‘ஐ’ படத்தின் கதை இதுதானாம்..!

‘ஐ’ படத்தின் கதை இதுதானாம்..!

‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சொதப்பல்கள் அதிகமாக மீடியாக்களில் கசிந்து கொண்டிருக்கும் அதே வேளையில், ‘ஐ’ படத்தின் கதை இதுதான் என்று சொல்லி ஒரு பெரிய கதையும், நேற்றிலிருந்து இணையவுலகத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது..

அந்தக் கதை இதுதான்..!

விக்ரம் ஒரு சாதாரண விவசாயி. ஹீரோயின் எமி ஜாக்சன் ஒரு பெரிய மாடல் அழகி. எமி மீது விக்ரமுக்கு காதல் ஏற்படுகிறது. ஆனால் விக்ரமால் எமியை நெருங்க முடியவில்லை. எமி ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறுகிறார். அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டியின் தூதராகவும் மாறுகிறார். இப்படி பெரிய இடத்திற்கு போன பிறகு சாதாரண விக்ரமால் எமியை நெருங்கவே முடியவில்லை. இதனால் தானும் ஒரு மாடலாக வேண்டும் என விக்ரம் முடிவெடுக்கிறார்.

தன்னுடைய கிராமத்தில் உடற் பயிற்சியை மேற்கொள்கிறார். இந்நிலையில் வில்லன் உபேன் ஒரே நாளில் அழகிய தோற்றம் பெற வேண்டும் என்று ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறார். அதை தன்னுடைய உடம்பிலேயே பரிசோதனையும் செய்து பார்க்கிறார். ஆனால் மருந்து சரியாக வேலை செய்யாமல் அவரை விசித்திர தோற்றத்துக்கு மாற்றி விடுகிறது. இருந்தாலும் அந்த மருந்தில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து சரி செய்கிறார். ஆனால் அதை மீண்டும் பரிசோதனை செய்து பார்க்க நினைக்கிறார். ஆனால் ஆள்தான் சிக்கவில்லை.

இந்த சமயத்தில்தான் விக்ரம், உபேனை சந்தித்து தனது ஒரு தலை காதலை சொல்கிறாராம். தன்னுடைய மருத்துவ கண்டுபிடிப்பை விக்ரமிடம் உபேன் சொல்ல.. எமியை மட்டுமே மனதில் கொண்டு விக்ரம் உடனே அதற்கு ஒப்புக் கொள்கிறார். உபேன் விக்ரமை பரிசோதனைக்கு ஆட்படுத்துகிறார். அந்த மருந்தை செலுத்திய உடனேயே விக்ரம் அழகிய வாலிபராக மாறுகிறார். மாடலிங் துறையில் நுழைகிறார்.. ஒரே நாளில் புகழின் உச்சிக்கு செல்கிறார் விக்ரம்.

இந்த நேரத்தில் எமியை சந்திக்க.. எமி விக்ரம் காதல் பிறக்கிறது.. காதல் ஸ்டெடியாகும் நிலையிருக்கும்போது மருந்தின் பக்க விளைவுகளால் மிகவும் மோசமான உருவத்துக்கு மாறுகிறார் விக்ரம். எமி ஜாக்சன்தான் தன் மேல் உள்ள பொறாமையால் தன்னை இந்த நிலைக்கு ஆளாகி விட்டதாக நினைக்கும் விக்ரம் எமியை கடத்துகிறார். ஆனால் உண்மையிலேயே இதற்கு காரணம் உபேன்தான் என்பதை பின்னர் கண்டுபிடிக்கிறார் விக்ரம். உபேனை தேட.. அதேசமயம் உபேனும் அதே மருந்தை உட்கொண்டு விக்ரமைவிட கொடிய மிருகமாக மாறியிருக்கிறார்.

விக்ரம்-உபேன் இருவருமே கிளைமாக்ஸ் காட்சியில் ஆக்ரோசமாகவும், ஆவேசமாகவும் மோதிக் கொள்கின்றனர். பின்னர் மாற்று மருந்தை கண்டு பிடித்து விக்ரம் உருவம் மாறினாரா..? இல்லையா…? என்பதுதான் ‘ஐ’ படத்தின் கதையாம்.

இதுதான் உண்மையிலேயே ‘ஐ’ படத்தின் கதையென்றால் இது எந்த நாட்டு படத்தின் காப்பி என்பது மிக விரைவில் வெளியாகும்..!

Our Score