‘பட்டதாரி’ பட விளம்பரத்தில் புறக்கணிப்பு – குமுறும் ஹீரோ அபி சரவணன்

‘பட்டதாரி’ பட விளம்பரத்தில் புறக்கணிப்பு – குமுறும் ஹீரோ அபி சரவணன்

GES Movies சார்பில் இளங்கோவன் லதா தயாரித்துள்ள திரைப்படம் ‘பட்டதாரி’. இந்தப் படத்தில் அபி சரவணன், அதிதி, ராசிகா தரணி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.சங்கர்பாண்டி இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் கதாநாயகனான அபி சரவணன் மற்றும் கதாநாயகிகள் ஒருவரான ராசிகா தாரணியை படத்தின் விளம்பரங்களில் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக செய்திகள் முன்பே வந்து கொண்டிருந்தன.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தபோதுகூட ஹீரோ, ஹீரோயின்கள் இல்லாமல்தான் விழா நடைபெற்றது.

இப்போது இந்தப் படம் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நேரத்திலும் பட விளம்பரங்களில் தன்னையும், சக ஹீரோயினையும் புறக்கணித்திருப்பது குறித்து படத்தின் ஹீரோவான அபி சரவணன் தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்.

pattathari-movie-poster-5

இது குறித்து அவர் இன்று தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள செய்தி இது :

“பட்டதாரி’ பட விளம்பர விஷயத்தில் இத்தனை நாட்கள் என்னை ஓரங்கட்டியபோதும் அமைதியாக இருந்த நான் இன்று (22/11/16) ‘தினத்தந்தி’ செய்தித்தாளில் வெளியான ‘பட்டதாரி’ பட விளம்பரம் கண்டு வருத்தமடைகிறேன்.

காரணம், நான் கதாநாயகனாக நடித்தும் என்னையும் மற்றொரு கதாநாயகி Raasika Dharani-யையும் விளம்பரத்தில் ஒரம் கட்டியதற்கு நான் கேள்வி கேட்கவில்லை. யாரை விளம்பரத்தில் போடலாம் என்பது தயாரிப்பாளரின் முடிவு.  

#Roc B designs விளம்பர கம்பெனி நிர்வாகி அவர்களே, வாங்கும் சம்பளத்திற்கு வேலை பாருங்கள். உங்களை நம்பிதான் தயாரிப்பாளர் செலவு செய்கிறார். உங்கள் விளம்பரம் பார்த்துதான் மக்கள் எங்களை போன்ற புதுமுகங்களையும், புதுப் படங்களையும் ஆதரிக்கிறார்கள்.. 

எனக்கு தெரிந்து  தமிழ்ச் சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் விளம்பரத்தில் நடிகர்களின் ஓரு புகைப்படத்தை மட்டுமே கடைசிவரையிலும் பயன்படுத்திய பெருமை உங்களையே சேரும்.

pattathaari-poster-2   

உங்கள்  விளம்பரத்தில் உள்ள நபரின் முகம் முழுதாக இல்லாமல் பாதி கட்டிங் செய்யப்பட்டு இருப்பதுகூடவா உங்களுக்கு தெரியாது..? வெளியிட்ட பத்திரிக்கையை இதற்கு காரணமாக உறுதியாக கூற முடியாது. காலம்காலமாக பல ஆயிரக்கணக்கான படங்களை விளம்பரப்படுத்திவரும் அவர்கள் இந்த தவறை செய்ய வாய்ப்பே இருக்க முடியாது.

ஆனால் படத் தயாரிப்பாளரின் சார்பாக விளம்பரம் கொடுக்கும்.. அவர்களிடத்தில் சம்பளம் வாங்கும் குழுவை சார்ந்த விளம்பர கம்பெனியில், ஒருவர் கூடவா இதை கவனிக்கவில்லை…?   படத்தின் முதல் design-ல் இருந்து வெறும் cut, copy, paste மட்டும்தான் உங்கள் வேலையா.?

மனதை தொட்டு கேட்டுப் பாருங்கள். ‘பட்டதாரி’ படத்திற்கு மட்டும் எத்தனை design செய்தீர்கள்..? 

இனிமேலோவது  உங்கள் வேலையில்  யாராவது(யாரோ) தலையிட்டால் அவர்களிடம் தெளிவாக எடுத்து  சொல்லி உங்கள் வேலையில் கவனமாக இருங்கள்.

பல முறை சம்பந்தபட்ட அனைவரையும் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால் இங்கு பதிவிடுகிறேன்.

ஏற்கனவே  இசை வெளீயீட்டின்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா அவர்கள் ‘பட்டதாரி’ படத்தின் விளம்பரம் குறித்து அதிருப்தியும் அடைந்து அறிவுரை கூறியும்கூட ஏன் அதை ஏற்கவில்லை..?” – என்று கேள்வியெழுப்பியிருக்கிறார் நடிகர் அபி சரவணன்.

சின்ன பட்ஜெட் படங்களில் முக்கிய விளம்பரமே அந்தப் படத்தின் ஹீரோ, ஹீரோயின்கள்தான். அவர்களையே புறக்கணித்துவிட்டு படத்தை வெளியிட்டு வருகிறார்கள் என்றால் இது அவர்களுக்கே நல்லதல்ல..

சினிமாவுலகம் தற்போது இருக்கும் சிரம திசையில் அனைவரையும் அனுசரித்து, தனி மனித ஈகோ பார்க்காமல் உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும். அட்லீஸ்ட் அந்தத் தயாரிப்பாளர் அடுத்தப் படத்தைத் தயாரிக்கும் அளவுக்காவது பொருளாதார ஆதாயம் திரும்பக் கிடைக்கும்.

இப்படி ஹீரோ, ஹீரோயின்களை புறக்கணித்துவிட்டு படத்தை வெளியிடுவதால் தயாரிப்பாளருக்கு என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது..?

படத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் கொஞ்சம் யோசிக்கட்டும்..!

Our Score