தெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..!

தெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..!

சுவாதிஷ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் P.S.J. பழனிராஜன்  தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பேப்பர் பாய்’.

இந்தப் படத்தின் நாயகனாக சுவாதிஷ் ராஜா, நாயகியாக யாமினி பாஸ்கர் இருவரும் அறிமுகமாகிறார்கள்.

மற்றும் முக்கியக் கதாபாத்திரங்களில் வடிவுக்கரசி, ‘தலைவாசல்’ விஜய், சுஜாதா, ‘கடலோரக் கவிதைகள்’ ரேகா, ‘ராட்சசன்’ பட வில்லன் சரவணன், எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன், ‘தாரை தப்பட்டை’ அக்ஷயா,  பாலா, அமுதவாணன்  ஆகியோரும் நடிக்கிறார்கள். மேலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஒளிப்பதிவு – ஜெகதீஷ் V.விஸ்வா, ‘கோலிசோடா’, ‘சண்டி வீரன்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இசையமைக்கிறார். படத் தொகுப்பு – எல்.வி.கே.தாஸ், நடன இயக்கம் – சாண்டி மாஸ்டர், மக்கள் தொடர்பு – ஆனந்த், இணை தயாரிப்பு G.C.ராதா.

இப்படத்தை, இயக்குநர்  விஜய் மில்டனிடம் ‘கடுகு’, ‘கோலிசோடா-2’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஸ்ரீதர் கோவிந்தராஜ் இயக்குகிறார்.

இப்படம் பற்றி இயக்குநர் ஸ்ரீதர் கோவிந்தராஜ் பேசும்போது, “இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘பேப்பர் பாய்’ படத்தின் ரீமேக் ஆகும்.  தமிழுக்கு தகுந்தாற்போல் அதில் சிறு, சிறு மாற்றங்களை உருவாக்கி உள்ளோம்.

அன்றாடம் பேப்பர் போட்டு வாழ்க்கை நடத்தும் ஒரு இளைஞனுக்கும், கோடீஸ்வர நாயகிக்கும் உருவாகும் காதல்.. அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்தான் இந்தப் படத்தின் கதை.

இது முழுவதுமாக எதார்த்தங்கள் நிறைந்த கதையாக இருக்கும். காதல் காட்சிகள் நிறைந்த படம் என்பதால் இதில் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். ‘காதல் கோட்டை’, ‘காதலுக்கு மரியாதை’ வரிசையில் ஒரு எதார்த்த காதல் கதையை  2020-ல் இந்தப் படத்தில் அனைவரும் காணலாம்..” என்றார்.

‘பேப்பர் பாய்’ படத்தின் படப்பிடிப்பு இன்று வளசரவாக்கத்தில் உள்ள கேரளா ஹவுசில் பூஜையுடன் தொடங்கியது.

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இதன் படப்பிடிப்பு சென்னை,  கேரளா மற்றும் கர்நாடகாவில் நடைபெற உள்ளது.

Our Score