சினிமாவில் நடிப்பவர்களின் மனதுக்குள் உறங்காத ஒரு கனவு நிச்சயம் இருக்கும். அது அவர்களே இயக்குநராவது..! எவ்வளவு முயற்சித்தாலும் அது வெளிப்படுவதைத் தடுக்க முடியாது என்பதால் புகழ் பெற்ற நடிகர்கள் பலரும் ஒரு படத்தையாவது இயக்கி தங்களது ஆசையைத் தீர்த்திருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் டேனியல் பாலாஜியும் இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானாலும் ‘காதல் கொண்டேன்’ படத்தில் சிறிது பேசப்பட்டார். அதன் பின் வந்த ‘காக்க காக்க’ படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் டேனியல் பாலாஜி.. ‘வேட்டையாடு விளையாடு’, ‘பொல்லாதவன்’, ‘முத்திரை’, ‘மிதிவெடி’ என்று பல படங்களில் நடித்திருக்கிறார். இவரது வித்தியாசமான நடிப்பில் தற்போது ‘ஞானகிறுக்கன்’ படம் தயாராக இருக்கிறது.. தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை’ என்ற படத்திலும் ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படங்களோடு தனது நடிப்புக்கு கொஞ்சம் பிரேக்விட்டுவிட்டு, அடுத்து படத்தை இயக்கப் போகிறாராம் டேனியல். படத்தின் பெயர் ‘குறோணி’. இப்படத்தை மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் M.R.கணேஷ் தயாரிக்கிறார். வாழ்த்துகள் டேனியலுக்கு..!
தமிழில் பெயர் வைத்தாலே அது தமிழ் வார்த்தையா என்று ஆயிரத்தெட்டு கேள்வி கேட்கும் அளவுக்கு இங்கே செய்தித் துறையின் கீழ் வரும் வரிவிலக்கு கமிட்டியினர் இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இந்த ‘குறோணி’ என்ற பெயருக்கு என்ன விளக்கம் கொடுத்து தப்பிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை..
என்ன இருந்தாலும் டேனியலுக்கு அடுத்து வரவிருக்கும் ‘ஞானக்கிறுக்கன்’ படந்தான் இயக்குநர் ஆசையைத் தூண்டிவிட்டிருக்கும் என்கிறார்கள். அந்த அளவுக்கு அந்தப் படத்தில் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறாராம் டேனியல்.. அதையும் பார்ப்போம்..