full screen background image

சுட்டுப்பிடிக்க உத்தரவு – சினிமா விமர்சனம்

சுட்டுப்பிடிக்க உத்தரவு – சினிமா விமர்சனம்

கல்பதரு பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் P.K. ராம் மோகன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அதுல்யா ரவி, மஹிமா, ரித்தீஷ், பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சுஜித் சாரங், இசை – ஜேக்ஸ் பிஜாய், படத் தொகுப்பு – G. ராமாராவ், சண்டை இயக்கம் – தினேஷ் காசி, கலை இயக்குநர் – A.வனராஜ், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, இயக்கம் – ராம்பிரகாஷ் ராயப்பா, தயாரிப்பாளர் – P.K.ராம்மோகன், தயாரிப்பு நிறுவனம் – கல்பதரு பிக்சர்ஸ்.

கோவையில் ஓர் அடுக்குமாடி வளாகத்தில் உள்ள ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கின்றனர் அசோக் என்னும் விக்ராந்த், செல்வா என்னும் சுசீந்திரன், தினேஷ் காசி மற்றும் அவரது கூட்டாளி ஒருவர். கொள்ளைச் சம்பவத்தைப் பற்றி அறிய வந்ததும், காவல்துறை ஆணையர் இப்ராஹிம் என்னும் மிஷ்கின் துரிதமாகச் செயல்பட்டு கொள்ளை நடக்கும் இடத்திற்கு வந்து சேருகிறார். கொள்ளையர்கள் அடுக்குமாடியின் மேல் தளத்தில் இருந்து இறங்கி பார்க்கிங்கிற்கு வந்து காரை எடுக்கும் முன், காவல்துறையினர் கொள்ளையர்களின் காரை நான்கு புறமும் சூழ்ந்து விடுகின்றனர்.

மிஷ்கின் முதல் அனைத்துக் காவல்துறையினரும் கொள்ளையர்களை நோக்கிச் சராமரியாகச் சுடுகின்றனர். குண்டுகளில் இருந்து தப்புவதோடு மட்டுமல்லாமல், ஆணையரான மிஷ்கினின் இடது கையையும் உடைத்து விடுகிறார் விக்ராந்த். ஒரு கொள்ளையனை மட்டும் மிஷ்கின் முதுகில் சுட்டுக் கொன்று விட, மற்ற மூவரும் காரில் ஏறித் தப்பிக்கின்றனர். R.S.புரத்திற்குள் நுழையும் கார் விபத்தில் கவிழ்கிறது. கையில் இயந்திரத் துப்பாக்கியுடன் இறங்கி ஓடுகின்றனர் கொள்ளையர்கள்.

அவர்கள் R.S.புரத்தில் இருந்து வெளியேறாமல் தடுத்துப் பிடிக்க, அந்த ஏரியாக்குள் செல்லும் ஏழு பாதைகளையும் மூடி விடுகின்றனர் காவல்துறையினர். இதனால் பொதுமக்களால் உள்ளேயேயும் செல்லமுடியாமல், வெளியேவும் வரமுடியாமல், அவர்களது இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. கமாண்டோ பிரிவை வர வைத்து, கொள்ளையர்களைக் கண்டதும் சுட்டுக் கொல்லஉத்தரவிடுகிறார் மிஷ்கின்.

மிஷ்கினின் அதிரடி ஆப்ரேஷன் வென்றதா, குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்தனரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அசோக் என்னும் கொள்ளையனாக விக்ராந்த் நடித்துள்ளார். அவருக்கும் சுசீந்திரனுக்கும் படம் முழுவதுமே ஓடிக் கொண்டேயிருக்கும் வேலைதான். விக்ராந்தாவது, இடையிடையில் தன் மகள் ஸ்மிட்டு என்னும் பேபி மானஸ்வியைப் பற்றி நினைப்பதும், அவளிடம் பேசுவது எனக் காட்சிகள் வருகின்றன. சுசீந்திரனுக்கோ, ஓடுவதும், இயந்திரத் துப்பாக்கியால் காவல்துறையினரையும், பொதுமக்களையும் சுடுவதுமட்டுமே வேலை. நடிகராக சுசீந்திரனுக்கு இது முதற்படம் என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையர்களில் ஒருவராக, சண்டை இயக்குநர் தினேஷ் காசியே நடித்துள்ளார். விறுவிறுப்பான சேஸிங் காட்சிகளுக்கு உத்திரவாதம் அளித்துள்ளார் தினேஷ் காசி.

மிஷ்கின் தனக்கே உரிய பாவனையில் மிரட்டலாகச் செயல்படுகிறார். கை உடைந்த மிஷ்கின், ‘நடக்கலாமா கூடாதா?’ என மருத்துவரிடம் கேட்டுவிட்டு, அவர் நடக்கக்கூடாது என மறுத்ததும், வேகமாக முரட்டுத் தோரணையில் அவர் நடக்கத் தொடங்கும்பொழுது திரையரங்கில் பலத்த சிரிப்பொலி எழுகிறது. அவரது நேரடி மேலதிகாரியான ஏ.டி.ஜி.பி.யை மதிக்காமல், எதுவாக இருந்தாலும் டி.ஜி.பி.யிடமே பேசித் திட்டமிட்டுக் கொள்கிறார். ஆணையர் பாத்திரம் அவருக்குப் பொருந்தாவிட்டாலும், தனது உருட்டலான பார்வையின் மூலமே அந்தப் பாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துவிடுகிறார்.

படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மருத்துவமனையில் உள்ள விக்ராந்தின் மகள் மானஸ்வியைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளும் பக்கத்துவீட்டுப் பெண் தமிழ்ச்செல்வியாக மஹிமா நடித்துள்ளார். இவர் விஜ ஆண்டனியின் அண்ணாதுரை படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருப்பார். இப்படத்திலும் இவருக்குக் காட்சிகள் மிகக் கம்மியாகவே உள்ளன. மற்றொரு நாயகியான அதுல்யா ரவி, R.S.புரத்துவாசி புவனாவாக நடித்துள்ளார். மீடியா அனுமதிக்கப்படாத R.S.புரத்துக்குள், மொபைல் ஃபோனில் வீடியோ எடுத்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்யும் உடனடி பத்திரிகையாளராக மாறுகிறார். இதை எதிர்பார்க்காத மிஷ்கின், ‘ஒரு மீடியாகாரனைச் சுட்டா தான் அவங்களுக்குப் புத்தி வரும்’ என சக காவலர்களிடம் உறுமுகிறார். காவல்துறையினரின் அராஜகத்தை மக்களுக்குச் செய்தியாகத் தருவது அவ்வளவு பெரிய குற்றமா இயக்குநரே?

இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பாவிற்கு இது மூன்றாவது படம். இந்த திருடன் – போலீஸ் ஓட்டத்தை எதிர்பாராத ட்விஸ்ட்டில் முடித்து க்ளைமேக்ஸில் அசத்துகிறார். ஆனால் அடுக்குமாடி வளாகத்தில் வங்கி இருப்பதாகக் காட்டியிருப்பதால், தொடக்கத்திலேயே படத்தின் மேல் ஓர் அந்நியத்தன்மை வந்துவிடுகிறது. சுட்டுத்தான் பிடிக்கவேண்டும் என்ற மிஷ்கினின் தீவிரத்தையும் ரசிக்க முடியவில்லை. அதற்கான நியாயத்தைப் படத்தின் கடைசியில் இயக்குநர் சொல்லிவிட்டாலும், காவல்துறை மீதான அவநம்பிக்கையும், கையாலாகாதத்தன்மையும்தான் பார்வையாளர்களுக்குப் படம் பார்க்கும்போது எழுகிறது.

இப்படி, ஓடிக் கொண்டே இருக்கும் ஒரு பரபரப்பான படத்தை எடுக்க அசாத்திய திட்டமிடுதலும், உழைப்பும் அவசியமாகிறது. படம் பார்க்கும் பொழுது இயக்குநரின் திட்டமிடலும், தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் திரையில் தெரிகிறது. அவ்வகையில் இயக்குநர் சாதித்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.

Our Score