உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி சம்பவம், புனே திரைப்பட கல்லூரி விவகாரம் ஆகியவற்றை கண்டித்து பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் கவிஞர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயரிய விருதுகளை அரசிடம் திருப்பி அளித்தனர். மேலும், நாட்டில் சகிப்புத்தன்மை சிறிதுகூட இல்லை என்றும் அவர்கள் குற்றம்சுமத்தினார்கள்.
இந்த நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளை திருப்பி ஒப்படைப்போம் என்று இந்தி திரையுலகை சேர்ந்த 12 இயக்குநர்கள் கடந்த மாதம் அறிவித்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்றைக்கு 24 திரைப்பட கலைஞர்கள் விருதுகளை திருப்பி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படி தேசிய விருதுகளை அரசிடம் திரும்பவும் ஒப்படைப்பதற்கு பிரபல நடிகையும், பாரதீய ஜனதா எம்.பி.யுமான ஹேமமாலினி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று நடிகை ஹேமமாலினி பேட்டியளித்தபோது, “தேசிய விருதுகளை பெறுவதற்காக உயிரை கொடுத்து உழைக்கிறார்கள். எனவே அவற்றை திருப்பி அளிப்பது சரியானது அல்ல. இந்த போராட்டம் அரசியல் ரீதியாக தூண்டிவிடப்பட்ட விவகாரம் என்று நான் கருதுகிறேன். தேசிய விருது என்பது நாட்டின் கவுரவம். ‘தேசிய விருதுகளை பெற நீங்கள் உதவி செய்ய முடியுமா..?’ என்று என்னிடம் கேட்டவர்கள், இன்றைக்கு அவற்றை திருப்பி அளிக்கிறார்கள்..” என்றார்.
கலைஞர்கள் அரசியலில் சேர்ந்தால் இப்படித்தான் பேசுவார்கள்..!