“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..!

“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..!

நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ திரைப்படம் கடந்த 6-ம் தேதி வெளியாகி மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது.

பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த அறிமுக இயக்குநரான அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியிருந்தார். பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இப்படத்தை பெரிதாக கொண்டாடி வருகிறார்கள்.

‘குண்டு’ படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகங்கள் மற்றும் பொது மக்களுக்கு நன்றி சொல்லும் விழா இன்று காலையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், லெனின் பாரதி, ரவிக்குமார், ஸ்ரீகணேஷ், கவிஞர் அறிவுமதி மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

gundu-success-meet-1

இந்நிகழ்வில் தயாரிப்பாளரும், இயக்குநருமான பா.ரஞ்சித் பேசும்போது, "நான் கல்லூரியில் படித்து முடிக்கும்வரையிலும் சினிமா துறையில் சேர்ந்து படம் இயக்க வேண்டும்.. படம் தயாரிக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்ததில்லை.

நான் சந்தித்த ஆளுமைகள்தான் என்னைப் படமெடுக்க உந்தினார்கள். ‘சில்ட்ரென் ஆப் ஹெவன்’ போன்ற படங்கள் என்னை ஊக்கப்படுத்தியது. என்னை அழ வைத்த படங்கள்தான் நான் பட்டுக் கொண்டிருந்த வலிகளை படமாக பதிவு செய்யத் தூண்டியது.

நான் யார் என்பதை முதலில் சொல்ல வேண்டும். அதன் பின் என்னை தெரிந்து கொண்டு என்னிடம் மற்றவர்கள் வர வேண்டும் என்று நினைத்தேன். புத்தகங்கள் வாசிப்பது பிரச்சனையாக இருந்த காலத்தில்தான் நான் இந்தச் சினிமா துறைக்குள் நுழைந்தேன்.

நான் தாஸ்தாவஸ்கி நாவலைப் படிக்கும்போது ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார். வேலை செய்யும்போது நான் பீப் பிரியாணி சாப்பிடுவதில் நிறைய பேர்களுக்கு பிரச்சனை இருந்தது. அது பெரிய உளவியல் நெருக்கடி. அதை சினிமாத் தளத்தில் பேச வேண்டும் என்று ஆசை கொண்டேன்.

மாற்று சினிமாவிற்கு மக்களிடம் இருந்து பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அதனால் அவற்றை மக்களுக்கான மொழியில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

gundu-success-meet-2

ரஜினி சாரை வைத்து படமெடுப்பேன் என்று நினைத்ததே இல்லை. அவர் ‘கபாலி’ படத்தில் “அம்பேத்கர் கோட் போட்டதுக்கும், காந்தி கோட் போடாததுக்கும் பின்னாடி அரசியல் இருக்கு” என்று பேசியபோதுதான் நான் சினிமாவிற்கு வந்ததிற்கான பலனை அடைந்தேன்.

‘பரியேறும் பெருமாள்’ படம் எடுக்கும்போது பெரிய பயம் இருந்தது. குறிப்பாக பத்திரிகையாளர்கள் மீது பயம் இருந்தது. அப்படத்தை யாரிடமும் காட்ட வேண்டாம் என்று நினைத்தேன். பிரஸுக்கு காட்ட வேண்டும் என்று முடிவானதும் இன்னும் பயமாக இருந்தது.

ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் மாரி செல்வராஜை கட்டிப் பிடித்தார்கள். எனக்கு கை, கால்கள் உதறத் துவங்கியது. அந்தப் படம் தந்த உற்சாகம் பெரியது. அந்தப் படம் கமர்சியலாகவும் பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் வெற்றிதான் இந்தக் ‘குண்டு’ படத்தைத் தயாரிக்கும் நம்பிக்கையைத் தந்தது.

அதியனின் உழைப்பு எப்படிப்பட்டது என்று எனக்குத் தெரியும். இந்த டீம் திறமைமிக்க மனிதர்கள் நிறைந்தது. தகுதி, திறமை என்பதை இங்கு கவனிக்கும் விதத்தில்தான் பிரச்சனை இருக்கிறது. இந்தப் படத்தையும் பிரஸுக்கு போட்டுக் காட்டுவதில் பயம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தையும் பத்திரிகையாளர்கள் கொண்டாடிவிட்டார்கள்.

ரொம்பவும் சூப்பரான வெற்றியை பிரஸும் மக்களும் தந்தார்கள். வெறும் எதிர்ப்பை மட்டும் காட்டாமல் நல்ல விசயத்தை கொண்டு சேர்ப்பதிலும் பிரஸ் முன்னணியில் இருக்கிறது.

சினிமா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஆயுதம். எளிய மக்களிடம் ஒரு விசயத்தை ஈசியாக கடத்த முடியும் என்றால் அது சினிமாவில்தான் சாத்தியம். இப்படியான நல்ல படங்களைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தந்து கொண்டேயிருக்கும்…" என்றார்.