உலக மகளிர் தினத்தை முன்னிட்டு `வி த வுமன் ஆஃப் ஆசியா’ என்ற கூட்டமைப்பு நடத்திய `குளோபல் டெளன் ஹால்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை பாவனா, தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அப்போது,“என் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய சம்பவங்கள் நடந்தன. மிகவும் கடினமான பயணத்தை நான் மேற்கொண்டு வருகிறேன். நான் பாதிக்கப்பட்டவள் அல்ல, எனக்கு ஏற்பட்ட அநியாயத்தை எதிர்த்து போராடுபவள். எனக்கு நியாயம் கிடைக்கும்வரை நான் போராடுவேன்.
நீதிக்கான போராட்டம் அவ்வளவு எளிதானது அல்ல. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது பற்றி விரிவாகக் கூற விரும்பவில்லை. நான் 15 முறை நீதிமன்ற விசாரணைக்காக சென்று வந்தேன். மீண்டும், மீண்டும் அவர்கள் கேட்ட கேள்விகளை நான் கடந்து வந்தேன்.
நான் நிரபராதி என தெளிவுபடுத்தும் பொறுப்பை நானே ஏற்றுக் கொண்டேன். என் தந்தை இருந்திருந்தால் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. நான் தொடர்ந்து போராடுவேன்.” என்றார் பாவனா.