தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்ற வாரம் சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
இந்தப் படத்தில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராகவும், சமுத்திரக்கனி ஆர்.எம்.வீரப்பனாகவும் நடித்துள்ளனர்.
சென்னையில் நடந்த விழாவின்போது பத்திரிகையாளர்களை சந்திக்காமலேயே தப்பித்து ஓடி கங்கனா, மும்பையில் மட்டும் பத்திரிகையாளர்களை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக படம் பற்றிப் பேசியிருந்தார்.
இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் படத்தின் டிரெயிலரில் இருந்த சில காட்சிகள் தமிழக அரசியல் களத்தில் கொஞ்சம் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. ஜெயலலிதா சட்டமன்றத்தில் தாக்கப்பட்டதாக வந்த செய்தியின் அடிப்படையில் படத்தில் சில காட்சிகள் வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இதைப் பார்த்த திமுகவினர் கொதித்துப் போயுள்ளனர். அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை. இதற்கு சாட்சிகள் அப்போது ஜெயலலிதாவின் தளபதிகளாக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆரும், திருநாவுக்கரசரும்தான். இவர்கள் இருவருமே பின்பு ஜெயலலிதாவை எதிர்த்து அதிமுகவில் இருந்து வெளியில் வந்தபோது ஜெயலலிதா ஒரு சிம்பதியை உருவாக்குவதற்காக தானே கிளப்பிக் கொண்ட கட்டுக்கதைதான் அது என்றார்கள்.
ஆனால் அதிமுகவினர் இன்றுவரையிலும் அதை நம்பாமல் பிரச்சாரம் செய்கிறார்கள். திமுகவினரும் எதிர்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்தச் சம்பவத்தை ஜெயலலிதா சொன்னது நிஜம் என்பதைப் போல படத்தில் சித்தரிப்பது திமுகவினருக்கு கடும் கோபத்தைக் கிளப்பியுள்ளது.
ஆனாலும் இது தேர்தல் நேரம் என்பதால் இதற்கு எதிர்ப்பு.. போராட்டம் என்று சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம். தேர்தல் முடியட்டும்.. நமது எதிர்ப்பைக் காட்டுவோம் என்று திமுக மேலிடம் தற்போது தனது கட்சிப் பிரமுகர்களிடத்தில் சொல்லியிருக்கிறது. இதனால் இந்தப் பிரச்சினை நிச்சயமாக தேர்தல் முடிந்தவுடன் கிளம்பும் என்பது உறுதியாகியுள்ளது.
இதனை மோப்பம் பிடித்திருக்கும் படக் குழு, தியேட்டருக்கு வந்தால்தானே இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நேராக ஓடிடியில் கொடுத்தால் என்ன என்று யோசித்து.. அதன்படியே முடிவெடுத்திருக்கிறார்கள்.
அமேஸான் ஓடிடி தளத்தில் இந்தத் ‘தலைவி’ படத்தின் தமிழ், தெலுங்கு வெர்ஷன்கள் வெளியாகும்படியும், நெட் பிளிக்ஸில் ஹிந்தி வெர்ஷன் வெளியாகும்படியும் திட்டமிட்டு படத்தை விற்பனை செய்திருக்கிறார்களாம். ஆனால், வெளியீட்டுத் தேதியை மட்டும் இன்னும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.
ஆக, படம் எப்படியிருக்கோ.. என்னவோ.. இந்தத் ‘தலைவி’ படத்துக்காகவும் அடுத்த வருடம் கங்கனா ரனாவத் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெறப் போவது நிச்சயம்..!