full screen background image

இலவச கல்வியை வலியுறுத்தும் அர்ஜூனின் ‘ஜெய்ஹிந்த் பாகம்-2’ திரைப்படம்

இலவச கல்வியை வலியுறுத்தும் அர்ஜூனின் ‘ஜெய்ஹிந்த் பாகம்-2’ திரைப்படம்

எப்போதும் தேசப்பற்று ஒன்றை வைத்தே கல்லா கட்டும் அண்ணன் அர்ஜூன் இன்றைக்கு அதையும் தாண்டி கல்வித் துறையில் நடக்கும் ஊழல்களையும், நாட்டில் அனைவருக்கும் இலவசமாக கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதையும் மையமாக வைத்து ‘ஜெய்ஹிந்த் இரண்டாம் பாகம்’ படத்தைத் தயாரித்து இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு  விழா நேற்று காலை ‘சாந்தம்’ திரையரங்கில் நடந்தது.. பெரிய தலைகள் யாருமில்லாமல் இயக்குநர் பாலா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் மனோபாலா, நடிகர் மயில்சாமி இவர்களுடன் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்..

அர்ஜூன் பேசும்போது, ‘யார்’ படத்தில் அவரை முதன் முதலில் அறிமுகப்படுத்திய தாணுவை பற்றி உயர்வாகப் பேசினார். அவர்தான் தனக்கு ‘ஆக்சன் கிங்’ என்ற பட்டத்தை கொடுத்ததையும் சொன்னார்.

“யார்’ படத்தோட ஷூட்டிங்குக்கு என்னோட அப்பா வந்தாரு.. பார்த்தாரு.. தாணு ஸார் ஷூட்டிங் ஸ்பாட்ல என்னை கவனிச்சிக்குறத பார்த்திட்டாரு. போகும்போது என் அப்பா என்கிட்ட.. ‘தாணு நம்ம குடும்பத்துல ஒருத்தர். உனக்கு மூத்த அண்ணன் மாதிரி.. அவர் சொல் கேட்டு நடந்துக்க..’ என்று சொல்லிட்டுப் போனார்..” என்றார் அர்ஜூன்.

தயாரிப்பாளர் தாணு பேசும்போது, “நான் ‘யார்’ படத்திற்காக 100 அடி கட் அவுட் வைக்கச் சொன்னேன்.. ஆனால் 85 அடிதான் வைச்சிருந்தாங்க. அதை எடுத்து வேலூர்ல இருந்த ஒரு தியேட்டருக்கு கொடுத்திட்டு 100 அடி கட்அவுட்டை ரெடி செஞ்சு மறுபடியும் அதே இடத்துல வைச்சேன். அர்ஜூன் அன்னிக்கு எப்படி இருக்காரோ.. அதே மாதிரிதான் இன்னிக்கும் இருக்காரு.. என்னிக்கும் இருப்பாரு..” என்றார்.

நடிகர் மயில்சாமி பேசும்போது, நடிகர் அர்ஜூனின் தந்தையும் கன்னட சினிமாவில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்தவர் என்கிற உண்மையை சொன்னார். ‘இதயக்கனி’ படத்தில் விஞ்ஞானியாக வந்து கொலை செய்யப்படும் கேரக்டரில் எம்.ஜி.ஆருடன் நடித்தவர்  அர்ஜூனின் தந்தை என்கிற உண்மையையும் வெளியில் சொன்னார் மயில்சாமி.

இயக்குநர் மனோபாலா பேசும்போது, “இந்தப் படத்துல நடிக்கும்போது ஒரு நாள் ஒரு சீன் வைச்சிருந்தாங்க.. அதைச் சொன்னார் அர்ஜூன். ‘இது மாதிரி ரிஸ்க்கான ஷாட்டுல எல்லாம் நான் நடிக்க மாட்டேன்’னு சொல்லிட்டேன். ‘என்னங்க இப்படி சொல்றீங்க.. டிவிஎஸ் பிப்டி வண்டியை ஓட்டணும். இவ்ளோதான..?’ என்றார் அர்ஜூன். நானும் சொன்னேன்.. ‘அதேதான்.. ஆனா அதுதான் எனக்கு ரொம்ப ரிஸ்க்கு.. வேண்டாமே’ண்ணேன்.. ‘இல்ல.. இல்ல.. நடிச்சே ஆகணும்’னாரு.. நான் வண்டியை ஓட்ட.. பின்னாடி ஹீரோயின் சிம்ரன் கபூர் உட்கார வண்டி ஒரு 10 ஸ்டெப் முன்னாடி போச்சு.. திடீர் ஆக்சிடெண்ட்.. ஹீரோயினுக்கு பலத்த அடி.. ‘நான்தான் அப்பவே சொன்னனே.. நமக்கெல்லாம் இந்த மாதிரி ரிஸ்க்கான ஷாட்டெல்லாம் கொடுக்கக் கூடாது’ன்னேன்.. நமக்கு முகத்தைக் காட்டி வாய்ல வசனத்தை பேசிட்டு போயிக்கிட்டே இரு்ககணும்.. இதெல்லாம் எதுக்குன்னேன்..?” என்றார்.

இயக்குநர் பாலா பேசும்போது, “இந்தப் படத்தின் கரு சிறப்பானது.. அர்ஜூன் ஸார் இ்பபோதைய இந்தியாவுக்கு ஏற்ற கதையைத் தேர்வு செய்திருக்கிறார். இந்தப் படத்தில் மூன்று பெரிய பாடல்களும், ஒரு சின்ன பாடலும் இருப்பதாகச் சொன்னார்கள். என்னைக் கேட்டால் இது போன்ற படங்களில் மூன்று பாடல்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்பேன். அதிகமான பாட்டுக்கள் வைத்தால் கதையை விரிவாகச் சொல்ல முடியாது..” என்றார்.

படத்தில் கானா பாலா ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்தப் பாடலை மேடையில் பாடியும் காட்டினார்.

படத்தின் பாடல்களை இயக்குநர் பாலா வெளியிட.. முகுந்த் வரதராஜனின் குழந்தை ஆர்ஷியாவும், படத்தில் நடித்திருந்த சிறுமி யுவினாவும் பெற்றுக் கொண்டார்கள்.

படத்தின் டிரெயிலரை பார்த்தபோது கல்வி வள்ளல்களை எதிர்த்து தனியொருவன் புரட்சி செய்வது போல தெரிகிறது..! ‘ஜென்டில்மேன்’, ‘முதல்வன்’ படங்களின் பாதிப்பு அர்ஜூனுக்கு இன்னமும் இருக்கிறது போலும்..!

என்ன இருந்தாலும் முதல் பாகத்தில் இருந்த ‘சித்தெறும்பு’ பாடலை போல இதில் எதுவும் இல்லை என்பது ரஞ்சிதானந்தமாயியின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது..!

Our Score