‘கெத்து’ படத்திற்கு வரி விலக்கு தர மறுத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

‘கெத்து’ படத்திற்கு வரி விலக்கு தர மறுத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கெத்து’ என்ற படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்க மறுத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

‘ரெட் ஜெயின்ட் மூவிஸ்’ சார்பில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கெத்து படத்திற்கு தமிழக அரசு வரி விலக்கு அளிக்கவில்லை. இதனை எதிர்த்து அந்த நிறுவனத்தின் மேலாளர் சரவணமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கெத்து’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் கடந்த 14-ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு கேட்டு வணிக வரி மற்றும் பத்திரப் பதிவு துறை முதன்மை செயலாளரிடம் கடந்த 11-ந் தேதி விண்ணப்பம் செய்தோம்.

எங்கள் படத்துக்கு சென்சார் வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. கேளிக்கை வரி சலுகை வழங்குவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட திரைப்படத்தை அரசு அதிகாரிகள் மற்றும் அரசால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் பார்த்து, அவர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் அரசு இறுதி முடிவு எடுக்கும்.

எங்களது ‘கெத்து’ படத்தை எம்.என்.ராஜம், வாணி ஜெயராம் உள்பட 8 உறுப்பினர்கள் பார்த்தனர். இவர்களில் பலர் படத்தின் கதையும், நடிகர்களின் நடிப்பும் சிறப்பாக உள்ளதாகவும், ஆனால் ‘கெத்து’ என்ற வார்த்தை தமிழ் வார்த்தை இல்லை என்று கூறியுள்ளனர். இதனால், எங்களது படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்க முடியாது என்று அரசு கடந்த 14-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.

ஆனால், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள அகராதியில், ‘கெத்து’ என்ற வார்த்தைக்கு ‘தந்திரம்’ என்று கூறியுள்ளது. அதேபோல, க்ரியா தற்கால தமிழ் அகராதியில், ‘கெத்து’ என்ற வார்த்தைக்கு ‘தன்னுடைய உயர்வையும், பெருமையையும் காட்டிக்கொள்ளும் போக்கு’ என்று அர்த்தம் கூறியுள்ளது. 

எனவே, ‘கெத்து’ என்ற வார்த்தை தமிழ் வார்த்தைதான். அதேநேரம், எங்கள் படத்துடன் வெளியான ‘ரஜினி முருகன்’ என்ற படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. 

ஏற்கனவே எங்கள் நிறுவனம் தயாரித்த ‘நண்பேண்டா’ என்ற படத்துக்கு வரிச் சலுகை தரவில்லை. இது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது. ‘கெத்து’ படத்தில் நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான தி.மு.க.வின் பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகன் என்பதால், தமிழக அரசு உள் நோக்கத்துடன் செயல்படுகிறது.

மேலும் கேளிக்கை வரிச் சலுகை வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்யும் குழுவில் ஆளும் அ.தி.மு.க.வின் ஆதரவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் பலர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள். இவர்களுக்கு ‘கெத்து’ என்பது தமிழ் வார்த்தை என்றுகூட தெரியவில்லை.

எனவே, எங்கள் படத்துக்கு வரிச் சலுகை தர மறுத்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். கேளிக்கை வரிச் சலுகை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்..” என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு (இன்று) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Our Score