full screen background image

கூகுள் குட்டப்பா – சினிமா விமர்சனம்

கூகுள் குட்டப்பா – சினிமா விமர்சனம்

ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் எண்ட்டர்டெயின்மண்ட் ஆகிய இரண்டு பட நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

ந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன்,  பூவையார், பிளாக் பாண்டி, பவித்ரா லோகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது.

ஒளிப்பதிவு – ஆர்.வி., இசை – ஜிப்ரான், பாடல்கள் – மதன் கார்க்கி, விவேகா, படத் தொகுப்பு – பிரவின் ஆண்டனி, கலை இயக்கம் – சிவ கிருஷ்ணா, கதை – ரத்தீஷ் பாலகிருஷ்ணன் பொடுவல், தலைமை தயாரிப்பு நிர்வாகம் – பி.செந்தில்குமார், ஒலிக் கலவை – எஸ்.சிவக்குமார், ஒலி வடிவமைப்பு – கிருஷ்ணன் சுப்ரமணியன், உடைகள் வடிவமைப்பு – ஜெ.கவிதா, புகைப்படங்கள் – ராமசுப்பு, மக்கள் தொடர்பு – யுவராஜ், எழுத்து, இயக்கம் – சபரி-சரவணன்.

மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்தப் படம்.

கோவை பகுதியில் ஒரு கிராமத்தில் சற்று வசதியாக வாழ்ந்து வருகிறார் சுப்ரமணி கவுண்டர் என்ற கே.எஸ்.ரவிக்குமார். இவரது மகன் தர்ஷன். பி.இ. பட்டதாரி. ஆனால், வேலைக்குப் போக முடியாமல் தவிக்கிறார்.

மனைவியை இழந்து தனிமையில் இருப்பதால் மகனும் தன்னை விட்டுப் போய்விட்டால் தன்னைக் கவனிக்க ஆள் இருக்காதே என்பதால், “உள்ளூரிலேயே ஏதாவது வேலைக்குப் போ.. இல்லையென்றால் வேலைக்கே போக வேண்டாம்…” என்று மகன் தர்ஷனை தடுத்து வைத்திருக்கிறார் அப்பா ரவிக்குமார்.

தர்ஷனோ படிப்புக்கேற்ற நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்ற ஆசையுள்ளவர். அதிலும் வெளிநாட்டுக்குச் சென்று வேலை பார்க்க துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படியான சூழலில் கனடாவில் தர்ஷனுக்கு வேலை கிடைக்கிறது. வழக்கம்போல ரவிக்குமார் தடுக்கிறார். ஆனால், தனது மாமனான யோகிபாபுவின் தூண்டுதலால் தைரியம் வந்து ரவிக்குமாரிடம் சண்டையிடுகிறார் தர்ஷன்.

“அப்புறம் எதுக்கு என்னை இன்ஜீனியரிங் படிக்க வைச்சீங்க..?” என்று கொந்தளிக்கிறார் தர்ஷன். பையனின் பேச்சு வேறுவிதமாக இருப்பதால் தர்ஷனை கனடா செல்ல அனுமதிக்கிறார் ரவிக்குமார்.

கனடாவில் ரோபோட்’ எனப்படும் எந்திர மனிதர்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார் தர்ஷன். அப்போது அங்கேயே வேலை செய்யும் லாஸ்லியா மீது காதலாகிறார் தர்ஷன்.

இந்த நேரத்தில் கிராமத்தில் ரவிக்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். உடனேயே ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தர்ஷனிடம், தங்களது நிறுவனத்தின் தயாரிப்பான ரோபோட் எந்திரத்தையும் உடன் அனுப்பி வைக்கிறார் அந்த நிறுவனத்தின் முதலாளியான சுரேஷ் மேனன்.

ரோபோட்டுடன் வீடு திரும்பிய மகனை வரவேற்கும் ரவிக்குமாருக்கு ரோபோட் மீது முதலில் அன்பு வரவில்லை. மாறாக எரிச்சலாகிறார். ஆனாலும், வேறு வழியில்லாமல் அதனுடனேயே வாழ வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்படுகிறது.

மகன் கனடா சென்றதும்தான் ரோபோட்டின் முக்கியத்துவம் ரவிக்குமாருக்குத் தெரிய வருகிறது. அடுத்தடுத்த சம்பவங்களால் ரோபோட்டை தன்னுடைய இன்னொரு மகனாகவே தத்தெடுத்துக் கொள்கிறார் ரவிக்குமார்.

இதற்கிடையில் அந்த ரோபோட்டை வீட்டில் வைத்திருந்தால் அது ரவிக்குமாரின் உயிருக்கே ஆபத்து என்ற உண்மை தர்ஷனுக்குத் தெரிய வர, அவர் அவசரமாக லாஸ்லியாவை அழைத்துக் கொண்டு ஊர் திரும்புகிறார்.

இப்போது ரவிக்குமாரும், ரோபோட்டும் இணை பிரியாத தோழர்களாக இருக்கிறார்கள். அப்பாவிடமிருந்து ரோபோட்டை எப்படி பிரிப்பது என்று தர்ஷன் யோசிக்க.. ஒரு நிமிடம்கூட ரோபோட்டை தன்னால் பிரிய முடியாது என்று ரவிக்குமார் சொல்ல.. அந்த வீட்டில் பாசப் போராட்டம் ஆரம்பமாகிறது.

இறுதியில் என்னாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

குடும்பமே முக்கியம் என்றிருந்த இந்தியாவில் தற்போது தனி மனித சுதந்திரம் அதிகமாகி, பெற்றோர்களை அனாதைகளாக்கி விட்டுவிட்டுச் செல்லும் பிள்ளைகள் அதிகரித்து வருகின்றனர். அந்தப் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவதற்காக வந்திருக்கும் படம்தான் இது.

கே.எஸ்.ரவிக்குமார் தனது கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பைத்தான் காண்பித்திருக்கிறார். அவரே ஒரு இயக்குநர் என்பதால் தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சை கவனத்துடன் பாலோ செய்து நடித்திருக்கிறார். காலை சாய்த்து, சாய்த்து நடக்கும் அந்த ஸ்டைலையும் கடைசிவரையிலும் விடாமல் வைத்திருக்கிறார்.

மகனிடம் கோபம், பாசம், அன்பு, தாபம் எல்லாவற்றையும் காட்டும்விதத்தில் ஒரு பரிதாபமான அப்பாவை ரவிக்குமாரிடமிருந்து நம்மால் பார்க்க முடிகிறது. அவருடைய காதல் போர்ஷன் கதையை மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். மலையாளத்தில் இல்லாத துள்ளலை இதில் கொணர்ந்திருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள்.

ரோபோட்டை முதலில் வெறுத்தவர் பின்பு மெல்ல, மெல்ல அதைப் புரிந்து கொண்டு அதனுடன் இசைவதும், அது காட்டும் அன்பில் சிக்குண்டு கிடப்பதும்.. கடைசியில் அதன் பிரிவைத் தாங்காத துயரத்தைக் காட்டும் அவரது ஓலமும், பார்ப்போரை கண் கலங்க வைக்கிறது. சிறந்த நடிகராக மெருகேறிவிட்டார் கே.எஸ்.ரவிக்குமார். வாழ்த்துகள் ஸார்..!

தர்ஷனுக்கு இது முதல் படம் என்பதால் குற்றம், குறைகளை சொல்லத் தேவையில்லை. தன் வேடத்திற்கேற்ற நடிப்பை, தனக்கு வரக் கூடிய நடிப்பைத்தான் காண்பித்திருக்கிறார். இவரைப் போலவேதான் லாஸ்லியாவும். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி வேறு.. சினிமா வேறு என்பதை அவரும் இப்போது புரிந்து கொண்டிருப்பார்.

யோகிபாபுதான் படத்தை அவ்வப்போது கலகலக்க வைப்பவர். டைமிங் சென்ஸில் யோகிபாபு எங்கயோ போய்க் கொண்டிருக்கிறார். நிச்சயமாக பாராட்ட வேண்டிய விஷயம். பொருத்தமான தேர்வு என்றே சொல்லலாம்.

பவித்ரா லோகேஷ் தன் பங்குக்கு படம் பார்க்கும் பெரிசுகளின் பால்ய காலத்து காதல்களை கிளறிவிட்டுச் செல்கிறார். இந்தக் காதல் கதை ‘சிம்ப்ளி சூப்பர்ப்’ என்றே சொல்லலாம்.

‘குட்டப்பா’ என்ற பெயரைக் கேட்டாலே கொலை வெறியாகும் அவரது மகனான நடிகரும் தன் பயங்கரத்தை முகத்திலேயே காட்டியிருக்கிறார்.

சின்ன பட்ஜெட்.. கிராமத்துப் பின்னணி என்பதால் ஒளிப்பதிவும் மிக எளிமையாகவே இருக்கிறது. கடைசிவரையிலும் அதை அழகாக மெயின்டெயின் செய்திருக்கிறார்கள். ஜிப்ரானின் இசையில் 3 பாடல்கள் ஓகே ரகம். ரவிக்குமாருக்கும், ரோபோவுக்கும் இடையிலான நட்பை சொல்லும் அந்தப் பாடலும், பாடலுக்கான மாண்டேஜ் காட்சிகளும் மனதைத் தொடுகின்றன.

ரோபோவை வடிவமைத்தவர்களை நிச்சயமாக பாராட்டத்தான் வேண்டும். அது பேசும் வசனங்களும், குரலும் கச்சிதமாக அந்த ரோபோவுக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது. “மிஸ்டர் சுப்ரமணி” என்ற கணீர் குரலுக்குச் சொந்தக்காரர் யார் என்பதைத் தேடிப் பிடித்துப் பாராட்ட வேண்டும் போலிருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து கொண்டு பெற்றோர்களுக்கு வெறுமனே பணத்தை மட்டும் அனுப்பிவிட்டு அன்பையும், பாசத்தையும் மூட்டி கட்டி தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு சுயநலத்துடன் திரும்பிப் பார்க்காமல் வாழும் பிள்ளைகளுக்கான படம் இது.

நிச்சயமாக குடும்பத்துடன், பிள்ளைகளுடன் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது..!

மிஸ் பண்ணிராதீங்க..!

RATING : 3.5 / 5

Our Score