full screen background image

கேம் ஓவர் – சினிமா விமர்சனம்

கேம் ஓவர் – சினிமா விமர்சனம்

வொய் நாட் (Y NOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S.சசிகாந்த் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் டாப்சி பன்னு நாயகியாகவும் நடித்துள்ளார். மேலும் வினோதினி வைத்தியநாதன், அனிஷ் குருவில்லா, சஞ்சனா நடராஜன், ரம்யா சுப்ரமணியன், பார்வதி.T மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – A.வசந்த், இசை – ரான் ஈதன் யோஹன், படத் தொகுப்பு – ரிச்சர்ட் கேவின், சண்டை இயக்கம் – “Real” சதிஷ், ஸ்டில்ஸ் – M.S.ஆனந்தன், கலை இயக்குநர் – சிவா சங்கர், காஸ்ட்யும் டிசைனர் – N.K.நந்தினி, சவுண்ட் டிசைனர் – சச்சின் சுதாகரன், ஹரிஹரன் (Sync Cinema), பப்ளிசிட்டி டிசைனர் – கோபி பிரசன்னா, மக்கள் தொடர்பு – நிகில், திரைக்கதை – அஷ்வின் சரவணன் & காவ்யா ராம்குமார், இயக்கம் – அஷ்வின் சரவணன், தயாரிப்பாளர் – S. சசிகாந்த், தயாரிப்பு நிறுவனம் – வொய் நாட் ஸ்டுடியோஸ்.

மதுரவாயலில் ஒதுக்குபுறமான வீட்டில் வாழும் அமுதா என்னும் சஞ்சனாவின் தலையைக் கொய்து, நாற்காலியோடு உடலை எரித்துக் கொடூரமாக ஒரு முகமூடி கொலை செய்கிறான். ஓ.எம்.ஆரில் வசிக்கும் சுவப்னா என்னும் டாப்சி பன்னுவிற்கு இருட்டு என்றால் பயம். அதனால் மனநல மருத்துவரான அனிஷ் குருவில்லாவிடம் சிகிச்சைக்குச் செல்கிறார். ஒரு வருடத்திற்கு முன், 31 டிசம்பர் 2017 அன்று, 2018இன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நண்பனை வெளியில் செல்லும் ஸ்வப்னாவை, அவள் நண்பன் இருட்டில் வலுகட்டாயமாகக் கட்டிப் போட்டு சீரழித்து விடுகிறான்.

2018 டிசம்பர் மாதம் நெருங்க நெருங்க, டாப்சிக்கு இருளைப் பார்த்தாலே மூச்சுத் திணறல் ஏற்பட்டு மனதளவில் மிகவும் திக்குமுக்காடத் தொடங்குகிறார். ஒரு உணவகத்தில், உணவிற்காக டாப்சி காத்துக் கொண்டிருக்கும் பொழுது, மொபைலில் அவரது நிர்வாணப் படங்களை இரண்டு இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் மனமுடையும் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். கத்தியால் கையை வெட்டிக் கொல்லவும், தூக்கில் தொங்கவும் முயற்சி செய்யும் பொழுது டாப்சியின் கையில் வரைந்த டேட்டூ வலிக்கத் தொடங்குவதால் தற்கொலை முயற்சியைக் கைவிட வேண்டி வருகிறது.

டேட்டூ வரைந்து கொண்ட இம்மார்ட்டல் இன்க்ஸ் கடைக்குச் சென்று வர்ஷா என்னும் ரம்யா சுப்ரமணியனைச் சந்திக்கிறார். டாப்சியின் டேட்டூவில், இறந்து போன அமுதாவின் அஸ்தியைக் கொஞ்சம் கலந்து விட்டதாகச் சொல்லி மன்னிப்பு கேட்கிறார். டேட்டூவை அழிக்க தோல் மருத்துவரிடம் செல்கிறார். ஆனால் கை மீண்டும் வலிக்க, டேட்டூவை நீக்காமல் வீடு திரும்புகிறார்.

டாப்சியின் வீட்டில் வேலை செய்யும் கலாம்மா என்னும் வினோதினி, தற்கொலை முயற்சிக்கு டாப்சி முயன்றதை அடுத்து மனநல மருத்துவரிடம் அழைத்துப் போகிறார். டாப்சி மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயல்கிறார். இரண்டு கால்களும் உடைந்து உயிர் தப்புகிறார்.

டாப்சியைச் சந்திக்க, இறந்து போன அமுதாவின் அம்மா ரீனா வருகிறார். புற்றுநோயை எதிர்த்துப் போராடிய தன் மகள் அமுதா ஒரு போராளி, அவள் உனக்கு தைரியமளிப்பாள் என ஆறுதல் சொல்கிறார். அதன் பின் டேட்டூவை அழிக்கும் எண்ணத்தைக் கைவிடும் டாப்சி, ஒரு வருடமாகப் பார்க்காத தன் பெற்றோரையும் பார்க்கச் சம்மதிக்கிறார்.

அன்றிரவு, அதாவது 31 டிசம்பர் 2018 அன்று, இரவு 11 மணிக்கு திடுக்கிட்டு விழிக்கிறார். அமுதாவின் கையில் இருப்பது போல் மூன்று டேட்டூ அவர் கையில் தோன்றுகிறது. அமுதாவையும், மற்ற பல இளம்பெண்களையும் கொன்ற கொலைகாரர்கள் டாப்சியின் வீட்டிற்குள் நுழைகிறார்கள். இரண்டு கால்களும் உடைந்திருக்கும் டாப்சி எப்படி அந்த ஆபத்தில் இருந்து தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இது ஒரு கதாநாயகி படம். நண்பனாலேயே பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, ஒரு வருட காலமாக மன அழுத்தத்தில் தவிக்கும் சுவப்னா பாத்திரத்தைத் திறம்பட ஏற்று உயிர் கொடுத்துள்ளார் டாப்சி. அமுதா, எப்படி புற்றுநோயை எதிர்கொண்டு வாழ்க்கையைக் கொண்டாடினார் எனத் தெரிந்ததும், தன் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு , வினோதினியிடம் தன் மாற்றத்தைக் காட்டும் இடம் மிக அற்புதமாக உள்ளது. டாப்சி, தமிழில் இன்னும் இது போன்ற நிறைய படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கவேண்டும்.

வினோதினி, டாப்சியுடனே படம் முழுவதும் பயணித்தாலும், ஒரே ஒரு காட்சியில் வரும் மலையாள நடிகை T.பார்வதி மனதில் நிற்கிறார். தன் மகளைப் பற்றிச் சொல்லி, டாப்சிக்கு தைரியம் அளிக்கும் அவரது கனிவான பேச்சு ரசிக்க வைக்கிறது. அவரது மகள் அமுதாவாக நடித்திருக்கும் சஞ்சனா நடராஜனும் மிக நிறைவாக நடித்துள்ளார். தான் மட்டும் டேட்டூ போட்டுக் கொள்ளாமல், அந்தச் சுதந்திர உணர்வைத் தன் அம்மாவிற்கும் கடத்தவேண்டும் என்ற அக்கறையைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

கதை ஒரு வீட்டுக்குள் தான் பெரும்பாலும் நடக்கிறது. அது ஒரு குறையாக இல்லாமல் ஒளிப்பதிவாளர் A.வசந்த் மிக அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ரான் ஈதன் யோஹனின் பின்னணி இசை, காட்சிகளுக்கு ஏற்றவாறு, சூழ்நிலையின் தீவிரத்தை உணர்த்துவதோடு மட்டுமல்லாமல், கதாபாத்திரங்களின் மனப்போக்கையும் அருமையாகப் பிரதிபலிக்கிறது. 105 நிமிடங்களில் படத்தை அழகாக வெட்டி நேர்த்தியாகக் கொண்டு வந்துள்ளார் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.

மாயா படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார். அவருக்குத் திரைக்கதையில் உதவியாகச் செயல்பட்டுள்ளார் காவ்யா ராம்குமார். அவர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே ஆணின் பார்வையாலான பெண்ணுலகமாக இல்லாமல், டாப்சியின் உளவியல் பிரச்சனைகளை மிக அழகாகத் திரையில் கொண்ட வர உதவியுள்ளார். அவருக்கு நம் வாழ்த்துகள்.

நேரடியாகக் கதையைத் தொடங்கி, தெளிவாகப் படத்தை முடித்திருந்தாலும், க்ளைமேக்ஸ்க்கு முன்பான காட்சிகளில் ஒரு புதுமையைக் கையாண்டுள்ளார். கேம் டெவலப்பரான டாப்சிக்கு, ஒரு கேமை உருவாக்க டேஜா வூ (Déjà vu)-வை ஒரு முக்கிய செக் பாயின்ட்டாக வைத்துள்ளார். அதையும், அமானுஷ்யமாக மூன்று டேட்டூ கையில் உருவாவதையும் இணைத்து, ரசிகர்களின் புரிதலுக்கேற்ப க்ளைமேக்ஸிற்கு முந்தைய காட்சிகளை ரசிகர்களின் யூகத்திற்கே விட்டுவிடுவது சிறப்பு. பார்வையாளர்களின் ரசனையைக் குறைத்து மதிப்பிடாத இயக்குநருக்கு வாழ்த்துகள்.! என்றாலும் பார்வையாளர்களில் சிலர், எதையும் இயக்குநர் சரியாகச் சொல்லவில்லை என்று புரியாமல் குழும்பியதையும் பார்க்க முடிந்தது.

வித்தியாசமான படத்தைத் திரையில் அனுபவிக்க வேண்டும் என நினைப்பவர்கள், கட்டாயம் ஒருமுறை பார்க்கவேண்டிய படம்.

Our Score