பெப்சிக்கு உடனே தேர்தலை நடத்துங்கள் – ஒளிப்பதிவாளர் சங்கம் கோரிக்கை..!

பெப்சிக்கு உடனே தேர்தலை நடத்துங்கள் – ஒளிப்பதிவாளர் சங்கம் கோரிக்கை..!

“பெப்சி’ என்றழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்…” என்று தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்றழைக்கப்படும் பெப்சி(Fefsi-Federation of Film Employees Union) நிர்வாகத்திற்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் இந்தாண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியோடு முடிவடைந்துவிட்டதாம். ஆனால் இன்னமும் தேர்தல் நடத்தப்படாமல் பழைய நிர்வாகிகளே தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்கள். இது சங்கங்களின் சட்டப்படி குற்றமாகும்.

பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பேயே முறையாக பொதுக்குழுவைக் கூட்டி அடுத்த தேர்தல் தேதியை அறிவித்து பதவிக் காலம் முடிவடைவதற்குள் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதுதான் அனைத்து சங்கங்களின் வழக்கம். ஆனால் சினிமா சங்கங்கள் மட்டும் என்றைக்குமே விதிவிலக்குதான்.

பல சங்கங்களின் தேர்தல்கள் இப்போதெல்லாம் நீதிமன்றத்தின் மூலமாகத்தான் நடத்தப்படுகின்றன. அந்த அளவுக்கு அனைத்து சங்கங்களிலும் போட்டிகள், சண்டை, சச்சரவுகள் அதிகமாக இருக்கின்றன. இப்போது பெப்சியின் முறை.

பெப்சி அமைப்பின் நிர்வாகிகள் சினிமா துறையைச் சேர்ந்த ஊழியர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக சினிமா தொழிலாளர்களுக்காக இருக்கும் 24 சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பேர் ஓட்டுப் போட்டுதான் பெப்சி அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் வேறு சில பதவிகளுக்கு பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அந்த வரிசையில் ஏதாவது ஒரு சினிமா சங்கத்தில் தலைவராகவோ, செயலாளராகவோ, பொருளாளராகவோ இருப்பவர்தான் பெப்சியின் அமைப்பில் நிர்வாகியாக இருக்க முடியும் என்பது சட்டம்.

fefsi siva-2

இப்போது பெப்சியின் தலைவராக இருப்பவர் ஜி.சிவா. இவர் ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளராக இருந்த்தினாலேயே பெப்சி அமைப்பின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக இருப்பதாலேயே அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கும் போட்டியிட்டு அங்கேயும் ஜெயித்து, இப்போது சிவாதான் அகில இந்திய பெப்சியின் தலைவராக இருக்கிறார்.

ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத் தேர்தலில் ஜி.சிவா போட்டியிட்டு தோல்வியடைந்துவிட்டார். முறைப்படி அப்போதே இவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் சினிமாவில் இருக்கும் அமைப்புகள் அனைத்தும் அமைதியாக இருந்துவிட்டதாலும், “இன்னும் 6 மாசம்தானே இருந்திட்டுப் போகட்டும்…” என்று சினிமா பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காத்ததாலும் விட்டுவிட்டார்கள்.

fefsi-election-letter-sica

இப்போது பதவிக் காலம் முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் தேர்தல் நடத்தாமல் இருப்பதை எதிர்த்து, வேறு எந்தச் சங்கமும் குரல் கொடுக்க முன் வராத நிலையில் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் மட்டுமே போர்க்குரலை எழுப்பியிருக்கிறது.

இதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. இன்று காலையில்தான் பெப்சி அமைப்பின் தற்போதைய தலைவரான ஜி.சிவா மீது, 40 லட்சம் ரூபாய் ஊழல் புகாரை சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடத்தில் ஒளிப்பதிவாளர் சங்கத்தினர் அளித்துள்ளனர்.

சிவா பெப்சி அமைப்பின் தலைவராகவும் இருப்பதால்தான் கணக்கு, வழக்குகளை காட்டாமல் தப்பிக்க முயல்கிறார் என்று ஒளிப்பதிவாளர் சங்கத்தின் நிர்வாகிகள் நினைக்கிறார்கள். இதனால்தான் இப்படியொரு வழியிலும் அவருக்கெதிராக நடவடிக்கையை துவக்கியிருக்கிறார்கள்.

எப்படியிருந்தாலும் சங்கத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் இது போன்று சட்ட விரோமான செயல்களுக்குள் போகாமல் சங்க விதிகளுக்குட்பட்டு நடந்து கொண்டால் அவர்களுக்கும் நல்லது. அவர்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கும் நல்லது.

இதற்கு பெப்சி அமைப்பின் பதில் என்ன என்பது விரைவில் தெரிய வரும்..!

 

Our Score