் படத்தில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நாயகனாகவும் சம்ஸ்கிருதி நாயகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும், நடிகர் தம்பி ராமையா நாயகன் உமாபதியின் அப்பாவாக நடிக்க, தேவதர்ஷினி, பால சரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், ‘காதல்’ சுகுமார், முல்லை, விஜய் டிவி புகழ் கோதண்டம், ‘ஆடுகளம்’ நரேன், கிருஷ்ணமூர்த்தி, சன் டிவி புகழ் மதுரை முத்து, ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி மற்றும் இன்னும் சில பிரபலமான நடிகர்களும் நடித்துள்ளனர்.
வெங்கட் (ஒளிப்பதிவு), வீர சமர் (கலை), ஏ.எல்.ரமேஷ் (படத்தொகுப்பு), மோசஸ் (இசை), ஏ.வி.பழனிசாமி (தயாரிப்பு நிர்வாகம்), மோகன்ராஜ் – கவிஞர் சாரதி – கதிர் மொழி (பாடல்கள்), சுப்ரீம் சுந்தர் (சண்டைப்பயிற்சி), தினேஷ் – தீனா (நடனம்), புச்சி (ஆடைகள்), மூவேந்தர் (மேக்கப்), மூர்த்தி (ஸ்டில்ஸ்) மற்றும் ஸ்ரீதர் (டிசைனர்) ஆகியோர் தொழில் நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர்.
ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரிடம் உதவியாளராக நீண்ட காலமாகப் பணியாற்றிய இணை இயக்குநரான மாணிக்க வித்யா, இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ‘தண்ணி வண்டி’ படத்தின் டிரெயிலரை இயக்குநர் டி.ராஜேந்தர் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசும்போது, “ஓடிடி என்பது தற்போது காலத்தின் கட்டாயம். தமிழ்த் திரையுலகத்தில் ஒரு மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருந்தது ஏவி.எம். நிறுவனம். அவர்களே இன்று ஓ.டி.டி. தளத்தில் கால் பதிக்கிறார்கள் என்றால் இது காலத்தின் கட்டாயம்.
மீடியா உலகத்தின் அடுத்தக் கட்டம் ஓடிடி தளம் என்பதால் நான்கூட ஒடிடி தளம் துவங்குவேன். எதற்கென்றால், சிறிய தயாரிப்பாளர்களுக்கும், புதிய இயக்குநர்களுக்கும், போராடும் படைப்பாளிகளுக்கும் தேவை ஒரு தளம். அதற்கு நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம் ஒரு களம்.
தியேட்டரில் நுழைவுக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று நான் பல காலமாக சொல்லி வருகிறேன். ரெயிலில்கூட பர்ஸ்ட் க்ளாஸ், செகண்ட் க்ளாஸ் இருக்கு. ஆனால், சினிமா தியேட்டர்களில் மட்டும் எல்லா வகுப்புகளுக்கும் ஒரே கட்டணம்..! இது என்ன ஜனநாயக நாடா..? அல்லது சர்வாதிகார நாடா..?
டிக்கெட் கட்டணம் 100 ரூபாய், 150 ரூபாய் என்று இருந்தால் ஒரு ஏழை எப்படி குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்து படம் பார்க்க முடியும்..? டிக்கெட் ரேட்டுதான் அதிகமென்றால் பாப்கார்ன் விலையே 150 ரூபாய். இது எப்படி ஒரு குடும்பத்திற்குத் தாங்கும்..?
ஆந்திராவில் இன்று எந்தப் படம் போட்டாலும் படம் ஓடுகிறது என்றால் அதற்குக் காரணம் அங்கே டிக்கெட் கட்டணம் வெறும் 50 ரூபாய் அல்லது 70 ரூபாயில் இருப்பதுதான்.
டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று திரையுலகத்தில் இருந்து பேசுவதற்கு ஏன் யாருக்கும் துணிவில்லை..? மனமில்லை..? டிக்கெட் விலையை குறைத்தால்தான் சிறிய படங்கள் வாழும்.
லோக்கல் வரி எட்டு சதவிகிதத்தை ஏன் கட்ட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், பதில்தான் வரவில்லை. படம் பார்க்க மக்கள் 50%தான் வரணும். ஆனால் ஜி.எஸ்.டி. வரியை மட்டும் முழுமையாக கொடுக்கணுமாம். கொடுமையாய் இருக்கிறது இந்தக் கொடுமை..” என்றார்.
விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.