ஒரு படம் வெளிவந்து சிறப்பாக இருக்கிறது என்ற தகவல் தெரிந்தாலே உடனடியாக கோடம்பாக்கத்தில் அதன் கதை பற்றிய சர்ச்சைகளும் வெளியாகிவிடும். அந்த வரிசையில் லேட்டஸ்ட் சர்ச்சை ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கியிருக்கும் கோலி சோடா படம் பற்றியது..
அந்தப் படத்தின் கதை தன்னுடையது என்றும், தானே திரைக்கதை அமைத்துக் கொடுத்ததாகவும் விஸ்வாமித்தரன் என்னும் சினிமா எழுத்தாளர் கூறியுள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் பரவியிருக்கின்றன.. ஆனால் இன்னமும் அந்த விஸ்வாமித்தரன் வெளிப்படையாக இதனை எங்கேயும் கூறவில்லை. அவருடைய சார்பாக அவருடைய நண்பர்கள் சிலர்தான் இதனை பரப்புரை செய்து வருகிறார்கள்.
அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பாக இதே போன்று சிறுவர்களை மையமாக வைத்து துவக்கப்பட்ட கோலி பசங்க என்ற போஸ்டர் டிசைனை வைத்தும் இப்படத்தை சர்ச்சைகள் தாக்கிக் கொண்டிருக்கின்றன.. இந்த நேரத்தில்தான் இயக்குநர் விஜய் மில்டன் இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். கூடவே வீடியோவிலும் பேசி அதனையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.
விஜய் மில்டன் தன்னுடைய அறிக்கையில்………..
“ஆன்-லைன்’ல இந்த படத்துக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கலை. பாராட்டற எல்லாருமே நாங்க ஜெயிச்ச மாதிரி இருக்குன்னு சொல்றத கேக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனால், கடந்த இரண்டு நாளா இந்த படத்தைப் பத்தி சில ‘டிஸ்புயூட்ஸ்’லாம் வந்திட்டிருக்கு. இந்த கதை அவரோடது, என்னோட, டைட்டில் என்னோடது, நான் ஏற்கெனவே பண்ணிட்டேன்னு சொல்றாங்க.
நான் ஒரு சின்ன ரிக்வெஸ்ட் மட்டும் வைக்கிறேன். நீங்க யாரா இருந்தாலும் சரி, உங்கிட்ட ஆதாரம் இருந்தால் தயவு செய்து அதை வெளிப்படுத்துங்க. சம்பந்தப்பட்டவங்களைப் பேசச் சொல்லுங்க. இந்த ஸ்கிரிப்ட் வரிக்கு, வரி எழுதிய காப்பி என்கிட்ட இருக்கு. இந்த கதைய வச்சிக்கிட்டு நான் எத்தனை வருஷமா அலைஞ்சிருக்கேன். 5 நாள் இன்னொரு படத்துல வேலை செஞ்சி, அப்புறம் அதுல கிடைச்ச பணத்தை வச்சி, சனி, ஞாயிறுல கோலி சோடா படத்தோட ஷுட்டிங்கை நடத்தியிருக்கேன்.
ஒருத்தர் கதையைத் திருடி, இன்னொருத்தர் படம் பண்ணி ஜெயிச்சிடவே முடியாது. ஒரு கதை மாதிரி, இன்னொரு கதை வந்துடுச்சின்னா, அது நடக்கத்தான் செய்யும். அதுக்காக நாம வருத்தப்படக்கூடாது. இதெல்லாம் ‘பார்ட் ஆப்த கேம்’. நீங்க சொல்றது உண்மைன்னு நம்புனீங்கன்னா, கோர்ட்டுக்குப் போங்க. போலீஸ் ஸ்டேஷன் போங்க. தயவு செய்து என் முதுகுக்குப் பின்னாடி எழுதறத நிறுத்துறங்க.
இன்னொருத்தரோட அடையாளத்தை வச்சி நான் படம் எடுத்திருந்தால் நான் மனுஷனே கிடையாது. அதே மாதிரி என் அடையாளத்தை யாராவது அழிக்கணும்னு நினைச்சா, நான் மனுஷனா இருக்க மாட்டேன். இது வந்து நியாயமான ஒரு பிலிம் மேக்கரோட கோபம்.
யாராவது நான் செஞ்சது தப்புன்னு நினைச்சீங்கன்னா, என் முகத்திரையை கிழியுங்கள். எக்ஸ்போஸ் பண்ணுங்க…என்கிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு. தயவு செஞ்சி பின்னாடி வந்து பழி போடாதீங்க. ரிலீஸ் ஆனதுக்கப்புறம் இந்த படத்துக்கு கிடைச்ச ஆன்லைன் சப்போர்ட்தான் இந்த படத்துக்கான மரியாதையை கிரியேட் பண்ணி கொடுத்திச்சி, ரொம்ப நன்றி… ”
இப்படி தனது அறிக்கையில் தனது கொந்தளிப்பான மனநிலையை தெரியப்படுத்தியுள்ளார் விஜய்மில்டன்..
ஒரு சமயத்தில் ஒரேவிதமான சம்பவங்கள் பல பேருக்கு தோன்றியிருக்கலாம். அதனை அவரவர்கள் பதிவு செய்து வைத்திருக்கலாம். தன்னைப் போலவே வேறு யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் என்று நம்புவது முட்டாள்தனம்.. கதையின் கருவை பலரும் நினைத்திருக்கலாம். திரைக்கதை, விஷுவல் ட்ரீட் மட்டுமே ஒற்றுமையாகவே கருதப்படும். விஜய் மில்டன் கேட்டுக் கொண்டுள்ளபடி இந்தக் கதையும், திரைக்கதையும் தன்னுடையது என்று சொல்லும் எழுத்தாளர் விஸ்வாமித்திரரோ அல்லது அவரது நண்பர்களோ தாமாகவே முன் வந்து இது பற்றிய ஆதாரங்களை வெளியிட்டு பேசுவதுதான் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும்..! செய்வார்களா என்று பார்ப்போம்..!
காத்திருப்போம்..!
விஜய்மில்டனின் வீடியோ பேச்சு