‘மாயா’, ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஷ்வின் சரவணன். இப்போது அவருடைய பெயரைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் இன்ஸ்ட்கிராமில் அஷ்வின் மாயா என்ற பெயரில் போலி அக்கவுண்ட்டை உருவாக்கி அதன் மூலமாக நடிகைகளைத் தேர்வு செய்ய பேசி வருவதாக புகார் சொல்லியுள்ளார்.
இது குறித்து இயக்குநர் அஷ்வின் சரவணன் சொல்லும்போது, “எனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை AshwinMaaya என்ற பெயரில் ஒருவர் துவக்கியிருக்கிறார்.

‘மாயா’ திரைப்படத்தின் இயக்குநர் தாம்தான் என்றும், தற்போது நடிகர் அதர்வா நடிக்கும் படமொன்றை இயக்கி வருவதாகவும், இந்தப் படத்துக்கான கதாநாயகிக்கான தேடுதல் நடந்து வருவதாகவும், இது தொடர்பாக பல்வேறு நடிகைகளுக்கு தகவல்கள் அனுப்பி வருவதாக எனது திரையுலக நண்பர்கள் அனுப்பிய ஸ்கிரீன் ஷாட்டுகள் மூலம் அறிந்தேன்.
நடிகை ஒருவர் அவருக்கு பதில் அனுப்பிய போது, ‘அஷ்வின் மாயா’ இன்ஸ்டாகிராம் பக்கத்தை இயக்கி வரும் அந்த நபர் தனது கைபேசி எண்ணை (9952116844) கொடுத்ததாகவும், திரைப்பட வாய்ப்புக்காக ‘தவறிழைக்க’ அழைத்ததாகவும் தெரிய வருகிறது.

எனக்கும், மேற்கண்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் கைபேசி எண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது எந்தவிதமான நடிகர் / நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்விலும் நான் ஈடுபட்டிருக்கவில்லை. எனவே, இத்தகைய நபர்களிடம் உரையாடலை தொடங்கும் முன் அவர்கள் பின்னணி குறித்து தீர ஆராயுமாறு அனைத்து நடிகர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய திரைப்படங்களுக்காக எதிர்காலத்தில் நடிகர் / நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேடுதலில் நான் ஈடுபட்டால், அவர்களை முறையாக என்னுடைய குழுவோ அல்லது தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்களோ அணுகுவார்கள்.
மேற்கண்ட நபர் குறித்து காவல் துறையில் புகார் அளிக்க இருக்கிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.